Monday, June 25, 2012

“ஆதியாய் நின்றது மன்னவன் கோல்”

ஆதியாய் நின்றது மன்னவன் கோல் -

இதில் 'நின்றது' என்பது இறந்த காலத்தைக் குறித்து நின்றது.
அக்குறிப்பை மணக்குடவர் ‘முதலாக நின்றது அரசன்
செய்யும் முறைமை’ என்று பொருள் செய்து
உணர்த்தியிருக்கிறார். 'ஆதியாய் நின்றது' எனும்போது
முதலாக அமைந்தது என்று பொருள்
கொள்ளவேண்டும். இங்கு மன்னவன் என்றது
பரத சக்ரவர்த்தியை; அவரே நீதியை வகுத்தவர்
என்று மணக்குடவர் உரையை ஒட்டிப் பொருள் கூறுவர்.

பரத மன்னனுக்கும் முன்னர் ரிஷப தேவரும்,
நாபியும் இருந்துள்ளனர், சமண வரலாற்றுப்படியே.
ஏனோ சமணம்  அவர்களை ஒதுக்கி விட்டது.
பாரத வர்ஷம் எனும் பெயர் ஏற்படுமுன்
அஜநாப வர்ஷம் என்று பெயர் இருந்துள்ளது.

இறந்த காலத்தில் நீதிநெறியைச் சொல்லும்
வழக்கம் இருந்துள்ளது. குறளில் மட்டும்
என்றில்லை.

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்க முடைமை.
                            (முதுமொழிக் காஞ்சி)

சிறந்தன்று - உடன்பாட்டு இறந்தகால வினைமுற்று

குறளில் இறந்த காலத்தில் சொல்லப்பட்டதால், வரலாறு
சார்ந்த ஒரு மன்னனைக் குறிப்பாகச் சொன்னார் என்பது
பொருத்தமுடையதா என ஆராய வேண்டும்.

மேலும் பன்னிரு குறட்பாக்களில் 'மன்னவன்'
இடம் பெறுகிறான். மன்னவன் என்று வரும்
இடங்களில் எல்லாம் பரத சக்ரவர்த்தி
என்று பொருள் கொள்வதும் பொருந்தாது.

ஆதியாய் - காரணமாய் என்று பொருள்
கொள்வது  பொருத்தமுடையது.

* நின்றது மன்னவன் கோல்*

காலவழுவமைதி -

ஒரு செயல் எதிர்காலத்தில் நடைபெறப்போவது
இயற்கை என்னும் நிலையிலும்,
நூலறிவால் தெளியப்படும் நிலையிலும்
அச்செயலை இறந்தகாலச் சொல்லாலும்
நிகழ்காலச் சொல்லாலும் சொல்வதுண்டு.

எறும்புகள்  மேட்டுப்பகுதிக்கு ஊர்வதைப் பார்த்து ,
மழை வருமுன்பே ‘மழை வந்துவிட்டது’
என்று கூறுவதுண்டு.

நூற்பா :

வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்
இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை.
                               (தொல். சொல். வினை. 48)

பாலொடு நெய்தயிரும் பயின் றாடிய* பண்டரங்கன்
                                    - சம்பந்தர் தேவாரம்

(ஆடிய - ஆடுகின்ற :  காலவழுவமைதி )


ஆகவே  சமண சமயச் சார்பின்றி
எந்த ஒரு மன்னரின் பெயரையும்
தனிப்பட்ட முறையில் சொல்வதாகக்
கொள்ளாமல், பொதுப்படையான அரசியல்
நீதியைச் சொல்வதாகப் பொருள் கொள்வதே
இக்குறளுக்குப் பொருத்தமாக அமையும்

No comments: