Sunday, November 2, 2008

நாமம் சொன்ன நாத்திகன்

வடபுலத்தில் கோஸ்வாமி துளஸீதாஸர் மக்களை ஸ்ரீ ராம குண ஸாகரத்தில் மூழ்கடித்துக்கொண்டிருந்த காலம். முகமதியர்களின் கோரப்பிடியிலிருந்து தப்பிய ஸநாதந தர்மம் மூச்சுவிடத் தொடங்கிய நேரம். முதிய வயதில், தளர்ந்த மேனியுடன் கோஸ்வாமி ஸ்ரீ ராமநாம மஹிமையை இடையறாமல் வெளிப்படுத்திய வண்ணம் இருந்தார்.
‘சந்தா’ என்றொரு இறை மறுப்பாளன்; இளமைப் பருவமும், குன்றாத செல்வமும் அவனிடம் முரட்டுத் தன்மையையே வளர்த்து விட்டிருந்தன. பொலி காளை போல் சுற்றித்திரிவதும், அடியார்களை வம்புக்கிழுப்பதும் அவனது அன்றாடப்
பணிகள்.
கோஸ்வாமியின் குடிலுக்குள்ளும் நுழைவான். அவரைப்போல் பகடி செய்வான்; ’சாமி, ஏன் முகவாட்டத்துடன் இருக்கிறது?
பணக்கார ஸேட் யாரும் சிக்கவில்லையா?’ என்று கூசாமல் வினவுவான். அடியார் குழாம் முகம் சுளிப்பதைச் சட்டை செய்ய மாட்டான். ’கோசாயி, என் வாயிலிருந்து ஈரெழுத்து மந்திரத்தை வரவழைக்க முடியுமா உம்மால் ?’ என்று சவால் விடுவான்.
’ ஊர், உலகத்தை கோசாயி ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். நீங்கள் அவன் பின்னால் போகிறீர்கள். எத்தனை முறை நான் அங்கு சென்றிருப்பேன்! என் வாயிலிருந்து நாமத்தை வரவழைக்க முடிந்ததா அவனால்?’ என்று மக்களிடம் தன் பெருமையைப் பறைசாற்றிக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டிருந்தான் சந்தா.
நாட்கள் நகர்ந்தன. ஒரு வதந்தி பரவியது. கோஸ்வாமிஜீ சந்தாமீது ஒரு தோஹா எழுதியுள்ளார்! ’ உண்மையாக இருக்குமா?’ வியந்தனர் சிலர். ’தாஸர் சந்தாவிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டாரா ?’ வெறுத்தனர் சிலர்; மறுத்தனர்
பலர். ’மானுடம் பாடியறியாத தாஸருக்கு இந்த வயதில் ஏனிந்த வேலை ?’ விலகினர் ஒரு சிலர். ‘அவர் சொல்வதை நானே கேட்டேன்’ உறுதி செய்தனர் ஒரு சிலர்.
செய்தி சந்தாவின் செவிகளுக்கு எட்டியது. முதலில் அவனும் நம்பவில்லை. ஆயினும் ஆர்வம் தலை தூக்கியது. புகழ் தரும் போதை யாரை விட்டது? உலகம் புகழும் ஒரு மனிதரிடம் பாடல் பெறுவது அத்தனை எளிதா என்ன? ‘எனக்கு ஈடுகொடுக்க இயலாத கோசாயி என்னைத் தாஜா செய்யவே என் மீது ஒரு பாடல் புனைந்துள்ளான்’ என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிட்டான் சந்தா. வெகு இயல்பாகக் குடிலுக்குள் நுழைந்தான். நேரடியாக அவரிடமே கேட்டுவிட்டான்.
‘ஆம், சந்தா. உண்மை தான். ஒரு சிறிய தோஹாதான். உனக்கு நம்பிக்கை இல்லையா ? நானும் நீயும் நெடுநாளைய நண்பர்கள்; ஊராருக்குப் பொறாமை. அவர்கள் ஏதேனும் சொல்லிவிட்டுப் போகட்டும். என் தோஹாவை நீ ஏற்பாயா ? அதற்கு விடை கூறு’ என்றார் கோஸ்வாமி.
‘சொல்லுங்களேன், கேட்போம்’ என்றான் சந்தா.
‘போலா சந்தா பேசாரா ! மந்தா சல்தா நிவிசாரா !!’
(முதல் வரியின் கடையெழுத்து ”ரா’, தொடர்ந்து வருவது “ம”)
எத்தனை எளிய தோஹா ! ஆயினும் பிறர் பாடக்கேட்கத் தலை கிறுகிறுக்கிறதே !
‘சரி, சாமி; வருகிறேன்’ அவ்விடத்தை விட்டகன்றான் சந்தா.
அன்று முதல் எதிர்ப்பட்டோரிடமெல்லாம் இப்பாடலைப் பாடிக்கொண்டு திரிந்தான்; கங்கைக்கரையில் தனியே உலவியபடிதோஹாவைப் பாடுவதில் சுகம் காணத்தொடங்கினான். ‘மரா’ என்று மாற்றிச் சொன்னதே மாற்றத்தை ஏற்படுத்திவிட்டபோது முறையாக உச்சரித்துவரும் சந்தாவைத் தாரக நாமம் மாற்றாதா என்ன? அதுவும் புனிதம் மிக்க கங்கா தீரத்தில் !
பண்டிதர்கள் தாஸரின் திறமையை அவனுக்கு வெகு நாட்களுக்குப்பின் உணர்த்தினர். அவனது செருக்கு அகன்றது. தாஸரின் திறமையும், பொறுமையும் முடிவில் அவனை ஆட்கொண்டன.
சந்தா நாமம் சொல்லிக் கடைதேறினான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? இந்நிகழ்ச்சி நடைபெற்றது 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்.

5 comments:

ஹரி ஓம் said...

அன்புடையீர்,எனது பதிவிற்கு வருகை தர வேண்டுகிறேன்.
www.onruparamporul.blogspot.com

venkat's page said...

Dear Devraj

Nice write-up. I request you to visit our website www.sanadhanasevasathsangam.org. If you are interested you can share this kind of spiritual articles in our site.
you can send your articles to venkat@sanadhanasevasathsangam.org

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆகா....இப்போ தான் இந்தக் கதையைக் கேட்கிறேன் தேவ் சார்! அருமையிலும் அருமை! சந்தாவை என்னமா வளைத்தார் துளசிதாசர்! இறையன்பில் சட்ட திட்டங்கள் போடாமல், உடனிருந்த மற்ற பக்தர்கள் முதலில் கோபம் கொண்டாலும், ஒருவரையும் விடாது, அவரவர் வழியில் ஆட்கொள்வது தான் எத்தனை பரம காருண்யம்?

பயன் அன்றாகிலும் பாங்கு அலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்...என்ற மதுரகவிகள் வரிகள் தான் நினைவுக்கு வருது இந்தக் கதையைப் படிக்கும் போது!

போலா சந்தா பேசா ரா,ம ந்தா சல்தா நிவிசாரா! என் வாயிலிருந்து பகவத் நாமத்தை வரவழைக்க முடிந்ததா அவனால்? :) அருமை! அருமை!

இங்கே அடிக்கடி பதியலாமே? ஏன் நிறுத்தி விட்டீர்கள் தேவ் சார்?

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Maria Mcclain said...

You have a very good blog that the main thing a lot of interesting and beautiful! hope u go for this website to increase visitor.