Tuesday, February 20, 2018

வான்புகழ் வள்ளுவம் வேள்விக்கு எதிரானதா?

வான்புகழ் வள்ளுவம் வேள்விக்கு எதிரானதா?

திருக்குறளின் உட்கருத்து வேள்வி மறுப்பு எனும் வாதம் இடையறாமல் சொல்லப்பட்டு வந்துள்ளது.
”அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்,
உயிர்செகுத் துண்ணாமை நன்று" எனும் குறட்பா அதற்குச் சான்றாக முன்வைக்கப்படுகிறது.
வள்ளுவர் பிரான் பெரும்பாலும் ஒரே வழிமுறையைத்தான் நூல் நெடுகிலும் கையாள்கிறார்; உயர் செயலை உயர்ந்தவற்றோடும், இழி செயல்களை மிக இழிந்தவற்றோடும் ஒப்பீடு செய்வது அவர் கையாளும் முறை. திருகலாகிய சிந்தை படைத்தோர் பொருளைச் சிதைத்துத் திரித்துத் திசை மாற்றுகின்றனர். அது திருவள்ளுவ நாயனாரின் திருவுள்ளக் கருத்துக்கு முரணானது.

பொதுவான கவிமரபும் அதுவே. ஒரு பொருளின் உயர்வைச் சொல்லும்போது மற்றோர் உயர்ந்த பொருளுடன் மட்டுமே ஒப்பீடு செய்யப்படும். ஆழ்வார் காவிரியைச் சொல்லும்போது ‘கங்கையிற் புனிதமாய காவிரி’ எனச் சொல்வதைக் காண்கிறோம்; படியில் குணத்து பரத நம்பி ஒருவனுக்கு ஆயிரம் இராமபிரானும் நிகராக முடியாது என்றார் கம்ப நாட்டாழ்வார். [’ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ’ என்றார் குகப்பெருமாள்] இதைக்கொண்டு கம்பர் இராமபிரானை நிந்திகிறார் என்று சொல்ல முடியுமா? இதே ரீதியில்தான் ஆயிரம் வேள்வி எனும் ஒப்பீடும்.
மஹாபாரதம்
‘அச்வமேதஸஹஸ்ராத் ஹி ஸத்யம் ஏகம் விசிஷ்யதே’ என்றது; ஆயிரம் அச்வமேத வேள்விகளைக் காட்டிலும் வாய்மையே மிக உயர்ந்தது எனும் கருத்தில். மிக உயர்ந்ததாக இருப்பதாலேயே வாய்மைக்கு அயமேத வேள்வி ஒப்பீடாக இங்கு அமைகிறது. மார்க்கண்டேய புராணத்திலும் இதே கருத்து வலியுறுத்தப் படுகிறது.

குறள் வேள்வியெனும் மறை வழக்கைக் கண்டிக்குமாயின் மற்றோரிடத்தில் ‘அவியுணவின் ஆன்றோர்’ என்று வேள்வியில் தரப்படும் அவியுணவை ஆதரித்து எடுத்துப்பேசத் தேவையில்லை.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன், 
உயிர்செகுத் துண்ணாமை நன்று"
இந்தக் குறள் புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தில் உள்ளது. இந்தத் திருக்குறளை வைத்துக் கொண்டு திருவள்ளுவர் அவிசொரியும் வேள்வியைக் கண்டித்தார் என்றும் அதனால் வேள்வியை மறுக்கும் அவைதிக சமணம் அல்லது பவுத்தத்தைச் சார்ந்தவர் திருவள்ளுவர் எனப் பெரிய மேதாவிகளான சீனி. வேங்கடசாமி போன்றவர்கள் சாதிப்பர்.

தெய்வப் புலவர் ஓர் அறத்தை வலியுறுத்த மற்றொரு அறத்தினொடு உறழ்ந்து கூறுவார். இங்கு அதிகாரப்பட்டது, புலால் மறுத்தல் என்னும் அறம். அது வேள்வி செயல் என்னும் அறத்தினொடு உறழ்ந்து காட்டி,இந்த அறத்தைக் காட்டிலும் இந்த அறம் உயர்ந்தது எனக் கூறியதே அன்றி வேள்வியைக் கண்டித்தது ஆகாது. வேள்வியும் ஒரு அறம், புலால் உண்ணாமையும் ஒரு அறம். இவ்விரண்டில் வேள்விகளான் வரும் பயனைக் காட்டிலும் புலால் உண்ணாமை என்னும் இவ்விரதமாகிய அறத்தினால் வரும் பயனே பெரிது என்பது இக்குறளின் கருத்தாம். வேள்வியை மறுத்தல் இக்குறளின் கருத்தன்று. பரிமேலழகரும் இவ்வாறே கூறினார்.

மேற்சுட்டிக் காட்டிய குறளைப் போன்றே அறங்களை ஒப்பிட்டுக் காட்டி அதிகாரப்பட்ட அறத்தை வலியுறுத்தும் ஏனைய குறட்பாக்களையும் ஒப்பு நோக்க வேண்டும்.-
"ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க ,
சான்றோர் பழிக்கும் வினை"
இந்தக் குறட்பா ’வினைத் தூய்மை’ எனும் அதிகாரத்தில் உள்ளது. இக்குறட்பாவில் இரண்டு பாவங்களை ஒப்பு நோக்கி இந்தப் பாவத்தைக் காட்டிலும் இந்தப் பாவம் கொடிது என வள்ளுவர் சுட்டிக் கூறுகின்றார். பெற்ற தாயின் பசியைப் போக்காதிருத்தல் பாவம்; சான்றோர் பழிக்கும் வினையைச் செய்தலும் பாவம். இவ்விரண்டினையும் ஒப்பு நோக்கும்போது தாய் பசியோடிருப்பதைக் காண்பதைக் காட்டிலும் சான்றோர் பழிக்கும் வினை செய்வது கொடிய பாவம் என்பதே கருத்து.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலினும்' என்னும் குறளில் உடன்பாட்டில் சொன்ன வலியுறுத்தலை இந்தக் குறளில் எதிர்மறையில் வலியுறுத்துகின்றார். அங்கு வேள்வியை மறுத்தார் எனப் பொருள் கொண்டால் இங்கு தாயின் பசியோடு வைத்திருத்தல் அறம் எனக் கொண்டார் எனப் பொருள்படும்.
"ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்,
நீரினும் நன்றதன் காப்பு"
இக்குறளில் உழுதொழிலின் நான்கு முக்கியச் செயல்களைத் திருவள்ளுவர் ஒப்பிட்டுப் பேசுகின்றார். ஏர் உழுதல் ஒன்று. எருவிடுதல் மற்றொன்று. இந்த இரண்டில் ஏர் உழுதலைக் காட்டிலும் எருவிடுதல் நன்று எனக் கூறினார், ஏர் உழவேண்டா, எருவிடுதல் ஒன்றே போதும் என்பது அவர்கருத்தன்று. அதே போல் களை கட்டல் ஒன்று, நீர் பாய்ச்சல் மற்றொன்று. இங்கு நீர்பாய்ச்சலே போதும் களைகளைக் களைய வேண்டுவதில்லை என்பது அவர்தம் கருத்தன்று. அதே போல் களை கட்டல் ஒன்று காப்பிடுதல் மற்றொன்று. காப்பிடுதல் இன்றியமையாதது என வலியுறுத்தினாரேயன்றிக் களை கட்டல் தேவையில்லை எனக் கூறினாரல்லர்.

அவ்வாறே, ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை பேரறம் என வலியுறுத்தினாரேயன்றி, அவிசொரிந்து வேட்டலைத் தெய்வப்புலவர் மறுத்தார் எனக் கொள்ளக் கூடாது.