Friday, June 17, 2011

எல்லைகள் தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்

விஞ்ஞானம், போக்குவரத்து , தகவல் தொழில்நுட்பம் இவற்றின் கட்டுக்கடங்காத வளர்ச்சியால் நேர எல்லையும், தேச எல்லைகளும் தற்போது நமக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை என்றாலும் உலக அளவில் இன்றுவரை இலக்கியமே அப்பணியைச் செய்துவந்ததாக நிறுவ இடமுள்ளது. பல்வேறு இனக்குழுக்களிடையே நெருக்கத்தை வளர்த்து, தேச கால மொழி இன வேறுபாடுகள் கடந்த ஒரு புரிதலை வளர்ப்பதில் இலக்கியம் உறுதுணையாக இருந்து வருவதை யாரும் மறுக்க இயலாது.

தாய்மொழி வேறாயினும் பிறமொழிகளில் புலமைபெற்று ஆய்வு செய்வோரும், இலக்கியம் படைப்போரும் இருக்கின்றனர்.

தமிழகம் புராண, இதிஹாஸச் செய்திகளுக்கு இடம்தராத, வடபுலத்தின் தொடர்பற்ற தனித் தீவு என்னும் பெரும்பாலானோரிடம் நிலை கொண்டிருக்கும் தவறான சிந்தனைக்குத் தொல் இலக்கியங்களில் சற்றும் ஆதாரம் இல்லை. ராமாயண – பாரத நிகழ்வுகள் பல சங்க நூல்களில் விரவியுள்ளன.

புறநானூறு 201ம் பாடலின்
”நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்,
செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை,
உவரா ஈகைத், துவரை ஆண்டு,
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே!”
வரிகள் வேளிரின் வடபுலத் தொடர்பைப் புலப்படுத்துகிறது.


”.................. பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த
இலங்குவெள் அருவிய அறைவாய் உம்பர்,
மாசில் வெண்கோட்டு அண்ணல் யானை ’
எனும் அகநானூற்று வரிகள் மோரியர் படையெடுப்பைக் குறிக்கிறது.

சிலம்பு ஈழம் உள்ளிட்ட தென்னக நாடுகளையும், தமிழகத்தின் பெரு நகரங்களையும் இணைத்துப் பேசுகிறது. பல சமயங்களின் கோட்பாடு களையும், அந்நாளில் நிலவிய வழிபாட்டு முறைகளையும், திணை மரபுகளையும், இனம் சார்ந்த ஒழுக்கங்களையும் சிலம்பு தெரிவிக்கிறது. அடிகளாரின் விரிந்த பார்வையின் விளைவே சிலப்பதிகாரக் காப்பியம்.

இளவரசி இந்துமதியின் சுயம்வர மண்டபத்தில் முத்து வடங்கள் அணிந்து கம்பீரமாக வீற்றிருந்த பாண்டிய மன்னனின் எடுப்பான தோற்றத்தை காளிதாஸ மஹாகவி ரகுவம்சத்தில் புகழ்ந்துள்ளார். தென்னகத்தில் எழிலையும், அகத்தியர் வாழும் பொதிகையின் வளத்தையும், பாண்டியர்களின் கபாடத்தையும் வால்மீகி ராமாயணம் சிறப்பித்துக் கூறும். சீனத்துப்பட்டின் சிறப்பைக் கூறும் வடமொழி நூல்கள் உள்ளன.

ஃபாஹ்யான் , சுவான்சாங் ( Xuanzang ) - சீனத்திலிருந்து வந்த இந்த பவுத்தத் துறவிகளின் பயணக் குறிப்புகள் அன்றைய பாரதத்தின் நிலைமையைத் தெரிவிக்கின்றன. ஃபாஹ்யான் ஈழம்வரை சென்றார். வடமொழியையும் தெரிந்துகொண்டிருந்த சுவான்சாங் யோகாசார பவுத்த நெறியிலும் தேர்ச்சி பெற்றவர்.

இத்தாலியரான மார்க்கோ போலோ எழுதிய பயண நூல் ஐரோப்பாவில் ஆசிய நாடுகள் குறித்த ஒரு புரிதல் தோன்றக் காரணமாக இருந்தது; இவர் குப்லாய் கான் காலத்தில் சீனம் சென்று அங்கு பதினேழு ஆண்டுகள் தங்கியவர்.

காழிப்பிள்ளையார் அம்மையின் அருளைப் பெற்ற செய்தியை ஸௌந்தர்ய லஹரியும், கண்ணப்ப நாயனாரின் நிகரற்ற பக்தியை சிவாநந்த லஹரியும் போற்றுகின்றன.

கடுமையான மத மரபுகளின் பிடியிலிருந்த 16ம் நூற்றாண்டின் இறுகிய சூழலிலும் ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் அவர்கள் வைணவரான வேதாந்த தேசிகரின் யாதவாப்யுதய காவியத்திற்கு உரை எழுதினார். ‘பாவா: ஸந்தி பதே பதே கவிதார்கிக ஸிம்ஹஸ்ய காவ்யேஷு லலிதேஷு அபி’ என இவர் தேசிகரை மனமாரப் பாராட்டுகிறார்.

சிறந்த இலக்கண அறிஞரான பட்டோஜீ, அப்பைய தீக்ஷிதருக்குச் சீடரானதும் ஒரு வியப்பே. அவர் ஒரு மராட்டியர். பிற்காலத்தில் தோன்றிய பாஸ்கரராயரும் அப்பைய தீக்ஷிதரின் நூல்களைப் புகழ்ந்துள்ளார் அவர் மராட்டியராயினும்.

பொருட் செறிவும், சுருக்கமான நடையும் கொண்ட திருக்குறளின் மொழிபெயர்ப்பை 37 மொழிகளில் இப்போது இணையத்தில் காண முடிகிறது -
http://nvkashraf.co.cc/nvkashraf/kur-trans/languages.htm

வில்லிபுத்தூரார் சொத்துரிமை விஷயமாக உடன்பிறந்தவரோடு மனத்தாங்கல் கொண்டிருந்தார்; மகாபாரதம் தமிழ் செய்யும் வாய்ப்பு நேரவே அக்காவியத்தை முடித்தபின் பங்காளிச் சண்டையின் தீமையை உணர்ந்து கொண்டு மன வேற்றுமையை அகற்றினார் என்பது புலவர் புராணம் கூறும் செய்தி. வீர வைணவரான பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் நிகரற்ற தமிழ்ப்புலமையை வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் புலவர் புராணத்தில் மனக்கரவின்றிப் பாராட்டியுள்ள செய்தி குறிப்பிடத்தக்கது.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் கற்பிப்பதிலும், கவி புனைவதிலும் நிகரற்ற திறமை வாய்ந்தவர். இவர்தம் முதல் மாணாக்கர் தியாகராசச் செட்டியார்; கடை மாணாக்கர் உ வே சா அவர்கள். இறுதிக்காலத்தில் மகாவித்துவான் அவர்கள் கிறித்தவரான சவேரிநாதரின் மார்பில் சாய்ந்த வண்ணம், உ.வே.சா பாடிய திருவாசகத்தின் அடைக்கலப் பத்தைச் செவி மடுத்த வண்ணம் இறைவனடி சேர்ந்தார்.

ஒரு சாராரின் வெறுப்பையும் பொருட்படுத்தாமல் சமண நூலான சீவக சிந்தாமணியைப் பதிப்பிப்பதில் உ வே சா அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார். சமணக் கோட்பாடுகளை உரியவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்; இரண்டாம் பதிப்பிலும் நுட்பமான குறிப்புகள் சேர்த்தார் (எ கா) ’கள்ளரால் புலியை வேறு காணிய’ தொடர்.

உ வே சா பவுத்த நூலான மணிமேகலையையும் அரும்பத உரையுடன் பதிப்பித்தார். நூலின் விளக்கமாக உ வே சா அவர்கள் எழுதிய குறிப்புரையில் 59 தமிழ் நூல்களிலிருந்தும், 29 வடமொழி நூல்களிலிருந்தும் மேற்கோள்கள் இடம் பெறுகின்றன. பிற உரையாசிரியர்களின் கருத்துக்களும் சான்றாகத் தரப்பட்டன. எத்தகைய கடின உழைப்பு ! சில அறிஞர்கள் பிழைகளைச் சுட்டிக்காட்டினர் என்றாலும் பல இடர்ப்பாடுகளைக் கடந்துதொல் இலக்கியப் பதிப்பை வெற்றிகரமாக நிறைவேற்றியவர் உ வே சா அவர்கள்.

தமிழ்த் தாத்தாவின் பரந்த உள்ளம் அவருக்குச் சமணரிடமிருந்து ‘பவ்ய ஜீவன்’ எனவும், பவுத்த ஆதரவாளர் ஒருவரிடமிருந்து ’பவுத்த சமயப் பிரபந்தப் பிரவர்த்தனாசாரியர்’ எனவும் பட்டங்கள் கிடைக்கக் காரணமானது.

உ வே சா கல்லூரிப்பணியில் நுழையக் காரணமானவர் தியாகராசர் அவர்கள்.

தணிகைமணி அவர்களின் கரங்களைத் தமிழ்த்தாத்தா கண்ணில் ஒற்றிக் கொண்டதையும், அவரது கால்களைத் தணிகைமணியார் பற்றியதையும் தமிழ் இலக்கிய உலகம் நன்கறியும்.

காவடிச்சிந்து பாடிப் புகழடைந்த அண்ணாமலை ரெட்டியார் அவர்களின் தாய்மொழி தெலுகு; பாண்டிதுரைத் தேவரால்கூட காவடிச்சிந்து பாடும் முயற்சியில் வெற்றி பெற இயலவில்லை. ரெட்டியார் சிந்து தவிர வேறு சில பிரபந்தங்களையும் இயற்றியுள்ளார்.

மொழிப்பற்றும், இறையுணர்வும் பல்லினப் பாகுபாட்டைத் தகர்த்து மக்களை ஒரு குடும்பமாக்கியதை இங்கு காண முடிகிறது.

பேரா. வையாபுரிப் பிள்ளையவர்கள் தமது களவியற் காரிகையில் அகப்பொருள் துறைகளை விளக்குகையில் பல்வேறு பழைய இலக்கியங்க ளிலிருந்து எடுத்துக்காட்டுகள் தருகிறார். அதில் எட்டுச் செய்யுள்கள் ’பல்சந்த மாலை’ என்னும் இஸ்லாமிய இலக்கியத்தைச் சார்ந்தவை.

இல்லார் நுதலயு நீயுமின் றேசென்று மேவுதிர்கு
தெல்லா முணர்ந்தவ ரேழ் பெருந்த தரங்கத் தியவனர்கள்
அல்லா வெனவந்து சத்திய நந்தாவகை தொழுஞ் சீர்
நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரு நாட்டகமே

செய்யுளின் மூன்றாம் அடியான 'அல்லாவென வந்து சத்திய நந்தா தொழுஞ்சீர்' பல்சந்த மாலை இஸ்லாமியச் சார்புள்ளது என்பதை உணர்த்துகிறது. (களவியற் காரிகை பதிப்பில் இல்லை)

முஸ்லிம் புலவர்கள் பலரும் இலக்கிய வளர்ச்சிக்குத் தொண்டு செய்துள்ளனர்.

செய்யது முகம்மது அண்ணாவியார் ”சுப்பிரமணியர் பிரசன்னப் பதிகம்”, “மகாபாரத அம்மானை” ஆகியவற்றை இயற்றினார்.

நெல்லை மாவட்டத்தின் மேலச்செவலில் தோன்றிய ஆலிஃப் புலவர் இயற்றிய ’மிராஜ் மாலை’ கைக்கோளர் சமூகத்தினரின் ஆதரவால் கோட்டாற்றில் அரங்கேற்றம் பெற்றது. இதற்கான முயற்சி மேற்கொண்டது இப்புலவரின் மாணாக்கரான சிவலிங்கம் செட்டியார் அவர்கள்.

எட்டயபுரத்தில் உமறுப்புலவரை அவைப் புலவராகச் செய்து சிறப்பளித்தவர் வைணவரான மன்னர் எட்டப்ப பூபதி. உமறுப்புலவரின் கல்லறை மீது நினைவகம் அமைத்தவர் பிச்சைக் கோனார். உமறுப்புலவர் ‘கிடந்தொளி பரப்பி...’ என்று தொடங்கி இரு சீர்களுக்குப்பின் மேலே பாடத்தோன்றாமல் சற்று மயங்கியபோது, அவர்தம் மகனார் அடுத்த தொடரைப் பாடினாராம். இந்நிகழ்வைப் பதிவு செய்துள்ளது தண்டபாணி சுவாமிகளின் புலவர் புராணம்.

நாவலர் குலாம் காதிர் – இவருக்கு ‘நாவலர்’ பாட்டமளித்தது யாழ்ப்பாணத்தின் சைவர்கள். மறைமலை அடிகளார் இவருடைய மாணாக்கர். இவரது இலக்கியத் தேர்ச்சி பாண்டித்துரைத் தேவர் நிறுவிய நான்காம் தமிழ்ச் சங்கத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கக் காரணமாயிற்று.

ஜஸ்டிஸ் இஸ்மெயில் ஸாஹபின் கம்பராமாயணப் பித்து உலகறிந்த ஒன்று. சென்னைக் கம்பன் கழகத்தின் தலைவராக இருந்தார். இவர் எழுதிய வாலிவதம் குறித்த ‘மூன்று வினாக்கள்’ நூல் காஞ்சிப் பெரியவரின் பாராட்டைப் பெற்றது; ‘அடைக்கலம்’ சரணாகதி நெறியை மையமாகக் கொண்டது.

கிறித்தவ மதபோதகர்கள் மதம் பரப்பும் நோக்கில் இந்திய மொழிகளைக் கற்றாலும் அம்மொழிகளின் இலக்கிய வளத்தால் ஈர்க்கப்பட்டதும், மொழிகளின் வளர்ச்சிக்கு உதவியதும் மறுக்க முடியாத உண்மை. ஒரு காலத்தில் சமணர்கள் செய்ததை இவர்கள் செய்தனர் எனலாம்.

மதம் பரப்புவதற்காக பாரதம் வந்த காமில் புல்கே என்ற பெல்ஜியப் பாதிரியார் ஸ்ரீ ராமசரித மாநஸத்தின்பால் ஈர்க்கப்பட்டு அதை முழுமையாகக் கற்றார். ‘மாநஸ கௌமுதி’ என்னும் தொகுப்பை அளித்துள்ளார். இவர் கிறித்தவ இலக்கியங்களையும், துளஸிதாஸரின் விநய பத்ரிகாவையும் ஒப்பாய்வு செய்தவர். ”இராம காதை – தோற்றமும், வளர்ச்சியும்” (ஹிந்தி) திறனாய்வால் அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் D.Phil பட்டம் பெற்ற இவரது மொழிப்புலமை ‘பத்மபூஷண்’ விருது பெறக்காரணமானது. இவர் ஹிந்தி அகராதி ஒன்றையும் தொகுத்துள்ளார்.

தெற்காசியாவில் இராமகாதையைப் பேசாத மொழிகள் இல்லை எனலாம்; இசை,நாடக,நாட்டிய வடிவங்களில் அது மக்களோடு ஒன்றியதாகி விட்டது. ரஷ்ய மேடைகளில் பாரத, ராமாயணங்கள் அரங்கேறியுள்ளன; பெஷ்னிகோவ் என்ற ரஷ்ய நடிகர் இராமபிரானாக நடித்துள்ளார். இவரது நடிப்பு நேருஜியின் பாராட்டைப் பெற்றது. சென்ற ஆண்டு நடைபெற்ற தங்க விழாவில் இந்த நடிகர் பாராட்டுப் பெற்றார்.
http://indrus.in/assets/images/2011-05/RIA-pechnikov2.jpg

மாக்ஸ் முல்லர் ஜெர்மானியர்; பாரிஸில் வடமொழி பயின்றார். ரிக் வேதத்தை அச்சேற்றியவர். Sacred Books of the East - ஐம்பது பெரிய தொகுப்புக்கள் இவரது மேற்பார்வையில் உருவானவை.

பால் ப்ரண்டன் அவர்கள் எழுதாமலிருந்தால் மஹரிஷி ரமணரை இந்தியரும் அறிந்துகொண்டிருக்க வாய்ப்பில்லை.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ரோமெயின் ரோலண்ட் இந்தியாவின்பால் ஈர்க்கப்படக் காரணமானவை ஸ்வாமி விவேகாநந்தரின் நூல்கள் எனலாம். அடக்கு முறையை வெறுத்த இவர் மேற்கத்திய உலகில் காந்திஜீயின் விடுதலை இயக்கம் குறித்த ஒரு புரிதல் ஏற்படக் காரணமானார்.

மார்ட்டின் டுகார்ட் அவர்களின் The Epic Adventures of Stanley and Livingstone ஒருகாலத்தில் இருண்ட கண்டம் என அழைக்கப்பட்ட ஆஃப்ரிகாவை அறிந்துகொள்ள உதவுகிறது. டாக்டர்.திரிபுரசுந்தரி “லக்ஷ்மி” அவர்களின் ‘இருண்ட கண்டத்தில் எட்டு ஆண்டுகள்’ தொடர் அவரது ஆஃப்ரிக வாழ்க்கை அனுபவத்தை மிகவும் சுவையாக வர்ணிக்கும் நூல்.

இங்கிலாந்தின் செல்வவளமிக்க குடியில் பிறந்த மாதரசி மடலின் ஸ்லேட் பாரதம் வந்து காந்தியாரின் அன்பைப் பெற்று ’மீரா பென்’ ஆனதும் ரோலண்ட் அவர்களின் எழுத்தாலன்றோ ! மீரா பென் விடுதலைப் போரில் சிறை சென்றவர். ரிஷிகேசத்தில் வனத்தின் நடுவே ஆசிரமம் அமைத்துப் பசுக்களைப் பாராமரித்து வந்தார். இந்திய அரசு இவருக்கு ‘பத்ம விபூஷண்’ விருதளித்தபோது ஆஸ்த்ரியாவில் இருந்த இவரால் முதுமை காரணமாக நேரில் வந்து பெற்றுக்கொள்ள இயலவில்லை.

கீதாஞ்ஜலியின் பொருளாழம் வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பியரல்லாத ஒருவருக்கு நோபல் பரிசு கிடைக்கக் காரணமானது. ரவீந்திரரின் கீதாஞ்ஜலியை பக்தி இலக்கியத்தின் எச்சமாகக் கருதலாம், குணம் குறியற்ற ஒரு தத்துவத்தை ஆசிரியர் இதில் மையப்படுத்தியிருந்த போதிலும்.

கவியரசர் ரவீந்திரர் எழுதி இசையமைத்த இரு வங்கமொழிக் கவிதைகளே பாரதம், பங்களாதேஷ் இரண்டுக்கும் தேசிய கீதமாக அமைந்தன. ஆங்கிலேய அரசின் வங்கப் பிரிவினை முயற்சியின்போது கவியரசர் மனம் வெதும்பி எழுதிய ‘ஆமாரா ஷோநார் ....’ என்று தொடங்கும் பாடலின் முதல் பத்து வரிகள் சுமார் 60 ஆண்டுகளுக்குப்பின் பாகிஸ்தானிலிருந்து பிரிந்த பங்களா தேஷின் தேசிய கீதமாக ஏற்கப்பட்டது.

உலகப் புகழ் பெற்ற ’ஆயிரத்தோரு இரவுகள்’ கதை 18ம் நூற்றாண்டில் ஃப்ரெஞ்ச் மொழியின் வாயிலாக ஆங்கிலத்திற்குச் சென்றது. பின்னர் 19ம் நூற்றாண்டில் ஸர். ரிசர்ட் ஃப்ரான்சிஸ் பர்டன் என்பவர் ஒரு தரமான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தந்தார். பன்முக ஆற்றல் வாய்க்கப்பெற்ற இம்மேதை 29 மொழிகளை அறிந்தவர்.

’அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’, ‘கடற் பயணி சிந்த்பாத்’ போன்றவை அராபிய இரவுக் கதையின் பகுதிகள். இக்கதைத் தொகுப்பு இன்றளவும் சிறார்களை ஈர்த்து வருகிறது -
http://www.youtube.com/watch?v=eEGlJP4X4vc

பெர்ல் பக்கின் எழுத்து மூங்கில் திரையில் மறைந்திருந்த சீன தேசத்தை வெளியுலகுக்கு அறிமுகம் செய்தது; பல்வேறு இடர்களையும் எதிர்கொண்டு சீனாவில் வாழ்ந்தவர் நோபல் பரிசு பெற்ற திருமதி பக்.

ஸ்விஸ் நாடகாசிரியரான Friedrich Dürrenmatt எழுதிய ‘Die Panne’ (Traps) எனும் சிறுகதையின் உட்கரு மராத்திய நாடகாசிரியரான விஜய் தெண்டுல்கரின் திறமையால் மெருகூட்டப் பெற்று சிறந்த நாடகப் படைப்பாக மேடையேறியது; அது பின்னர் பதினாறு மொழிகளில் மொழிபெயர்ப்பானது. ஸத்யதேவ் துபே அதற்கு ஆங்கில வடிவம் தந்தார். BBC ஒளிபரப்பியதால் உலகப்புகழ் பெற்றது.

பகவான் வாஸுதேவனுக்கென அமைந்த புகழ்பெற்ற பாகவத மஹாபுராணத்தை முன்மாதிரியாகக் கொண்டு தேவகுமாரனான, தேவதூதரான இயேசு பிரானுக்கும் கடந்த நூற்றாண்டில் ஒரு புராணம் அமைந்தது. திரு.தேவசி 1600 ச்லோகங்களில், 33 ஸர்கம் கொண்டதாக கிறிஸ்து பாகவதத்தை எழுதினார்.

ஃபேஸ் புக்கில் 63 உறுப்பினர் கொண்ட Western Tamil Students' Association பகுதியைப் பார்க்க நேர்ந்தது. சிவனடியார்கள் போல் தமிழடியார்கள் அறுபத்து மூவரா ? அமெரிக்கரும் ஈழத்தமிழரும் இதில் உள்ளனர்.

ஹைகூ-

700 ஆண்டு பழமை வாய்ந்த ஜப்பானிய ஹைகூ கவிதை வடிவம் இன்று உலகம் முழுவதையும் ஈர்த்துள்ளது; இன்றைய அவசர யுகத்தில் மக்களுக்குப் பத்தி பத்தியாகக் கவிதை புனைய நேரம் கிடைக்காததும் இதற்கு ஒரு காரணமாகலாம். பல கவிதைகள் ஹைகூ இலக்கணத்துக்குப் பொருந்தாதவை எனும் கருத்து ஒருபுறமிருக்க, ஆண்டு தோறும் உலக அளவில் விழாக்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமிருப்பது உண்மை. இந்தியாவின் முதல் ஹைகூ கழகம் புணே நகரில் தொடங்கப் பட்டது. இந்த ஆண்டு இத்தாலியின் அஸிஸியில் அக்டோபர் மாதம் உலக ஹைகூ விழா நடைபெற உள்ளது.
Haiku journal ஹைகூ ஆர்வலர்களை இணைக்கும் பணியைச் செய்கிறது

Saturday, January 8, 2011

பகவத்கீதை இடைச்செருகலா ?

பகவத்கீதை இடைச்செருகலா ?

யுத்த பூமியில் கீதை போதிக்கப் போதிய அவகாசம் இருந்ததா ?

கண்ணனுக்கு நுட்பமான தத்துவங்கள் பேசுமளவு திறமை இருந்ததா ?

சிரமண மதக்கோட்பாடுகளுக்குப் போட்டியாக கீதை எழுதப்பட்டதா ?

இதுபோன்ற பல வினாக்கள் அவ்வப்போது எழுகின்றன.
போர் என்பது முடிவுகட்டப்பட்டு இரு அணியினரும் படை திரட்டிப் போருக்கான இடத்தையும், நாளையும் தேர்வு செய்துகொண்டு போருக்காகவே குழுமியபின் கீதா போதனைக்கு என்ன தேவை ? அதற்கான அவகாசம் எப்படி வாய்க்கும் என்று வினா
எழுப்புகின்றனர். சரிதத்தின் போக்கை கவனித்தால் நிறைய நேரம் இருந்ததாகவே தெரிகிறது.

கீதா போதனை முடிந்ததும் யுதிஷ்டிரர் கவசத்தைக் களைந்துவிட்டு நிராயுதபாணியாக உடன் பிறந்தோர் பின்தொடர எதிரிகளின் அணிக்குள் புகுந்து, குல முதல்வரான பீஷ்மரிடமும், ஆசார்யர்களிடமும், அம்மானான சல்யனிடமும் ஆசியும், போருக்கு அனுமதியும் பெறுகிறார். அங்கிருந்து வெளிக்கிளம்புமுன் ‘ இது அறப்போர்; அறத்தை மதிக்கும் மறவர்கள் இருப்பின் இதுவே கடைசி வாய்ப்பு. துர்யோதனனுக்கு உதவாமல் என்னுடன் இணைந்து கொள்ளலாம்’ என எச்சரிக்கை செய்கிறார். யுதிஷ்டிரர் யுயுத்ஸுவையும், கண்ணபிரான் கர்ணனையும் தம்முடன் இணையுமாறு அழைக்கின்றனர்.


துர்யோதனனின் தம்பியான யுயுத்ஸு முரசறைந்து கொண்டு தர்மபுத்ரருடன் இணைகிறான் (ஜகா³ம பாண்டு³புத்ராணாம் ஸேநாம் விஸ்²ராவ்ய து³ந்து³பி⁴ம்). யுயுத்ஸு த்ருதராஷ்ட்ரருக்கு ஒரு பணிப்பெண்ணிடம் பிறந்தவன் ஆவான். இவன் கௌரவ அணியில் இருந்த அதிரதர்களுள் ஒருவன். போரின் முடிவில் கௌரவர் அணியில் உயிர் பிழைத்தவன் இவன் ஒருவனே; பின்னர் யுதிஷ்டிரர் இவனை இந்த்ரப்ரஸ்தத்திற்கு அரசனாக்குகிறார்.



கீதை இடைச்செருகல் என்றால் இந்நிகழ்ச்சியும் இடைச்செருகலாக வேண்டும்; யுயுத்ஸு என்ற பாத்திரப் படைப்பே புதிய கற்பனை என்றாகும்; ஆனால் பாரதக்கதைப் போக்கும், கீதை அமைந்துள்ள விதமும் இதற்கெல்லாம் இடமளிக்கவில்லை

மஹாபாரதம் : பீஷ்ம பர்வம், 41ம் அத்யாயம்

யுதி⁴ஷ்டி²ர உவாச

ஏஹ்யேஹி ஸர்வே யோத்ஸ்யாமஸ்தவ ப்⁴ராத்ரூ«ந் அபண்டி³தாந் |
யுயுத்ஸோ வாஸுதே³வஸ்²ச வயம் ச ப்³ரூம ஸர்வஸ²: ||
வ்ரு«ணோமி த்வாம் மஹாபா³ஹோ யுத்⁴யஸ்வ மம காரணாத் |
த்வயி பிண்ட³ஸ்²ச தந்துஸ்²ச த்⁴ரு«தராஷ்ட்ரஸ்ய த்³ரு«ஸ்²யதே ||

ஸஞ்ஜய உவாச

ததோ யுயுத்ஸு: கௌரவ்ய: பரித்யஜ்ய ஸுதாம்ஸ்தவ |
ஜகா³ம பாண்டு³புத்ராணாம் ஸேநாம் விஸ்²ராவ்ய து³ந்து³பி⁴ம் ||