Sunday, November 2, 2008

நாமம் சொன்ன நாத்திகன்

வடபுலத்தில் கோஸ்வாமி துளஸீதாஸர் மக்களை ஸ்ரீ ராம குண ஸாகரத்தில் மூழ்கடித்துக்கொண்டிருந்த காலம். முகமதியர்களின் கோரப்பிடியிலிருந்து தப்பிய ஸநாதந தர்மம் மூச்சுவிடத் தொடங்கிய நேரம். முதிய வயதில், தளர்ந்த மேனியுடன் கோஸ்வாமி ஸ்ரீ ராமநாம மஹிமையை இடையறாமல் வெளிப்படுத்திய வண்ணம் இருந்தார்.
‘சந்தா’ என்றொரு இறை மறுப்பாளன்; இளமைப் பருவமும், குன்றாத செல்வமும் அவனிடம் முரட்டுத் தன்மையையே வளர்த்து விட்டிருந்தன. பொலி காளை போல் சுற்றித்திரிவதும், அடியார்களை வம்புக்கிழுப்பதும் அவனது அன்றாடப்
பணிகள்.
கோஸ்வாமியின் குடிலுக்குள்ளும் நுழைவான். அவரைப்போல் பகடி செய்வான்; ’சாமி, ஏன் முகவாட்டத்துடன் இருக்கிறது?
பணக்கார ஸேட் யாரும் சிக்கவில்லையா?’ என்று கூசாமல் வினவுவான். அடியார் குழாம் முகம் சுளிப்பதைச் சட்டை செய்ய மாட்டான். ’கோசாயி, என் வாயிலிருந்து ஈரெழுத்து மந்திரத்தை வரவழைக்க முடியுமா உம்மால் ?’ என்று சவால் விடுவான்.
’ ஊர், உலகத்தை கோசாயி ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். நீங்கள் அவன் பின்னால் போகிறீர்கள். எத்தனை முறை நான் அங்கு சென்றிருப்பேன்! என் வாயிலிருந்து நாமத்தை வரவழைக்க முடிந்ததா அவனால்?’ என்று மக்களிடம் தன் பெருமையைப் பறைசாற்றிக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டிருந்தான் சந்தா.
நாட்கள் நகர்ந்தன. ஒரு வதந்தி பரவியது. கோஸ்வாமிஜீ சந்தாமீது ஒரு தோஹா எழுதியுள்ளார்! ’ உண்மையாக இருக்குமா?’ வியந்தனர் சிலர். ’தாஸர் சந்தாவிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டாரா ?’ வெறுத்தனர் சிலர்; மறுத்தனர்
பலர். ’மானுடம் பாடியறியாத தாஸருக்கு இந்த வயதில் ஏனிந்த வேலை ?’ விலகினர் ஒரு சிலர். ‘அவர் சொல்வதை நானே கேட்டேன்’ உறுதி செய்தனர் ஒரு சிலர்.
செய்தி சந்தாவின் செவிகளுக்கு எட்டியது. முதலில் அவனும் நம்பவில்லை. ஆயினும் ஆர்வம் தலை தூக்கியது. புகழ் தரும் போதை யாரை விட்டது? உலகம் புகழும் ஒரு மனிதரிடம் பாடல் பெறுவது அத்தனை எளிதா என்ன? ‘எனக்கு ஈடுகொடுக்க இயலாத கோசாயி என்னைத் தாஜா செய்யவே என் மீது ஒரு பாடல் புனைந்துள்ளான்’ என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிட்டான் சந்தா. வெகு இயல்பாகக் குடிலுக்குள் நுழைந்தான். நேரடியாக அவரிடமே கேட்டுவிட்டான்.
‘ஆம், சந்தா. உண்மை தான். ஒரு சிறிய தோஹாதான். உனக்கு நம்பிக்கை இல்லையா ? நானும் நீயும் நெடுநாளைய நண்பர்கள்; ஊராருக்குப் பொறாமை. அவர்கள் ஏதேனும் சொல்லிவிட்டுப் போகட்டும். என் தோஹாவை நீ ஏற்பாயா ? அதற்கு விடை கூறு’ என்றார் கோஸ்வாமி.
‘சொல்லுங்களேன், கேட்போம்’ என்றான் சந்தா.
‘போலா சந்தா பேசாரா ! மந்தா சல்தா நிவிசாரா !!’
(முதல் வரியின் கடையெழுத்து ”ரா’, தொடர்ந்து வருவது “ம”)
எத்தனை எளிய தோஹா ! ஆயினும் பிறர் பாடக்கேட்கத் தலை கிறுகிறுக்கிறதே !
‘சரி, சாமி; வருகிறேன்’ அவ்விடத்தை விட்டகன்றான் சந்தா.
அன்று முதல் எதிர்ப்பட்டோரிடமெல்லாம் இப்பாடலைப் பாடிக்கொண்டு திரிந்தான்; கங்கைக்கரையில் தனியே உலவியபடிதோஹாவைப் பாடுவதில் சுகம் காணத்தொடங்கினான். ‘மரா’ என்று மாற்றிச் சொன்னதே மாற்றத்தை ஏற்படுத்திவிட்டபோது முறையாக உச்சரித்துவரும் சந்தாவைத் தாரக நாமம் மாற்றாதா என்ன? அதுவும் புனிதம் மிக்க கங்கா தீரத்தில் !
பண்டிதர்கள் தாஸரின் திறமையை அவனுக்கு வெகு நாட்களுக்குப்பின் உணர்த்தினர். அவனது செருக்கு அகன்றது. தாஸரின் திறமையும், பொறுமையும் முடிவில் அவனை ஆட்கொண்டன.
சந்தா நாமம் சொல்லிக் கடைதேறினான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? இந்நிகழ்ச்சி நடைபெற்றது 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்.

Saturday, July 26, 2008

திவ்யகவி கூறும் திவ்யநாம வைபவம்

திருவரங்கக் கலம்பகத்தின் ஒரு பாடல் -
உயிர் எழுத்துகளின் வரிசையில் அமைந்துள்ள இப்பாடல் பெருமானுடைய (பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சை ஆகிய) ஐந்து நிலைகளையும் விளக்குவதாகவும் திகழ்கிறது. எளிய மொழி அமைப்பும், பொருட்செறிவும் அனைவர் மனத்தையும் கவர்வதாக உள்ளது.

(நேரிசை ஆசிரியப்பா)

‘அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை
ஆலிமா முகிலை வாலி காலனை
இந்த ளூருறை எந்தைபெம் மானை
ஈசன் நான்முகன் வாசவன் தலைவனை
உள்ளுவார் உள்ளத் துள்ளுறை சோதியை
ஊரகம் நின்றருள் நீரகத் தடிகளை
எவ்வுள் மாயனைத் தெய்வநா யகனை
ஏர்மலி சிகரத்து நீர்மலை ஆதியை
ஐவாய் அரவில் அறிதுயில் அமலனை
ஒருகால் மொழியினும் ஒழிகுவை நெஞ்சே !
ஓதநீர் ஞாலத் துழலும்
ஔவியப் பிறப்பில் அழுந்தி வாடுவதே.’

Wednesday, July 23, 2008

அச்சுதனும், அம்பிகையும்

நம் இதிஹாஸ - புராணங்கள், ஆலயங்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போது விஷ்ணுவிற்கும், அம்பாளுக்கும் இடையேயான பல அரிய ஒற்றுமைகள் தெரிய வருகின்றன.

ஒன்று மிக நெருங்கிய உறவு -
அவன் அண்ணன்; இவள் தங்கை.
இருவர்தம் நிறமும் ஒன்றே; இருவரும் சியாம வண்ணம் படைத்தவர்களே.
சங்கும், சக்கரமும் விஷ்ணுவிற்கும், விஷ்ணு துர்கைக்கும் பொதுவான ஆயுதங்கள். ’திகிரியக்கொற்றவை’ என்பது துர்கையைக் குறிக்கும் தமிழ்ப்பெயர். ( திகிரி - சக்கரம்;அடியார்க்கு நல்லாரின் தொல்காப்பிய உரை)
அவன் விஷ்ணு; இவள் விஷ்ணு மாயை.

அணி மணிகள் அணிவதிலும் இருவருக்கும் போட்டி.

அச்சுதனுடைய நீண்ட நெடிய நயனங்களை உபநிஷத்தும், இதிஹாஸங்களும் வாய் கொள்ளாமல் வர்ணிக்கின்றன.
ஸ்ரீ ராமாயணத்தில் ஸ்ரீ ராமன் விசாலாக்ஷன் எனும் அடைமொழியோடு சுட்டப்படுவதைப் பல இடங்களிலும் காண்கிறோம்.
தேவிக்கும் மீனாக்ஷி, காமாக்ஷி, விசாலாக்ஷி , நீலாயதாக்ஷி போன்ற பல நாமங்கள்.

சுருண்ட கூந்தல் இருவருக்குமே உண்டு.
கண்ணபிரானது திருக்குழற் கற்றையை வர்ணிக்கும் ’குடில குந்தளம்.....’என்னும் சுலோகம் ஒரு பழைய திரைப்படத்தில்
இடம் பெற்றது; ’ஸுகந்த குந்தளாம்பிகை’ என்பது அம்பிகையின் திரு நாமம்.

இருவரும் மன்னர் குலங்களில் அவதரித்தவர்களே.
ஸ்ரீ ராமன் தசரதரின் புத்ர காமேஷ்டியின் பயன் என்றால், தேவி மலயத்வஜ மன்னனின் வேள்வியில் தோன்றியவள்.
அடர்ந்த வனங்களில் மறை முனிவர்கள்தம் குடில்களில் அவதரிக்கவும் இவர்கள் தயங்கியதில்லை.
மாலவன் தத்த ஆத்ரேயனாகவும், கபில வாஸுதேவனாகவும், வாமன மூர்த்தியாகவும், பரசுராமனாகவும் தோன்றினான்.
அம்பிகை மாதங்கியாகவும், காத்யாயனியாகவும் தோன்றினாள்.

அண்ணனுக்கு ஆவணியில் ‘ஜன்மாஷ்டமி’ ;
தங்கைக்குப் புரட்டாசியில் ‘துர்காஷ்டமி’.
கண்ணனை பாலக்ருஷ்ணனாக வழிபடுவதில் சுவை அதிகம்; அம்பிகையையும் பாலையாக வழிபடும் நெறி சாக்தத்தில் நிலவி வருகிறது.
(வாலை வழிபாட்டைத் திருமந்திரத்திலும் காணலாம்)

அஸுர ஸம்ஹாரத்திலும் இவர்கள் ஈடு இணையற்றவர்கள்.

இவள் கதம்ப வன வாஸினி ; அவன் மது வனத்தில் கதம்பமர நிழலில் லீலைகள் புரிந்தவன்.

அச்சுதன் கோலோச்சுமிடம் ‘சுவேத த்வீபம்’;
அம்பிகை கொலுவிருக்குமிடம் ‘மணி த்வீபம்’.

அவன் உத்தரையின் கர்பத்திலிருந்த சிசுவை காத்தான்;
இவளோ கர்ப ரக்ஷாம்பிகையாக அனு தினமும் பல்லாயிரம் சிசுக்களைக் காத்து வருகிறாள்.

அறத்தை நிலைநாட்ட யுகம்தோறும் அவதரிப்பவன் அண்ணன்; அறம் வளர்த்த நாயகியாக ஐயாற்றில் விளங்குபவள் தங்கை.
ஒன்று ‘தர்ம ஸம்ஸ்தாபநம்’; மற்றது ‘தர்ம ஸம்வர்தநம்’.

அவன் கோபாலன் என்றால், இவள் கோமதி.
அவன் கோவிந்தன் என்றால், இவள் கோவிந்த ரூபிணி.

இவளுடைய காதணி தாடங்கம் என்றால், அவனுக்கு மகர குண்டலம். இரண்டுமே புகழ் பெற்றவை.

அவன் வடவேங்கடத்தில் தொடை மீது கரம் வைத்து, உரூ ஹஸ்தனாக நிற்கிறான்;
இவளும் தென் குமரியில் அதே கோலத்தில் காட்சி தருகிறாள்.

கடவுளர் பலருக்கும் ஸஹஸ்ர நாமங்கள் இருப்பினும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமமும், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமமும் தொன்றுதொட்டு இன்றுவரை ஆன்மிக உலகில் தனியிடம் பெற்றுத் திகழ்கின்றன.

‘மங்களாநாம் ச மங்களம்’ என மங்கலம் தருவனவற்றுள் எல்லாம் தலை சிறந்தவனாக மாலவன் போற்றப்படுகிறான்;
அம்பிகையோ ‘ஸர்வ மங்களா’.
இவர்கள் இருவரும் தீயன களைந்து உலகின் துயர் தீர்ப்பார்களாக !!

Thursday, July 17, 2008

உள்ளது ஒன்றே

ஈச்வரன், அவனது படைப்பு, அக்கூண்டினுள் அடைபட்ட ஜீவன் அனைத்தையும் தம் ஆத்ம த்ருஷ்டியால் ஒன்றாகவே உணர்ந்த ‘வாமதேவர்’ கண்டறிந்த மந்த்ரங்கள் ரிக் வேதம் நான்காம் மண்டலத்தில் காணப்படுகின்றன. இவ்வாறே பத்தாம் மண்டலத்தில் வாகம்ப்ருணியின் ஒரு ஸூக்தமும் உள்ளது.
வேத மந்த்ரங்கள் ஆத்ம த்ருஷ்டியோடு உலகனைத்தையும் பார்ப்பதையே வலியுறுத்துகின்றன. அதனால் ஒருவன் விருப்பு வெறுப்புகளின் சுவடேயற்ற ஸுதா த்ருஷ்டியைப் பெறுகிறான்.
அதன் பயனாகத் தனக்குக் கிடைப்பதை எல்லாம்- நல்லதோ, தீயதோ - இன்முகத்துடன் ப்ரஸாத புத்தியுடன் ஏற்றுக்கொள்கிறான்.
ஸத்குரு ஸ்ரீ த்யாகய்யாவின் பாடல்களில் இந்தப் பண்பட்ட மனப்பான்மையைப் பார்க்கலாம்.

ஒரு ஸூக்தம் -
‘ந ம்ருத்யுரம்ருதம் தர்ஹி ந ந
ராத்ர்யா அஹ்ந ஆஸீத் ப்ரகேத: !
ஆநீதவாதம் ஸ்வதயா ததேகம்
யஸ்மாத்தாந்யந்ந பர:கிம் சாநஸ !!

“அப்போது மரணமும் இல்லை; மரணமின்மையும் இல்லை. இரவு, பகல் என்னும் பிரிவுகளும் இல்லை. ப்ராணனின் துணையின்றி ‘ஸ்வதா’வினால் மட்டுமே உயிர் வாழ்ந்தது. அதனினும் பிரிதொன்று அங்கு காணப்படவில்லை.”
ஸ்வ + தா – தன்னைத்தான் தரித்து வாழ்தல்.

இதையே ‘ஸஹஜ அவஸ்த்தை’ என்பர்.
மறை கண்ட முனிவர்கள் இதிலேயே லயித்து வாழ்ந்தனர். தம் பார்வையில் பட்ட நீர், நெருப்பு, ஓஷதிகள், ஸூர்யன் போன்றவற்றை ஆத்ம த்ருஷ்டியுடனேயே துதித்தனர்; அவ்வாறு துதிக்கையில் அதை அதை உயர்ந்ததாகப் போற்றினர். இதில் குழப்பம் ஏதுமில்லை. ஆத்மாவைக் காட்டிலும் உயர்ந்தது ஒன்று இல்லையே!

‘யஸ்மிந்ஸர்வாணி பூதாநி ஆத்மைவாபூத்விஜாநத:!
தத்ர கோ மோஹ: க: சோக: ஏகத்வமநுபச்யத:!!’
(சுக்ல யஜுர்வேதம்)
‘ஒன்றாகக் காண்பதுவே காட்சி’ - ‘ஏகத்வம் அநுபச்யத:’

ஒரு கால் அவர்கள் காம- க்ரோதங்களுக்கு இடம் தந்ததாகக் காணப்பட்டாலும் அதனால் உலகிற்கு நன்மையே விளைந்தது.

(குறிப்பு) புனலையும், அனலையும் கண்டு வேத காலத்து நாகரிகமற்ற மக்கள் அஞ்சினர்; அவர்தம் பொருளற்ற புலம்பலே வேத ஸம்ஹிதைகள் என்று பல வலைப்பதிவு வாசஸ்பதிகள் எழுதியதைக் கண்டு, ஆன்றோர் கூறியபடி உட்கருத்தை வெளியிட்டேன்.
அனலும், புனலும் அச்சம் தரலாம்; புலர் காலைப்பொழுதும், பயிர்-பச்சைகளும் அச்சம் தருமா? உஷ:காலத்தை வர்ணிக்கும் ஸூக்தங்களும், ஓஷதிகளை வழிபடும் ரிக்குகளும் உணர்த்தும் பொருள் யாது?
உண்மையில் அச்சம் நீங்கிய அபய நிலையில் தோன்றிய, ஆன்மிகம் தோய்ந்த மொழிகளின் தொகுதியே வேத ஸம்ஹிதைகள்.

Wednesday, July 9, 2008

‘திவ்யம்’

பகவானுடைய திரு நாமம் ‘திவ்ய நாமம்’
அவனது திருமேனி ‘திவ்ய மங்கள விக்ரஹம்’
அவன் தாங்கிய படைக்கலங்கள் ‘திவ்ய ஆயுதங்கள்’
அவன் எழுந்தருளியுள்ள தலம் ‘ திவ்ய தேசம்’
அவனுடைய மெய்யடியவர்களான ஆழ்வார்கள்
‘திவ்ய ஸூரிகள்’
அவர்கள் அருளிய பைந்தமிழ்ப் பனுவல்கள்
‘திவ்ய ப்ரபந்தங்கள்’
மண்ணவர் முடிவில் எய்த வேண்டிய இடம்
‘திவ்ய தாமம்’ எனும் ஸ்ரீ வைகுண்டம்

Monday, July 7, 2008

ஒரு சிலேடை ..........

ஓர் உண்மையான குரு சீடர்களைச் சேர்த்துக்கொள்ளத் தயங்குவான்.
ஏன்?
“சிஷ்ய பாபம் குரும் வ்ரஜேத்.....”
சீடன் செய்யும் பாவங்கள் குருவையே சேரும்.
அவன் மனத் தூய்மையும், தகுதியும் வாய்ந்த சீடனையே சேர்த்துக் கொள்வான்.
குரு ஒருவனுக்குப் பொறுப்புகள் மிகுதி.
குரு என்பவன் சீடனின் ஆன்மிகத் தேட்டத்திற்குப் பொறுப்பேற்று, அவன் உள்ளத்தின் தாபங்களை நீக்கி, அவனுக்கு உய்வு தந்தாக வேண்டும்.

குறி சொல்லிக் கூட்டம் சேர்க்கும் குரு பணமும், பதவியும் வாய்ந்த சீடர்களைத் திரட்டிக் கொண்டு ஆன்மிகம் என்னும் பெயரில் மோசடிகள் செய்து மாட்டிக்கொள்வான்.

இந்த இரு வகையான குருமார்களையும் குறிக்கும் ஒரே வடமொழிச் சொல் –
“சிஷ்யவித்தாபஹாரீ”
”சிஷ்யவித் தாபஹாரீ” – இது ‘ உயர்ந்த சீடனின் தாபத்தை நீக்குபவன்’ எனும் பொருளைத் தருகிறது.
”சிஷ்ய வித்த அபஹாரீ” – இது ‘சீடனின் பணத்தைக் கவர்பவன்’எனும் பொருளைத் தருவதாகிறது.
(வித்தம்-செல்வம்)

Sunday, July 6, 2008

திவ்ய கவியின் திவ்யமான கவிதை .......

”முருகனுறை குறிஞ்சித்தேன் முல்லை பாய
முல்லைநிலத் தயிர்பால்நெய் மருதத் தோட
மருதநிலக் கொழும்பாகு நெய்தற் றேங்க
வருபுனற்கா விரிசூழ்ந்த வளத்தைப் பாடக்
‘கருமணியே! மரகதமே! முத்தே! பொன்னே!
கண்மணியே! ஆருயிரே! கனியே! தேனே!’
அருள்புரிவாய்!’ என்றவர்தம் அகத்துள் வைகும்
அணியரங்க மாளிகையார் ஆடிர் ஊசல்.”

அரங்கன் ஊஞ்சல் ஆடுகிறான். காவிரி அவன் காதருகே சென்று நாட்டின் வளம் கூறுகிறாள். எப்படி?
முருகனைத் தலைவனாகக் கொண்ட குறிஞ்சி (மலை சார்ந்த) நிலத்திலிருந்து பெருகும் தேன் முல்லை நிலத்தில் பாய்கிறதாம். முல்லை (காடுசார்ந்த) நிலத்திலிருந்து ஆநிரைகளின் மிகுதியால் பாலும், நெய்யும் பெருகி மருத நிலத்தில் பாய்கிறதாம். மருத (வயல் சார்ந்த) நிலத்தில், தேன், பால், தயிர், நெய் இவற்றால் ஊட்டம் பெற்ற கரும்பிலிருந்து சாறு பிழிகிறார்கள். அதன் மிகுதி (கடல் சார்ந்த) நெய்தல் நிலத்தில் பாய்ந்து பெருகுகிறது.
அடியவர்தம் மனத்துறையும் அரங்கன் செய்தி அனைத்தையும் செவி மடுத்தவாறே ஆடுகிறான்.

இக்கவிதையைச் சற்று ஆழ்ந்து நோக்கினால் அருமையான நயம் ஒன்று புலப்படும். அந்த நயம் என்னவென்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

Thursday, July 3, 2008

ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அருளியவை.......

ஆங்கிலப் புலமை பெற்ற ஒருவன் அம்மொழியின் 26 எழுத்துக்களைக் கொண்டு பெரிய பெரிய நூல்களை எழுதுவது போல, ஆண்டவன் 24
தத்துவங்களைக் கொண்டு பேரண்டங்களைப் படைக்கிறான்.

கர்மத்திற்கு முக்கியம் உடல் தூய்மை; ஞானத்திற்கு முக்கியம் வைராக்யம்; பக்திக்கு முக்கியம் பிரேமை; ப்ரபத்திக்கு முக்கியம் மஹா விச்வாஸம்.

சிலேடைச் சுரங்கம்

சிலேடை என்பது ‘ச்லேஷை’ எனும் வடமொழிக் கவி மரபை ஒட்டியது. 15 ம் நூற்றாண்டுக்குப்பின் தமிழ்ப் புலவர்களும் இவ்வகையைப் பின்பற்றத் தொடங்கினர்.காளமேகப் புலவரும் பல சிலேடைப் பாக்கள் புனைந்துள்ளார்.

ஏராளமான சிலேடைகளைத் தன்னகத்தே கொண்ட நூல்களின் வரிசையில் மிக முக்கியமான இடத்தைப் பிடிப்பது ‘பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்’ எழுதிய ‘திருவேங்கடத்து அந்தாதி’. இது படிப்பவர்களை பிரமிக்கச் செய்யும் அபாரமான சாதனை.

வகையாலும் ,இலக்கணத்தாலும் இரண்டு கட்டுப்பாடுகளைக் கொண்டது இந்நூல். அந்தாதி என்பதால் ஒரு செய்யுளின் கடைசிச் சீர் அடுத்த செய்யுளின் முதல் சீராக வரவேண்டும்; இது ஒரு கட்டுப்பாடு.

இலக்கண வகைப்படி கட்டளைக் கலித்துறை சார்ந்த புனைவு என்பதால், ஓர் அடி நேரசையில் தொடங்கினால் பதினாறு, நிரையசையில் தொடங்கினால் பதினேழு என ஒற்றெழுத்து நீங்கலான எழுத்துகளின் எண்ணிக்கை மாறுபடாமல் அமைய வேண்டும். இந்த இரு கட்டுப்பாடுகளைத் தவிர மூன்றாவது கட்டுப்பாட்டைத் தாமே விதித்துக் கொள்கிறார், அந்த மாபெரும் புலவர்.

ஒவ்வொரு செய்யுளிலும் ஒவ்வோர் அடியிலும் இரண்டாம் சீர் மீண்டும் மீண்டும் ஒரே வார்த்தையாக வருமாறு அமைக்கிறார். ஆனால் அந்த வார்த்தை, சிலேடை நயத்தால் இரண்டு பொருள்களை அல்ல, நான்கு பொருள்களைத் தரவல்ல நுட்பத்தோடு அமைந்துள்ளது. இதுவே ஐயங்காரின் அபார ஆற்றல்.

இப்படி நூற்றுக்கணக்கான சொற்களை நான்கு பொருள் தரும் வகையில் அவர் கையாள்கிறார். படிக்கப் படிக்க மலைக்க வைக்கும் அவரது மொழித் திறனுக்குச் சான்றாக ஒரே ஒரு பாடல் -

துன்பங் களையும் சனனங் களையும் தொலைவறுபேர்
இன்பங் களையும் கதிகளை யுந்தரு மெங்களப்பன்
தன்பங் களையும் படிமூ வரைவைத்துத் தாரணியும்
பின்பங் களையும் இழுதுமுண் டானடிப் பேர்பலவே !

பதம் பிரித்துப் பார்த்தால் –

துன்பம் களையும் சனனம் களையும் தொலைவறுபேர்
இன்பங்களையும் கதிகளையும் தரும் எங்கள் அப்பன்
தன் பங்கு அளையும்படி மூவரை வைத்துத் தாரணியும்
பின்பு அங்கு அளையும் இழுதும் உண்டான் அடிப்பேர் பலவே!

மூவரை - பிரமன்,ஈசன்,திருமகள் ஆகியோர் மூவரையும்
தன் பங்கு அளையும்படி - தன் திருமேனியில் இருக்கும்படி
வைத்து - செய்து கொண்டு
அங்கு - திரு ஆய்ப்பாடியில்
தாரணியும் - மண்ணையும்
அளையும், இழுதும் - தயிரையும் , வெண்ணெயையும்
உண்டான் - உண்ட
எங்களப்பன் - திருவேங்கடமுடையானுடைய
பேர் பலவும் - ஆயிரம் நாமங்களும்
துன்பம் களையும் ; ஜனனம் களையும் ; தொலைவறு
பேரின்பங்களையும், கதிகளையும் தரும்.

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

இவர் வாழ்ந்தது 17 ம் நூற்றாண்டில். மன்னர் திருமலை நாயக்கரின் அரசவையில் பணி புரிந்து வந்தார். வைணவர். அரங்கனுக்கே பித்தேறி இருப்பவர். இவருக்கு ‘ அழகிய மணவாள தாசர்‘ என்றும் பெயர். தமது ஈடற்ற புலமையால் ‘திவ்ய கவி’ என்ற பட்டமும் பெற்றார்.
ஒரு நாள் அலுவலில் ஈடுபட்டிருக்குங்கால் திடீரெனத் தமது மேல்துண்டை இரு கரங்களாலும் ‘க்ருஷ்ண’ ‘க்ருஷ்ண’ என்று கூறிய படிக் கசக்கினார். அருகிலிருந்தோர் ‘புத்தி மாறாட்டம் ஏற்பட்டதோ!’ என நகையாடினர்.
'நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகையில் திரைச் சீலையில் தீப்பற்றியது. அதை அணைக்கவே இவ்வாறு செய்தோம்’ என்றார் அந்த மெய்யடியார்.
செய்தி மன்னரின் காதுகளுக்கு எட்டியது. கூர்மதி படைத்த அம்மன்னர் உடனே திருவரங்கத்திற்கு ஆளனுப்பிச் செய்தி அறிந்து வரச் செய்தார்.
சம்பவம் ஊர்ஜிதமானது.
மன்னர் ஐயங்காரைப் பணியிலிருந்து விடுத்து, அரங்க நகருக்கே அனுப்பி வைத்தார். தாஸர் அரங்கனின் ஆலயத்திலேயே தங்கிப் பரமனுக்குத் தொண்டு செய்து வாழ்வாராயினர். இவர் அருளிய நூல்கள் ‘அஷ்ட ப்ரபந்தம்’ எனும் பெயரோடு புகழ் பெற்று விளங்கி வருகிறது. புலவர் புராணத்திலும் இவர்தம் வரலாறு இடம் பெற்றுள்ளது.

Tuesday, June 10, 2008

இரண்டாய்ப் பிரிவது தான் இயற்கையா..


மரம், செடி, கொடிகள் கவடு விட்டுப் பிரிந்து வளர்கின்றன.குடும்பங்களும் பிரிகின்றன; கட்சிகளும் பிரிகின்றன;தேசங்களும் பிரிகின்றன.

ரஷ்யா பல துண்டுகளாகச் சிதறியது.நேரு பாரதத்தை மொழிவாரியாகப் பிரித்தார். மொழி ஒன்றாக இருந்தாலும் வேறு பல காரணங்களுக்காக வட மாநிலங்களில் பிரிவு ஏற்பட்டது. வங்கமும், ஆந்திரமும் என்று பிரியுமோ? தமிழகத்திலும் பிரிவு வரலாம் என்று காதில் விழுகிறது.

ஆன்ம நேயம் பேசும் மத மரபுகளைப் பார்த்தால் அவற்றினுள்ளும் பல பிரிவுகள்.வேத நெறியிலும் கர்ம காண்டம், ஞான காண்டம் என இரு பிரிவுகள்.

வழிபாட்டு நெறியிலோ சைவம், வைணவம் என்ற இரு பெரும் பிரிவுகள்.

சைவத்தினுள்ளும் சித்தாந்த சைவம், வைதிக சைவம், காச்மீர சைவம் என்ற பிரிவுகள்.

வைணவம் மர்க்கட கிசோரம், மார்ஜால கிசோரம் என்னும் பிரிவுகளோடு திகழ்கிறது.

பவுத்தத்தில் ஹீனயானம், மஹாயானம் .பிரம்ம ஸூத்ரத்தில் வ்யாஸ முனிவர் பவுத்தர்களில் யோகாசாரன்,மாத்யமிகன் போன்ற தத்துவவாதிகள் பலர் இருந்ததைத் தெரிவிக்கிறார்.

சமணர்களிலோ சுவேதம்பரர், திகம்பரர் என்று இரு பிரிவு. சுவேதம்பரர் வெள்ளை ஆடை உடுப்பர்; திகம்பரர் ஆடையின்றி இருப்பர்.

ஒற்றுமைக்குப் பெயர் பெற்ற யூத மதத்திலும் அஷ்கென்ஸி, ஸெபார்டி என்னும் இரு பிரிவுகள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கிறிஸ்தவ மதத்திலும் கதோலிக்க, ப்ரோடஸ்டன்ட் பிரிவுகள்.

அதற்குப் பின் தோன்றிய மொகம்மதிய மதத்திலும் ஷியா, சன்னி, ஸூஃபி, வஹாபி என்ற பிரிவுகள்.

வெகு அண்மையில் தோன்றிய சீக்கிய மதத்தில் ”தேரோ பந்த்” என்னும் கிளை தோன்றி விட்டது.

எது எப்படியாயினும் பிரிவு என்பது தளர்ச்சிக்குக் காரணமாகாமல் வளர்ச்சியைத் தந்தால் சரி தான்!!

Monday, June 9, 2008

திருமங்கை ஆழ்வார் -

இவர் பல்லாயிரம் பாகவதர்களுக்கு அமுது செய்வித்து அருளினார்..

பகவானிடமிருந்தே வாள் வலி கொண்டு மந்திர உபதேசம் பெற்றார்.

பகவானுக்குச் சொற்கோவிலோடு கற்கோவில்களையும் சமைத்தார்.

வடநாட்டுத்திருப்பதிகள் அனைத்தையும் மங்களாசாஸனம் செய்துஅருளினார்.

'கற்கலாம் கவியின் பொருள் தானே' என்று கண்ணனையே தமிழ் கற்றுக்கொள்ள அழைத்தார்.

எம்பெருமானுக்காக மடலூர்ந்தார்.

இறுதியில் திருப்பணி செய்தவாறே உயிர் துறந்தார்.

பகவத், பாகவத கைங்கர்யங்களின் எல்லை நிலம் இவரே எனத்தட்டில்லை.









ஒரு நல்ல செய்தி

பல மொழிகளைக் கற்போருக்கு மூளை வெகு எளிதில் முதுமை அடைவதில்லையாம்!! நண்பர் திவா அவர்கள் 'நல்ல செய்தி' blog-ல் பதிவு செய்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து கூறியிருக்கிறார்களாம்.

Wednesday, June 4, 2008

ஜ, ஸ, ஹ, க்ஷ போன்ற கிரந்த எழுத்துக்களை அப்புறப்படுத்துவதற்குப்பல தலைகள் அரும்பாடுபட்டு வருகின்றன.'கஷ்டம்' என்பதில் கிரந்தம் நுழைந்துவிட்டது;
அதை ஒழித்துவிட்டு 'கடினம்' எனும் சொல்லைப் பயன்படுத்தப் போகிறேன் - என்று சூளுரைக்கிறது ஒரு தலை.
'கஷ்டம்' , கடினம்' , 'சிரமம்' எல்லாமே வட சொற்கள் தாமே!!
இந்த கிரந்த எழுத்துகள் ஸ்டாலின், ஜேம்ஸ்,ஸ்டெல்லா, இப்ராஹிம், அன்வர் பாஷா போன்ற மேற்கத்திய மொழிச் சொற்களைக் கையாள்வதற்கும் பயனாகின்றனவேபெருந்தலைகளே!!
பைபிளிலும், கொரானிலும் இடம்பெறும் கிரந்த எழுத்துக்களின்மாற்றுருவாக்கப்பணியும் தொடரும் என நம்பலாமா?

Tuesday, June 3, 2008

மக்களை மாக்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவது எது ?அறிவா ? ஆற்றலா? - இரண்டும் அல்ல.சர்கஸில் விலங்குகளும் பறவைகளும் மனிதன் செய்வதை எல்லாம் வெகு நேர்த்தியாகவே செய்கின்றனவே !!வலிமையோ , ஆற்றலோ கேட்கவே வேண்டாம் .அவ்ற்றுக்குத்தான் முதலிடம்.பின் மனிதனின் தனித்தன்மை தான் என்ன ?பகுத்தறிவு - விவேகம் : அது ஒன்றில் தான் அவன் மதிப்பெண்கள் வாங்கியாக வேண்டும்.(ஸ்வாமி ராம் ஸுக தாஸ் அவர்கள் - கீதைக்கான ஸாதக ஸஞ்ஜீவனி விரிவுரைலிருந்து)

Monday, June 2, 2008

an opinion

அன்பர்களே!

வடமொழியைத் தமிழின் துணை மொழியாகக் கருத முயலுங்கள்.
அது ஒரு பகை மொழியன்று. போட்டி மனப்பான்மை தன்னலம் காரணமாக
எழுகிறது.வடபுலம் சார்ந்த சிந்தனை , அது சமயங்களின் சார்புடையது ஆயினும் தமிழ் மொழி வளம் பெற்றது உண்மையே.

ராம. தேவராஜன்

.

Thursday, March 20, 2008

UNIVERSAL BROTHERHOOD

FEELINGS & NEEDS ARE SIMILAR FOR ALL HUMAN BEINGS.

IF THERE IS NO SELFISHNESS THERE IS NO NEED FOR POLITICAL BARRIERS.