Monday, March 5, 2018

"சம்பூ காவ்யம்"

"சம்பூ காவ்யம்"
இவ்வகைக் காப்பியத்தில் கவிதையும் , உரைநடையும் இணைந்து காணப்படும்; ஸாஹித்ய தர்ப்பணம் ‘கத்ய-பத்யமயம் காவ்யம் சம்பூரித்யபிதீயதே’ என இதை வரையறை செய்கிறது. இதற்கு முன்பே மஹாகவி தண்டி சம்பூவுக்கான இலக்கணம் செய்துவிட்டார்.

க்ருஷ்ண யஜுஸ் ஸம்ஹிதைகளை, அதர்வ ஸம்ஹிதையைச் சம்பூ சைலியின் ஆதி வடிவாகச் சொல்வர். த்ரிவிக்ரம பட்டரின் ‘நளசம்பூ’ , போஜ மன்னரின் ’ராமாயண சம்பூ’ காவ்யங்கள் புகழ் வாய்ந்தவை. போஜ மன்னர் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் சம்பூ இயற்றியதாகச் செவிவழிச் செய்தி. ராமாயண சம்பூவைப்போல் ‘பாரத சம்பூ’ அநந்த கவியால் செய்யப்பட்டது. அபிநவ காளிதாஸர் என்பவர் ‘பாகவத சம்பூ’ இயற்றினார். பெரும்பான்மை நூல்கள் 10ம் நூற்0 அப்புறம் தோன்றியவை.

பவுத்த - சமணரும் இவ்வகைக் காவியங்கள் செய்துள்ளனர். ‘ஜாதக மாலை’ இவ்வகை நூல். கவி ஹரிசந்த்ரர் இயற்றிய ‘ஜீவந்தர சம்பூ’ சமணம் சார்ந்தது. சீவக சிந்தாமணியும் இந்த சம்பூ காப்பியமும் ஒரே காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.ஸோமப்ரப ஸூரியின் ’யசஸ்திலக’ சம்பூவும் ஒரு சமண நூலே.

சைவ - வைணவ வைதிக சமயங்கள் சமணத்தை அழித்தொழித்தன என்பதெல்லாம் ஏற்க முடியாத மிகைக் கற்பனைகள். ஆழ்வார் - சமய குரவர் காலத்துக்குபின் சமணம் செழித்து வளர்ந்திருந்ததற்கு ஆதாரங்கள் நிறையவே உள்ளன.தமிழில் உரை நூல்கள் எழும் காலகட்டத்தில் சங்கதத்தில் சம்பூ தோன்றின எனலாம்.

கௌடிய வைணவத் துறையும் சம்பூ காவியங்கள் தந்துள்ளது. கவி கர்ணபூரரின் ‘ஆநந்த ப்ருந்தாவனம்’, ஜீவ கோஸ்வாமியின் ‘கோபால சம்பூ’ இவை பக்தி இலக்கியத்தை வளப்படுத்துகின்றன. சங்கர தீக்ஷிதர் அவர்களின் ’கங்காவதரண சம்பூ’வையும் பிற்கால நூல்களில் சேர்க்கலாம்.பல சம்பூ நூல்கள், ஆசிரியர் பெயர் தெரியவில்லை. பட்டியல் பெரிதாக உள்ளது. நாச்சியார் அரங்கனை மணந்த வரலாறு கூறும் ‘கோதா பரிணய சம்பூ’ உள்ளது.

பகவத்பாதர் அவர்களுக்கே ஐந்து சம்பூ காவ்யங்கள் என்பது சற்றே வியப்பைத் தருகிறது.

அரசாணி பாலை வேங்கடாத்வரி ஸ்வாமி செய்த ‘விச்வகுணாதர்ச சம்பூ’, அங்கதம், நையாண்டி செறிந்த நூல் என்பர். இதுவும், நீலகண்ட தீக்ஷிதர் அவர்கள் செய்த ‘நீலகண்ட விஜய சம்பூ’ காவியமும் தென்னகத்தின் புகழ் வாய்ந்த சம்பூ காவியங்கள். இரண்டின் காலமும் 17ம் நூற்0. நாயக்க மன்னர்கள் ஆண்ட காலம்.விச்வகுணாதர்ச சம்பூவுக்கும், யசஸ்திலக சம்பூவுக்கும் ஒற்றுமை காண இடமுள்ளது, இரண்டுக்குமிடையே மிகுந்த கால இடைவெளியும், பிராந்திய இடைவெளியும் இருந்த போதிலும்.

அரனாரின் லீலைகளைச் சொல்லும் வீரரஸம் பொருந்திய நீலகண்ட விஜய சம்பூ காவியத்தைக் காஞ்சி மடம் வெளியிடுங்கால், காஞ்சிப் பெரியவர்கள் ஒரு வைணவப் பேரறிஞரைச் சைவ நூலாகிய இதற்கு முன்னுரை வரையச் செய்தார்கள்; அவரும் ஒரு சிறந்த முன்னுரை வழங்கினார். அவர்தம் நாமம் ஸ்ரீவத்ஸாங்காசார்யர்; சங்கதக் கல்லூரி முதல்வராக இருந்தவர். அடியேன் இப்பெரியவருடன் உரையாடியுள்ளேன்; பழகுவதற்கு மிக இனியவர், அரிய செய்திகளைச் சொல்வார்.

18ம் நூற்0 வங்கத்தின் பாணேச்வர வித்யாலங்கார கவி ‘சித்ர சம்பூ’ எனும் காவியம் எழுதினார்; இவரே வாரன் ஹேஸ்டிங்ஸ் துரை கேட்டுக்கொண்டதால் பல தர்மசாஸ்த்ரங்களின் கருத்துகளைத் தொகுத்து ‘விவாதார்ணவ ஸேது’ எனும் ஸ்ம்ருதி நிபந்த க்ரந்தமும் செய்து கொடுத்தார். ஹிந்துச் சட்டம் அமைய இந்நூல் துணை செய்தது.

நன்னையா செய்த தெலுகு பாரதம் சம்பூ வகை சார்ந்தது. சளுக்கர் காலத்தில் கன்னட சம்பூ காவியங்கள் தோன்றின.

மைதிலீ சரண் குப்தா ஸித்தார்த்தரின் மனையாள் யசோதரையின் துறவு வாழ்க்கையைச் சொல்லும் சம்பூ நூல் செய்தவர், ஹிந்தியில்.

மாருதி விஜய சம்பூ, போசலவம்சாவளி சம்பூ, கௌரீமாயூர மாஹாத்ம்ய சம்பூ - இவற்றைத் தஞ்சை ஸரஸ்வதி மஹால் நூலகம் வெளியிட்டுள்ளது.

கொச்சி மன்னர் ராம வர்மா ’ப்ரஹ்லாத சரித சம்பூ’ செய்தார்; டாக்0 வீழிநாதன் அவர்கள் விழியமொன்றில் இம்மன்னரின் சங்கதப் புலமையை வெகுவாகப் பாராட்டியுள்ளார்; ஸ்ரீ க்ருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள் செய்த ‘ஸ்ரீ ராதிகா விலாஸ சம்பூ’ பக்திரஸமும், வர்ணனைகளும் பொருந்தியது. இவை இரண்டையும் அண்மைக் காலத்திய சம்பூ இலக்கியங்களாகச் சொல்லலாம்.

No comments: