Monday, June 25, 2012

“ஆதியாய் நின்றது மன்னவன் கோல்”

ஆதியாய் நின்றது மன்னவன் கோல் -

இதில் 'நின்றது' என்பது இறந்த காலத்தைக் குறித்து நின்றது.
அக்குறிப்பை மணக்குடவர் ‘முதலாக நின்றது அரசன்
செய்யும் முறைமை’ என்று பொருள் செய்து
உணர்த்தியிருக்கிறார். 'ஆதியாய் நின்றது' எனும்போது
முதலாக அமைந்தது என்று பொருள்
கொள்ளவேண்டும். இங்கு மன்னவன் என்றது
பரத சக்ரவர்த்தியை; அவரே நீதியை வகுத்தவர்
என்று மணக்குடவர் உரையை ஒட்டிப் பொருள் கூறுவர்.

பரத மன்னனுக்கும் முன்னர் ரிஷப தேவரும்,
நாபியும் இருந்துள்ளனர், சமண வரலாற்றுப்படியே.
ஏனோ சமணம்  அவர்களை ஒதுக்கி விட்டது.
பாரத வர்ஷம் எனும் பெயர் ஏற்படுமுன்
அஜநாப வர்ஷம் என்று பெயர் இருந்துள்ளது.

இறந்த காலத்தில் நீதிநெறியைச் சொல்லும்
வழக்கம் இருந்துள்ளது. குறளில் மட்டும்
என்றில்லை.

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்க முடைமை.
                            (முதுமொழிக் காஞ்சி)

சிறந்தன்று - உடன்பாட்டு இறந்தகால வினைமுற்று

குறளில் இறந்த காலத்தில் சொல்லப்பட்டதால், வரலாறு
சார்ந்த ஒரு மன்னனைக் குறிப்பாகச் சொன்னார் என்பது
பொருத்தமுடையதா என ஆராய வேண்டும்.

மேலும் பன்னிரு குறட்பாக்களில் 'மன்னவன்'
இடம் பெறுகிறான். மன்னவன் என்று வரும்
இடங்களில் எல்லாம் பரத சக்ரவர்த்தி
என்று பொருள் கொள்வதும் பொருந்தாது.

ஆதியாய் - காரணமாய் என்று பொருள்
கொள்வது  பொருத்தமுடையது.

* நின்றது மன்னவன் கோல்*

காலவழுவமைதி -

ஒரு செயல் எதிர்காலத்தில் நடைபெறப்போவது
இயற்கை என்னும் நிலையிலும்,
நூலறிவால் தெளியப்படும் நிலையிலும்
அச்செயலை இறந்தகாலச் சொல்லாலும்
நிகழ்காலச் சொல்லாலும் சொல்வதுண்டு.

எறும்புகள்  மேட்டுப்பகுதிக்கு ஊர்வதைப் பார்த்து ,
மழை வருமுன்பே ‘மழை வந்துவிட்டது’
என்று கூறுவதுண்டு.

நூற்பா :

வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்
இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை.
                               (தொல். சொல். வினை. 48)

பாலொடு நெய்தயிரும் பயின் றாடிய* பண்டரங்கன்
                                    - சம்பந்தர் தேவாரம்

(ஆடிய - ஆடுகின்ற :  காலவழுவமைதி )


ஆகவே  சமண சமயச் சார்பின்றி
எந்த ஒரு மன்னரின் பெயரையும்
தனிப்பட்ட முறையில் சொல்வதாகக்
கொள்ளாமல், பொதுப்படையான அரசியல்
நீதியைச் சொல்வதாகப் பொருள் கொள்வதே
இக்குறளுக்குப் பொருத்தமாக அமையும்

Friday, June 8, 2012

திருக்குறள் சமண நூலா ? (பகுதி 1)


சிறந்த ஆய்வாளர்களுள் சிலர் திருக்குறளைச் சமணம் சார்ந்த நூலென்றும், சமணச் சிந்தனைகளே திருக்குறளில் இடம் பெற்றிருக்கின்றன வென்றும் கூறியுள்ளனர். இவர்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.க, பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, மயிலை. சீனி வேங்கடசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால் சமணத்தின் கோட்பாடுகளுக்குத் திருக்குறள் மாறாக இருப்பதாகவே தெரிகிறது.
 
சமணத்தின் மையமான கோட்பாடுகள் -

1) தீவிரமான இறை மறுப்பு,

2) தீவிரமான இன்னா செய்யாமை

3) தீவிரமான துறவு


Life is spirit, not physical matter.
Jainism is life affirming, but world denying.
Jains reject a materialistic lifestyle.

In general, Jainism is a study in extremes:

    extreme atheism
    extreme ahimsa
    extreme asceticism

இதற்கு முரணாக வள்ளுவம் இறையை ஒப்புக்கொள்கிறது.
ஒறுத்தலை வற்புறுத்துகிறது.
”நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்” என்பதிலுள்ள உவமை
சமணத்தின் தீவிரமான கொல்லாமை நெறிக்கு முரணானது.

சமணத்தின் அதீதமான உலகியல் மறுப்புக்கு மாறாக
வையத்துள் வாழ்வாங்கு வாழ்தலை வள்ளுவம் சொல்கிறது.

மண்ணில் நல்லவண்ணம் வாழ்தலை,
கொண்ட பெண்டிர் மக்கள் சுற்றத்தோடு
நல்ல பதத்தால் மனைவாழ்தலைச்
சொல்லும் சமயக் கருத்துகளுக்கு
அணுக்கமாகத் திருக்குறள் விளங்குகிறது.

பஶ்யேம ஶரத³​: ஶதம்
ஜீவேம ஶரத³​: ஶதம்
ஶ்ருʼணுயாம ஶரத³​: ஶதம்
ப்ரப்³ரவாம ஶரத³​: ஶதம்

புலன்கள் மேலானவற்றில் ஈடுபட்டிருக்கும் நீடித்த, தரமான,
வளமான உலக வாழ்க்கையைக் கோரும்
மறை மொழிகளையும் பார்க்கிறோம்.

நெடுமால், தாமரையாள், தவ்வை, இந்திரன்,
உலகியற்றிய நான்முகன், அவியுணவு, அதை ஏற்கும்
அமரர்கள், அதை அளிப்போர், எழுதா மறை ஆகிய அனைத்தையும்
சொல்லும் குறள் 63 சலாகா புருஷர்களில் ஒருவரைப் பற்றியும்
ஒரு இடத்திலும் பேசவில்லை.

சமணத்தின் தேவர்கள் புலன்களை வென்றதால்
மேலுலகத்தில் வாழும் தகுதி பெறுகின்றனர்;
சமணம் அவர்களைப் புலன்களை வென்றவர்களாகவும்,
முக்தி அடைந்தவர்களைப் போற்றி, தீர்த்தங்கரர்களுக்கான
ஸமவசரணத்தை அமைக்கும் பணி செய்வோராகவும்
காட்டுகிறது. அமரருலகில் முப்பது பகுப்புகள்;
அமரர்கள் நான்கு வகையினர் என்று சமணம் சொல்கிறது.

வேத சமயத்தில் அமரர்கள் புண்ணியச் செயல்களால்
தேவருலகை அடைந்தோராவர்.
அவர்களுக்கான பொறுப்புகள் வேறு;
அவர்கள் போகத்தில் ஆழ்ந்திருப்பவர்.
அமுதம் பருகி, அவியுணவை ஏற்றுப்
புண்ணிய பலன்களின் மிகுதியால் போகத்தில் ஆழ்ந்திருக்கும்
அவர்களுக்கு பிரமதேவர்  ஒருமுறை
அறிவுறுத்தியதாகவும் அறிகிறோம் [ப்ருஹதாரண்யக
உபநிஷத்]. வள்ளுவம் ஓர் இடத்தில் புலனடக்கம் இல்லாத
அமரர்களைச் சொல்கிறது.

மயிலையாரின் கட்டுரை வெளிவருவதற்கு முப்பதாண்டுகளுக்கு முன்பே இலங்கைப் பெரும்புலவரான புலோலி. தில்லைநாத நாவலர்,  வள்ளுவரைச் சமணரெனக் கொள்வதைத் திறம்பட மறுத்துள்ளார்.

’மலர்மிசையெழு தருபொருள் நியதமு முணர்பவர்’ என்று திருஞான சம்பந்த மூர்த்திகளும், ‘ஏடாயாய தாமரை மேலியங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், ‘போதகந்தோறும் புரிசடையானடி’ என்று திருமூலர் திருமந்திரத்தாலும்,‘மனைகமலமற மலர்மிசை யெழுதரும்’எனத் திருவாய் மொழியில் சடகோபர் கூறுதலாலும், இம்மூர்த்திகளை யெல்லாம் விடுத்து  ‘மலர்மிசை ஏகினான்” என நாயனார் அருகரைக் கூறினார் என்பது பொருந்துமா பார்க்க வேண்டும்.

"அருகன் எண்குணன் நிச்சிந்தன் அறவாழி வேந்தன் வாமன்.." என்று சூடாமணி நிகண்டும், "அறவாழி வேந்தன் அரியணைச் செல்வன்" என்று பிங்கல நிகண்டும்  பேசும்.

அருகக் கடவுளுக்கு அறவாழி வேந்தன் என்பதன்றி, அறவாழி அந்தணன் என்பது பெயரன்மையால் கடவுள் வாழ்த்து ஆதி தீர்த்தங்கர ஸ்வாமிக்கானது
என்பது பொருந்தாது.


சமணத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் வள்ளுவத்தையும்
ஒப்பு நோக்கினால் பல உண்மைகள் புலப்படும்.

சமணச் சமயம் கடவுளை ஏற்பதில்லை. உயிர்களுக்குக் கர்ம பலன்களைப் (வினைகளை) நுகர வைக்கக் கடவுள் தேவையில்லை என்றும், கர்மங்கள் தாமாகவே தத்தம் பலன்களைத் தரும் என்றும் சமணம் கூறுகிறது. ஆனால் வள்ளுவம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. மக்கள் இறைநெறியில் நின்றால் தான் துன்பங்களையும், வினைகளையும் கடக்க முடியும் என்று அது வலியுறுத்துகிறது. உயிர்களுக்குக் கர்மங்கள் தாமாகவே (கடவுள் துணை இல்லாமல்) பலன்களை விளைவிக்கும் என்பதை வள்ளுவர் சிறிதும் ஏற்கவில்லை என்பதைக் கீழுள்ள குறட்பாக்களினால் நன்கு உணரலாம்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

‘வகுத்தான் வகுத்த வகையல்லர்’

என்றும் கூறியிருப்பதால் ஊழை வகுப்பவன் இறைவன் என்பதே அவர் கருத்தாகும். வகுத்தான் என்பது ஊழைக் குறிப்பதாயினும் ஈங்கு இறைவன் என்று பொருள் கொள்வதே ஏற்புடைத்து.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு – 4 என்றும்,
இருள்சேர் இருவினையும் சேரா – 5 என்றும்,
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால் – 8 என்றும்,
பிறவிப் பெருங்கடல் நீத்துவர் – 10 என்றும்,
பற்றுக பற்றற்றான் பற்றினை – 350 என்றும்,
திரும்பத்திரும்ப எல்லாவற்றிற்கும் மூலமுதல்வன் இறைவன் என்றே அவர் கூறுவதால், இங்கு வகுத்தான்| என்று கூறியிருப்பதை இறைவன் என்று பொருள் கோடலே ஏற்றது. வினையை வகுத்து ஊட்டும் முதல்வன் இறைவனேயென்று வள்ளும் கூறுவது சமணத்துக்கு நேர்மாறானது. இறைவனை மறுக்கும் சமணம் எங்கே? இறைவனை ஏற்கும் வள்ளுவம் எங்கே? இது அடிப்படை மாறுபடன்றோ!

மேலும், ஊழைக் காட்டிலும் வலிமையுடையது வேறொன்று இல்லையென்றும், வினைப்பயனை யாராலும் தவிர்க்க முடியாது என்று வலியுறுத்துவது சமணம். ஆனால், வள்ளுவம் ஊழை ஏற்றுக் கொண்டாலும் அதனை உழைப்பினால் புறம் தள்ளலாம் என்பது அதன் துணிபு. இதுவும் சமணத்துக்கும் வள்ளுவத்துக்கும் அடிப்படையிலுள்ள முரணாகும். வள்ளுவர் ஊழுக்கெதிராக ஆள்வினையுடைமையை வகுத்திருப்பது இந்தியச் சிந்தனை மரபில் ஒரு புதிய அத்தியாயம் ஆகும். பெளத்தம் கூட, ஊழை வெல்ல வேண்டுமெனக் கூறியிருந்தாலும், யாமறிந்த வரையில் மனித முயற்சிக்கு (ஆள்வினைக்கு) வள்ளுவம் தந்த அழுத்தத்தை அது தரவில்லை என்பதே உண்மையாகும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (குறள்.619) என்றும்,

ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர் -(குறள் 620) ; என்றும்

வள்ளுவம் பெரிதும் வலியுறுத்துவது, சமணத்துக்கு முற்றிலும் மாறானது.இக்கூற்று இந்தியத் தத்துவ மரபுக்கே சிறப்புத் தருவது.

சமணத்தின் உயிர்க்கொள்கை துறவறமேயாகும்.

சமணர் என்றாலே துறவி என்றே பொருளாகும். துறவு பூண்டோரே வீடுபேறு அடைவர் என்பது சமணக் கொள்கை. சமணத்தைப் போன்று பெளத்தம் அத்துணைக் கடுமையாகத் துவவறத்தைக் கூறாவிடினும், ஆய்வாளர்கள் இரண்டு சமயங்களையும் துறவறச் சமயங்களென்றே கூறுவர். வள்ளுவர் அனைத்துப் பகுதியினர்க்கும் அறம் கூற விழைந்தவராதலின், அவர் துறவறத்துக்கும் ஓரளவு இடம் தந்தார். எனினும் இல்லறத்தையே பெரிதும் போற்றினார்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஓய்ப் பெறுவது எவன்
                                                                           (குறள் – 46)

துறந்தான் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச் சொல் நோற்கிற்பவர்
                                                                           (குறள் – 159)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்
                                                                         (குறள் – 50)

இக்குறட்பாக்களின் வழித் துறவறத்தைத் தவிர்த்து இல்லறத்தை எப்படிப் போற்றி வலியுறுத்துகிறார் என்பதை நன்கு தெளியலாம்.
இவையாவும் சமணத்துக்கு மாறானவையாகும்.

அறத்துப்பாலிலுள்ள 38 அதிகாரங்களில் துறவறத்துக்கு 15 அதிகாரங்களும், 22 அதிகாரங்கள் இல்லறத்தார்க்கும், ஓர் அதிகாரத்தை மட்டும் இரு அறத்தார்க்கும் பொதுவாகவும் கூறியுள்ளார். ஏனைய பொருட் பாலிலும்,
காமத்துப் பாலிலும் உள்ள அதிகாரங்கள் யாருக்கு உரியன என்பதைப் பற்றிக் கூறவேண்டுவதில்லை. இவற்றிலிருந்து வள்ளுவரின் சமணத்துக்கு மாறான இல்லறக் கோட்பாட்டை நன்கு உணரலாம்.



    பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயிறு ஊறிய நீர்
                                                 ( குறள் 1121)

சமணருக்குத் தேன் விலக்கப்பட்ட உணவு; வள்ளுவப் பெருந்தகை சாவக நோன்பினராயினும் (அணுவிரதியாயினும்), மாவிரதியாயினும் தேனைச் சுவைத்திருக்க வாய்ப்பில்லை; எப்படி அதை உதாரணம் கூறுகிறார் ? சமணரில் சாவக நோன்பினர் மருந்துக்கும் தேனைச் சேர்த்துக் கொள்வதில்லை.


சமணம், அச்சமயத் துறவிகளுக்கு ஏழு தர்மங்களை விதித்தது. அத்தர்மத்தை அவர்கள் யதிதர்மம் என்றார்.  அவற்றை உலோசம், திகம்பரம். நீராடாமை, தரையிற் படுத்தல், பல் விளக்காமை, நின்று உண்ணல், ஏக புக்தம் என்பர். வள்ளுவம் இவற்றிற்கு மாறானது.


திகம்பரம் என்பது ஆடையின்றி இருப்பதை குறிக்கும். வள்ளுவரோ ‘ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல’ (1012) என்றும், ‘உடுக்கை இழந்தவன் கைபோலும்’(788) என்றும்  உடையின் இன்றியமையாமையைக் கூறுவதால்  வள்ளுவர் திகம்பரத்துக்கு மாறானவர் என்பதை அறியலாம். மற்றும் அவர் புறந்தூய்மை நீரான் அமையும் (298) என்று கூறுவதால் சமணம் கூறும் நீராடாமையை ஏற்கவில்லை என்பதை உணரலாம்.

நின்றவாறே உணவேற்றல், ஏக புக்தம் (ஒரு வேளை மட்டும் உண்ணல்) இவற்றை வள்ளுவர் துறவறத்திலோ,  மருந்து அதிகாரத்திலோ குறிப்பிட்டார் அல்லர்.  அகத்தூய்மையும், புறத்தூய்மையையும் வலியுறுத்தும் அவர்,
பல் தேய்க்காமையை விரும்புவாரா? மாட்டார்.  ‘பணிமொழி வாலெயிறு ஊறியநீர்’ (1121) என்ற குறட்பாவிலுனுள்ள “வாலெயிறு” என்பது தூய்மையான  பற்களையே குறிக்கும். இதிலிருந்து பல்தேய்க்காமையை அவர் சிறிதும் விரும்பாதவர் என்பதை உணரலாம்.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
                                               (குறள் 360)

ஒழுக்கத்தை மிகவும் வலியுறுத்திய வள்ளுவர் சமணரின் முக்கியக் கோட்பாடான ரத்ந த்ரயத்தை விளக்கினார் அல்லர்; ரத்ந த்ரயம் என்பது நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகியவையாகும். சமணரின் முக்கியக் கோட்பாடான அநேகாந்த வாதமும் குறளில் எங்கணும் காணப்படவில்லை.

சமணர் இன்னா செய்யாமையை எல்லை கடந்து வலியுறுத்தினர். மூக்கின்வழி காற்றை உட்கொண்டால் காற்றிலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும் என்பதற்காக மூக்கில் துணியைக் கொண்டு மூடிக் கொண்டனர்.
மரங்களைச் செதுக்குவதால் மரத்திலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்துவிடும் என்பதற்காகத் தச்சுத் தொழிலையும், பூமியைத் தோண்டுவதால் உயிர்கள் மடியும் என்பதால் சுரங்கத் தொழிலையும்  அவர்கள் தடை செய்தனர். இதனால், பூமியை உழுதால், மண்ணிலுள்ள  புழு பூச்சிகள் அழிந்துவிடும் என்பதற்காக உழவுத் தொழிலுக்கும்  சமணத்தில் இரண்டாம் நிலை இடமே அளிக்கப்படுகிறது.  ஐம்பெரும் பூதங்களுக்கும் உயிர் உண்டு  என்பது சமண நெறியின் நம்பிக்கை. அவை அனைத்துக்கும் தொடு உணர்ச்சி உண்டு
என்பர் சமணர்.

‘பஹ்வந்நம் குர்வீத’ என்று அருமறை, வேளாண்மையைச்
சமூகக் கடமையாக்குகிறது, அதுவும் தூய  ஆன்மிகம் பேசும்
உபநிடதப் பகுதியில்.

வள்ளுவம் மறை கூறியதற்கிணங்க  உழு தொழிலை உயர்ந்ததாகப் போற்றுகிறது -

சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள் – 1031)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் (குறள் – 1033)