Saturday, October 13, 2018

இராமாயணம் - சில கருத்துகள்

இராமபிரான் முதலில் முடிவு கட்டியது பரசுராமரின் செருக்கை; இறுதியாக முடிவு கட்டியது இராவணனின் செருக்கையும், வாழ்வையும். இருவருமே பிராம்மணர்கள்.

வேட இனத்தவரான குஹனையும், சபரியையும் ராமாயணம் சிறப்பித்துச் சொல்கிறது. தொண்டிலும், அன்பிலும் உயர்ந்த குகனை 'குகப்பெருமாள்' ஆக்குகிறது வைணவம். ’சபரீமோக்ஷ ப்ரதாயக’ என்றில்லாமல் ’சபரீமோக்ஷ ஸாக்ஷிபூத’ என்கிறார் ஸ்வாமி நிகமாந்த மஹாதேசிகன். சபரிக்குக் கிடைத்த பெரும்பேற்றை ஸத்குரு தியாகையாவும் வியந்து போற்றுவார். அந்த அளவு சபரியின் தகைமை மிக உயர்ந்து விளங்குகிறது. வனவாச நியமமாக அர்க்ய - பாத்யங்களுக்குமேல் வேறு எதையும் அந்தண முனிவர்களிடத்தும் கைநீட்டிப் பெறாத அண்ணல் சபரி அளித்த கனிகளை மட்டும் ஏற்கிறார்.

இராவணன் பிறப்பைச் சங்க இலக்கியம் சொல்லவில்லை; வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம் விரிவாகச் சொல்கிறது, அதுவும் முனிவர்கள் வாயிலாக. ஸ்ரீ ராமாயணத்துக்கான மறு பெயர் ‘பௌலஸ்த்ய வதம்’ என்பதே.

ஸப்த ரிஷிகளில் ஒருவரான புலஸ்த்யரின் வழித்தோன்றல் முனிவர் விச்ரவஸ்; அவர்தம் புதல்வன் வைச்ரவணன் [குபேரன்] யக்ஷர்களுக்குத் தலைவனாகச் செல்வாக்கோடு திகழ்வதைப் பார்க்கிறான் ஸுமாலி எனும் அரக்கன். ஸுமாலி, ஸுகேசன் என்ற அரக்கனின் புதல்வன்; மால்யவானுக்குத் தம்பி. [ இந்த மால்யவானின் கடுமையான எச்சரிக்கைகளை இராவணன் அசட்டை செய்தது பின்னால் நடந்த நிகழ்ச்சி] ஸுமாலி, தன் மகளான கைகஸியிடம் முனிவர் விச்ரவஸை வலியச்சென்று வரித்து மக்கட்பேற்றை அடையுமாறு அறிவுறுத்துகிறான். அவளும் அவ்வாறே செய்கிறாள்.

முதலில் பிறந்தவன் தசக்ரீவன்- ராவணன்; பின்னர் கும்பகர்ணன், ஸூர்ப்பணகை,விபீஷணன். தவத்தால் அவர்கள் வலிமை பெறுகின்றனர். ராவணன் குபேரனின் லங்காபுரியையும் , புஷ்பக விமானத்தையும் கைப்பற்றுகிறான். ராவணன் மகளிரைப் பல இடங்களிலிருந்தும் கவர்ந்து வந்து தன் அந்தப்புரத்தில் சேர்க்கத் துணை புரிகிறது இந்த விமானம்.

இராவணன் பிறந்த ஊர் ‘பிஸ்ரக்’ [நொய்டா அருகில்] என்றே வடபுலத்தவர் இன்றும் நம்புகின்றனர்; விச்ரவ என்பதன் திரிபு ‘பிஸ்ரக்’. அங்கு அவனுக்கு ஓர் ஆலயம் அமைந்துள்ளது -
https://en.wikipedia.org/wiki/Bisrakh

இராவணன் தென்னிந்தியன் - திராவிடன் என்பதை வடபுலத்தவர் ஏற்பதில்லை; குபேரனின் இலங்கை தனக்கு வசப்பட்டபின் அரக்கச் சுற்றத்துடன் ராவணன் நிலையாக அங்கு வாழத்தலைப்பட்டதால், அவன் தென்னகம் சேர்ந்தவனோ எனும் ஐயம் ஏற்படுவது இயல்பே. புலமையும், நூலறிவும் வாய்க்கப்பெற்ற இராவணன் செய்த ’ராவண ஸம்ஹிதை’ வடபுலத்தில் புகழ் பெற்ற நூல்.

’திராவிடர் எனத் தென்னகம் சார்ந்த ஓர் இனம், அவர்களையே அரக்கராகச் சித்திரிக்கின்றனர்’ எனும் கருத்தியல் உண்மையா ?

தாடகை - ஸுபாஹு - மாரீசர்கள் வாழ்ந்ததும் வடபுலத்தில்; இலவணன் என்ற அரக்கன் வடபுலத்தின் மதுவனத்தில் வாழ்ந்ததாக இராமாயணம் கூறுகிறது. சத்ருக்னர் இவனை அழிக்கிறார். அரக்கர் பலர் வாழ்ந்தது தண்டக வனத்தில்.

ராவணன் பெற்ற வெற்றிகள் பல; தோல்வியடைந்த ஸந்தர்பங்களும் உண்டு; சமாதான உடன்படிக்கைகளும் இதில் அடக்கம். அவன் தண்டகவனத்தின் ஒரு பகுதியான ஜனஸ்தானத்தில் outpost ஒன்றை அமைக்கிறான், கர - தூடணர் தலைமையில். அது தவிரத் தென்னகத்தில் அரக்கர் எவரும் வாழ்ந்ததாக வால்மீகி சொல்லவில்லை. காவிரி - பொருநை நதி தீரங்கள் எழிலார்ந்த அமைதி தவழ்ந்த பகுதிகள். பாண்டியரின் செம்பொற் கபாடம் இராமாயண விவரிப்புக்குள்ளாகிறது. இராமபிரான் ஜனஸ்தான அரக்கரை மாய்த்தபின் [கோதாவரி தீரம்] , தேவியைத் தேடிக்கொண்டு தென்திக்கில் செல்லும்போது இடர்செய்த கபந்தனை மாய்த்தபின் தென்னகத்தில் அரக்கர் எவரையும் வதை செய்யவில்லை. அரக்கர் வதைப் படலம் பின்னால் இலங்கையில்தான் மீண்டும் தொடர்கிறது. ஆக, அரக்கர் தென்னகம் சார்ந்த திராவிடர் எனும் பரப்புரை பொருளற்ற புலம்பலாகி விடுகிறது.

தொடக்கத்திலிருந்தே இராமபிரான் ஒருவகையான power balancing நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதே இராமாயணத்தின் உட்பொதிந்த பொருள். ரஜோ குணமும் , ஆயுத வலிமையும் ஒரே இடத்தில் குவிந்தால் அரக்கத் தன்மை மிகுதியாகும். இதைச் சமன் செய்யுமுகமாகப் பெருமான் வஸிஷ்ட - விசுவாமித்ரர் தொடக்கமாக முனிவர்களிடமிருந்து அஸ்த்ர - சஸ்த்ர ப்ரயோகங்களை அறிந்து கொண்டார்; மிகுந்த வேகத்தோடு செருக்குற்றுத் திரிந்த பரசுராமரை, விவேகத்தோடு அமைதியான முறையில் அடக்கி, மீண்டும் அவரைத் தவம் புரியுமாறு செய்ததும் ஒரு சமன்பாட்டு நடவடிக்கையே.

உலக இன்பங்களைத் துய்க்க வேண்டிய இளம் பருவத்தில் எதிர்பாராதவிதமாக மிகக்கொடிய பதினான்காண்டு வனவாச தண்டனை தம்மீது திணிக்கப் பட்டபோதும், சற்றும் நிலை குலையாமல் , அதையே தமக்கு வழங்கப்பட்ட வாய்ப்பாக ஏற்றுக்கொள்கிறார் ஐயன்.

அண்ணல் வனமேகும் போதும் ஆயுதங்களோடுதான் சென்றார். சித்ரகூடத்திலிருந்து கிளம்பிய தசரத குமாரர்கள் நேராக மிகக் கொடிய, அடர்ந்த வனமான தண்டக வனத்தில் புகுந்ததும் இதே நோக்கத்தோடுதான்-
ப்ரவிஶ்ய து மஹாரண்யம்
தண்டகாரண்யம் ’ஆத்மவாந்’ |
ராமோ ததர்ஶ ’துர்தர்ஷ:’
தாபஸ ஆஶ்ரம மண்டலம் ||

தண்டகாரண்யம் செல்லும் அண்ணலுக்கு வால்மீகி 'ஆத்மவாந்’, ‘துர்தர்ஷ:’ எனும் இரண்டு அழகான, மிகப்பொருத்தமான அடைமொழிகள் தந்துள்ளார். உயிர்மேல் ஆசை கொண்டவன் தண்டகவனம் புகத்துணியமாட்டானாம்.
அங்கு தங்கிய அண்ணல், உலகியல் தொடர்பின்றி அருந்தவமியற்றும் அறவோர்க்குத் துணையாக அரக்கரை மாய்த்து, ஸத்வ குணம் பெருக வழி கோலினார். அகத்தியரிடமிருந்தும் ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டார். [அஸ்த்ர - சஸ்த்ரங்கள் அரசர்க்குரியவை; அஸ்த்ரம் - எதிரிமேல் எறிந்து தாக்கும் ஆயுதங்கள்; சஸ்த்ரம் - கையில் வைத்துக்கொண்டே போர் செய்வதற்கானவை, வாள், கதாயுதம் போன்றவை] ராவண வதமானபின் ஆற்றல் சமன்பாடு முழுமையான பின்னரே அண்ணல் அரியணை ஏறுகிறார். அரியணை பெற்றுப் பெருவலிமை தம்மிடம் சேர்ந்த பின்னரும் எதையும் துஷ்ப்ரயோகம் செய்யவில்லை இறுதிவரை.

எதிரிகளே இல்லை எனும் சூழல்; ஆற்றல் வாய்ந்த உடன்பிறந்தோர்.எல்லையில்லாத தோள்வலிமை. உறுதுணையாக சக்தி வாய்ந்த படைக்கலன்கள். உலகமே ‘ராஜாராமன்’ எனப் பலவாறாகப் போற்றி நிற்கும்போதும்,இராமபிரான் தம்மை ஒரு தேசத் தொண்டனாகவே கருதிக்கொண்டு பக்தன் செய்யும் தெய்வ உபாசனைபோல் தம் நாட்டையே தெய்வமாக உபாசித்ததாக வால்மீகி பகவான் கூறுகிறார் -
ராமோ ராஜ்யமுபாஸித்வா
ப்ரஹ்மலோகம் ப்ரயாஸ்யதி ||

சமய குரவர் இராவணன் தேவியை வவ்விய அடாத செயலைக் கண்டிக்கின்றனர்; ஆழ்வார்கள் அந்த அளவு பழித்துள்ளனரா, சந்தேகம்தான்.

********************************************************************
சமய நூல்களின் மையக் கருத்து -
சிச்ந - உதர ப்ரதானமான [இடுப்புக்குக் கீழே தொங்கும் உறுப்பையும், இடுப்புக்கு மேலுள்ள வயிற்றையும் பேணும்] போக்கை ஒருவன் கைவிட வேண்டும்.

இழிசெயலில் ஈடுபடுபவன் தேவனே ஆனாலும் அவன் பழிப்புக்குரியவன். ஆற்றல் மிக்க இந்திரனைப் புகழும் மறை ‘அஹல்யா ஜார ! கௌதம ப்ருவாண!!’ என
அவனைக் கேலி பேசுகிறது.

பெண் பித்தனாயினும் ராவணனது சிவ பக்தி போற்றுதற்குரியதாகிறது; சிவ பூஜையின் முடிவில் நந்தி - சண்டேசர்களுக்கு நிகராக ராவணனும் சிவ நிர்மால்யம் பெறும் தகுதி படைத்தவனாகிறான் -
பாண ராவண சண்டேச நந்தி ப்ருங்கிரிடாதய: |
மஹாதேவ ப்ரஸாதோSயம் ஸர்வே க்ருஹ்ணந்து சாம்பவா: ||

ஆஞ்ஜநேயரும், பீஷ்மரும் நமக்கு முன் மாதிரிகள்.
ஊர்த்வ ரேதஸ்களான மஹான்கள் பலர் செய்த போதனைகள் நம் உள்ளத்தில் தங்கியுள்ளதால்தான் உள்ளீடற்ற மேற்கத்திய மேனி மினுக்கி சமயக் கருத்துகள் நம்மைக் கவர்வதில்லை.

|| ஜய் ஸ்ரீராம் ||

Monday, March 5, 2018

"சம்பூ காவ்யம்"

"சம்பூ காவ்யம்"
இவ்வகைக் காப்பியத்தில் கவிதையும் , உரைநடையும் இணைந்து காணப்படும்; ஸாஹித்ய தர்ப்பணம் ‘கத்ய-பத்யமயம் காவ்யம் சம்பூரித்யபிதீயதே’ என இதை வரையறை செய்கிறது. இதற்கு முன்பே மஹாகவி தண்டி சம்பூவுக்கான இலக்கணம் செய்துவிட்டார்.

க்ருஷ்ண யஜுஸ் ஸம்ஹிதைகளை, அதர்வ ஸம்ஹிதையைச் சம்பூ சைலியின் ஆதி வடிவாகச் சொல்வர். த்ரிவிக்ரம பட்டரின் ‘நளசம்பூ’ , போஜ மன்னரின் ’ராமாயண சம்பூ’ காவ்யங்கள் புகழ் வாய்ந்தவை. போஜ மன்னர் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் சம்பூ இயற்றியதாகச் செவிவழிச் செய்தி. ராமாயண சம்பூவைப்போல் ‘பாரத சம்பூ’ அநந்த கவியால் செய்யப்பட்டது. அபிநவ காளிதாஸர் என்பவர் ‘பாகவத சம்பூ’ இயற்றினார். பெரும்பான்மை நூல்கள் 10ம் நூற்0 அப்புறம் தோன்றியவை.

பவுத்த - சமணரும் இவ்வகைக் காவியங்கள் செய்துள்ளனர். ‘ஜாதக மாலை’ இவ்வகை நூல். கவி ஹரிசந்த்ரர் இயற்றிய ‘ஜீவந்தர சம்பூ’ சமணம் சார்ந்தது. சீவக சிந்தாமணியும் இந்த சம்பூ காப்பியமும் ஒரே காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.ஸோமப்ரப ஸூரியின் ’யசஸ்திலக’ சம்பூவும் ஒரு சமண நூலே.

சைவ - வைணவ வைதிக சமயங்கள் சமணத்தை அழித்தொழித்தன என்பதெல்லாம் ஏற்க முடியாத மிகைக் கற்பனைகள். ஆழ்வார் - சமய குரவர் காலத்துக்குபின் சமணம் செழித்து வளர்ந்திருந்ததற்கு ஆதாரங்கள் நிறையவே உள்ளன.தமிழில் உரை நூல்கள் எழும் காலகட்டத்தில் சங்கதத்தில் சம்பூ தோன்றின எனலாம்.

கௌடிய வைணவத் துறையும் சம்பூ காவியங்கள் தந்துள்ளது. கவி கர்ணபூரரின் ‘ஆநந்த ப்ருந்தாவனம்’, ஜீவ கோஸ்வாமியின் ‘கோபால சம்பூ’ இவை பக்தி இலக்கியத்தை வளப்படுத்துகின்றன. சங்கர தீக்ஷிதர் அவர்களின் ’கங்காவதரண சம்பூ’வையும் பிற்கால நூல்களில் சேர்க்கலாம்.பல சம்பூ நூல்கள், ஆசிரியர் பெயர் தெரியவில்லை. பட்டியல் பெரிதாக உள்ளது. நாச்சியார் அரங்கனை மணந்த வரலாறு கூறும் ‘கோதா பரிணய சம்பூ’ உள்ளது.

பகவத்பாதர் அவர்களுக்கே ஐந்து சம்பூ காவ்யங்கள் என்பது சற்றே வியப்பைத் தருகிறது.

அரசாணி பாலை வேங்கடாத்வரி ஸ்வாமி செய்த ‘விச்வகுணாதர்ச சம்பூ’, அங்கதம், நையாண்டி செறிந்த நூல் என்பர். இதுவும், நீலகண்ட தீக்ஷிதர் அவர்கள் செய்த ‘நீலகண்ட விஜய சம்பூ’ காவியமும் தென்னகத்தின் புகழ் வாய்ந்த சம்பூ காவியங்கள். இரண்டின் காலமும் 17ம் நூற்0. நாயக்க மன்னர்கள் ஆண்ட காலம்.விச்வகுணாதர்ச சம்பூவுக்கும், யசஸ்திலக சம்பூவுக்கும் ஒற்றுமை காண இடமுள்ளது, இரண்டுக்குமிடையே மிகுந்த கால இடைவெளியும், பிராந்திய இடைவெளியும் இருந்த போதிலும்.

அரனாரின் லீலைகளைச் சொல்லும் வீரரஸம் பொருந்திய நீலகண்ட விஜய சம்பூ காவியத்தைக் காஞ்சி மடம் வெளியிடுங்கால், காஞ்சிப் பெரியவர்கள் ஒரு வைணவப் பேரறிஞரைச் சைவ நூலாகிய இதற்கு முன்னுரை வரையச் செய்தார்கள்; அவரும் ஒரு சிறந்த முன்னுரை வழங்கினார். அவர்தம் நாமம் ஸ்ரீவத்ஸாங்காசார்யர்; சங்கதக் கல்லூரி முதல்வராக இருந்தவர். அடியேன் இப்பெரியவருடன் உரையாடியுள்ளேன்; பழகுவதற்கு மிக இனியவர், அரிய செய்திகளைச் சொல்வார்.

18ம் நூற்0 வங்கத்தின் பாணேச்வர வித்யாலங்கார கவி ‘சித்ர சம்பூ’ எனும் காவியம் எழுதினார்; இவரே வாரன் ஹேஸ்டிங்ஸ் துரை கேட்டுக்கொண்டதால் பல தர்மசாஸ்த்ரங்களின் கருத்துகளைத் தொகுத்து ‘விவாதார்ணவ ஸேது’ எனும் ஸ்ம்ருதி நிபந்த க்ரந்தமும் செய்து கொடுத்தார். ஹிந்துச் சட்டம் அமைய இந்நூல் துணை செய்தது.

நன்னையா செய்த தெலுகு பாரதம் சம்பூ வகை சார்ந்தது. சளுக்கர் காலத்தில் கன்னட சம்பூ காவியங்கள் தோன்றின.

மைதிலீ சரண் குப்தா ஸித்தார்த்தரின் மனையாள் யசோதரையின் துறவு வாழ்க்கையைச் சொல்லும் சம்பூ நூல் செய்தவர், ஹிந்தியில்.

மாருதி விஜய சம்பூ, போசலவம்சாவளி சம்பூ, கௌரீமாயூர மாஹாத்ம்ய சம்பூ - இவற்றைத் தஞ்சை ஸரஸ்வதி மஹால் நூலகம் வெளியிட்டுள்ளது.

கொச்சி மன்னர் ராம வர்மா ’ப்ரஹ்லாத சரித சம்பூ’ செய்தார்; டாக்0 வீழிநாதன் அவர்கள் விழியமொன்றில் இம்மன்னரின் சங்கதப் புலமையை வெகுவாகப் பாராட்டியுள்ளார்; ஸ்ரீ க்ருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள் செய்த ‘ஸ்ரீ ராதிகா விலாஸ சம்பூ’ பக்திரஸமும், வர்ணனைகளும் பொருந்தியது. இவை இரண்டையும் அண்மைக் காலத்திய சம்பூ இலக்கியங்களாகச் சொல்லலாம்.

Tuesday, February 20, 2018

வான்புகழ் வள்ளுவம் வேள்விக்கு எதிரானதா?

வான்புகழ் வள்ளுவம் வேள்விக்கு எதிரானதா?

திருக்குறளின் உட்கருத்து வேள்வி மறுப்பு எனும் வாதம் இடையறாமல் சொல்லப்பட்டு வந்துள்ளது.
”அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்,
உயிர்செகுத் துண்ணாமை நன்று" எனும் குறட்பா அதற்குச் சான்றாக முன்வைக்கப்படுகிறது.
வள்ளுவர் பிரான் பெரும்பாலும் ஒரே வழிமுறையைத்தான் நூல் நெடுகிலும் கையாள்கிறார்; உயர் செயலை உயர்ந்தவற்றோடும், இழி செயல்களை மிக இழிந்தவற்றோடும் ஒப்பீடு செய்வது அவர் கையாளும் முறை. திருகலாகிய சிந்தை படைத்தோர் பொருளைச் சிதைத்துத் திரித்துத் திசை மாற்றுகின்றனர். அது திருவள்ளுவ நாயனாரின் திருவுள்ளக் கருத்துக்கு முரணானது.

பொதுவான கவிமரபும் அதுவே. ஒரு பொருளின் உயர்வைச் சொல்லும்போது மற்றோர் உயர்ந்த பொருளுடன் மட்டுமே ஒப்பீடு செய்யப்படும். ஆழ்வார் காவிரியைச் சொல்லும்போது ‘கங்கையிற் புனிதமாய காவிரி’ எனச் சொல்வதைக் காண்கிறோம்; படியில் குணத்து பரத நம்பி ஒருவனுக்கு ஆயிரம் இராமபிரானும் நிகராக முடியாது என்றார் கம்ப நாட்டாழ்வார். [’ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ’ என்றார் குகப்பெருமாள்] இதைக்கொண்டு கம்பர் இராமபிரானை நிந்திகிறார் என்று சொல்ல முடியுமா? இதே ரீதியில்தான் ஆயிரம் வேள்வி எனும் ஒப்பீடும்.
மஹாபாரதம்
‘அச்வமேதஸஹஸ்ராத் ஹி ஸத்யம் ஏகம் விசிஷ்யதே’ என்றது; ஆயிரம் அச்வமேத வேள்விகளைக் காட்டிலும் வாய்மையே மிக உயர்ந்தது எனும் கருத்தில். மிக உயர்ந்ததாக இருப்பதாலேயே வாய்மைக்கு அயமேத வேள்வி ஒப்பீடாக இங்கு அமைகிறது. மார்க்கண்டேய புராணத்திலும் இதே கருத்து வலியுறுத்தப் படுகிறது.

குறள் வேள்வியெனும் மறை வழக்கைக் கண்டிக்குமாயின் மற்றோரிடத்தில் ‘அவியுணவின் ஆன்றோர்’ என்று வேள்வியில் தரப்படும் அவியுணவை ஆதரித்து எடுத்துப்பேசத் தேவையில்லை.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன், 
உயிர்செகுத் துண்ணாமை நன்று"
இந்தக் குறள் புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தில் உள்ளது. இந்தத் திருக்குறளை வைத்துக் கொண்டு திருவள்ளுவர் அவிசொரியும் வேள்வியைக் கண்டித்தார் என்றும் அதனால் வேள்வியை மறுக்கும் அவைதிக சமணம் அல்லது பவுத்தத்தைச் சார்ந்தவர் திருவள்ளுவர் எனப் பெரிய மேதாவிகளான சீனி. வேங்கடசாமி போன்றவர்கள் சாதிப்பர்.

தெய்வப் புலவர் ஓர் அறத்தை வலியுறுத்த மற்றொரு அறத்தினொடு உறழ்ந்து கூறுவார். இங்கு அதிகாரப்பட்டது, புலால் மறுத்தல் என்னும் அறம். அது வேள்வி செயல் என்னும் அறத்தினொடு உறழ்ந்து காட்டி,இந்த அறத்தைக் காட்டிலும் இந்த அறம் உயர்ந்தது எனக் கூறியதே அன்றி வேள்வியைக் கண்டித்தது ஆகாது. வேள்வியும் ஒரு அறம், புலால் உண்ணாமையும் ஒரு அறம். இவ்விரண்டில் வேள்விகளான் வரும் பயனைக் காட்டிலும் புலால் உண்ணாமை என்னும் இவ்விரதமாகிய அறத்தினால் வரும் பயனே பெரிது என்பது இக்குறளின் கருத்தாம். வேள்வியை மறுத்தல் இக்குறளின் கருத்தன்று. பரிமேலழகரும் இவ்வாறே கூறினார்.

மேற்சுட்டிக் காட்டிய குறளைப் போன்றே அறங்களை ஒப்பிட்டுக் காட்டி அதிகாரப்பட்ட அறத்தை வலியுறுத்தும் ஏனைய குறட்பாக்களையும் ஒப்பு நோக்க வேண்டும்.-
"ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க ,
சான்றோர் பழிக்கும் வினை"
இந்தக் குறட்பா ’வினைத் தூய்மை’ எனும் அதிகாரத்தில் உள்ளது. இக்குறட்பாவில் இரண்டு பாவங்களை ஒப்பு நோக்கி இந்தப் பாவத்தைக் காட்டிலும் இந்தப் பாவம் கொடிது என வள்ளுவர் சுட்டிக் கூறுகின்றார். பெற்ற தாயின் பசியைப் போக்காதிருத்தல் பாவம்; சான்றோர் பழிக்கும் வினையைச் செய்தலும் பாவம். இவ்விரண்டினையும் ஒப்பு நோக்கும்போது தாய் பசியோடிருப்பதைக் காண்பதைக் காட்டிலும் சான்றோர் பழிக்கும் வினை செய்வது கொடிய பாவம் என்பதே கருத்து.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலினும்' என்னும் குறளில் உடன்பாட்டில் சொன்ன வலியுறுத்தலை இந்தக் குறளில் எதிர்மறையில் வலியுறுத்துகின்றார். அங்கு வேள்வியை மறுத்தார் எனப் பொருள் கொண்டால் இங்கு தாயின் பசியோடு வைத்திருத்தல் அறம் எனக் கொண்டார் எனப் பொருள்படும்.
"ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்,
நீரினும் நன்றதன் காப்பு"
இக்குறளில் உழுதொழிலின் நான்கு முக்கியச் செயல்களைத் திருவள்ளுவர் ஒப்பிட்டுப் பேசுகின்றார். ஏர் உழுதல் ஒன்று. எருவிடுதல் மற்றொன்று. இந்த இரண்டில் ஏர் உழுதலைக் காட்டிலும் எருவிடுதல் நன்று எனக் கூறினார், ஏர் உழவேண்டா, எருவிடுதல் ஒன்றே போதும் என்பது அவர்கருத்தன்று. அதே போல் களை கட்டல் ஒன்று, நீர் பாய்ச்சல் மற்றொன்று. இங்கு நீர்பாய்ச்சலே போதும் களைகளைக் களைய வேண்டுவதில்லை என்பது அவர்தம் கருத்தன்று. அதே போல் களை கட்டல் ஒன்று காப்பிடுதல் மற்றொன்று. காப்பிடுதல் இன்றியமையாதது என வலியுறுத்தினாரேயன்றிக் களை கட்டல் தேவையில்லை எனக் கூறினாரல்லர்.

அவ்வாறே, ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை பேரறம் என வலியுறுத்தினாரேயன்றி, அவிசொரிந்து வேட்டலைத் தெய்வப்புலவர் மறுத்தார் எனக் கொள்ளக் கூடாது.