Saturday, October 13, 2018

இராமாயணம் - சில கருத்துகள்

இராமபிரான் முதலில் முடிவு கட்டியது பரசுராமரின் செருக்கை; இறுதியாக முடிவு கட்டியது இராவணனின் செருக்கையும், வாழ்வையும். இருவருமே பிராம்மணர்கள்.

வேட இனத்தவரான குஹனையும், சபரியையும் ராமாயணம் சிறப்பித்துச் சொல்கிறது. தொண்டிலும், அன்பிலும் உயர்ந்த குகனை 'குகப்பெருமாள்' ஆக்குகிறது வைணவம். ’சபரீமோக்ஷ ப்ரதாயக’ என்றில்லாமல் ’சபரீமோக்ஷ ஸாக்ஷிபூத’ என்கிறார் ஸ்வாமி நிகமாந்த மஹாதேசிகன். சபரிக்குக் கிடைத்த பெரும்பேற்றை ஸத்குரு தியாகையாவும் வியந்து போற்றுவார். அந்த அளவு சபரியின் தகைமை மிக உயர்ந்து விளங்குகிறது. வனவாச நியமமாக அர்க்ய - பாத்யங்களுக்குமேல் வேறு எதையும் அந்தண முனிவர்களிடத்தும் கைநீட்டிப் பெறாத அண்ணல் சபரி அளித்த கனிகளை மட்டும் ஏற்கிறார்.

இராவணன் பிறப்பைச் சங்க இலக்கியம் சொல்லவில்லை; வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம் விரிவாகச் சொல்கிறது, அதுவும் முனிவர்கள் வாயிலாக. ஸ்ரீ ராமாயணத்துக்கான மறு பெயர் ‘பௌலஸ்த்ய வதம்’ என்பதே.

ஸப்த ரிஷிகளில் ஒருவரான புலஸ்த்யரின் வழித்தோன்றல் முனிவர் விச்ரவஸ்; அவர்தம் புதல்வன் வைச்ரவணன் [குபேரன்] யக்ஷர்களுக்குத் தலைவனாகச் செல்வாக்கோடு திகழ்வதைப் பார்க்கிறான் ஸுமாலி எனும் அரக்கன். ஸுமாலி, ஸுகேசன் என்ற அரக்கனின் புதல்வன்; மால்யவானுக்குத் தம்பி. [ இந்த மால்யவானின் கடுமையான எச்சரிக்கைகளை இராவணன் அசட்டை செய்தது பின்னால் நடந்த நிகழ்ச்சி] ஸுமாலி, தன் மகளான கைகஸியிடம் முனிவர் விச்ரவஸை வலியச்சென்று வரித்து மக்கட்பேற்றை அடையுமாறு அறிவுறுத்துகிறான். அவளும் அவ்வாறே செய்கிறாள்.

முதலில் பிறந்தவன் தசக்ரீவன்- ராவணன்; பின்னர் கும்பகர்ணன், ஸூர்ப்பணகை,விபீஷணன். தவத்தால் அவர்கள் வலிமை பெறுகின்றனர். ராவணன் குபேரனின் லங்காபுரியையும் , புஷ்பக விமானத்தையும் கைப்பற்றுகிறான். ராவணன் மகளிரைப் பல இடங்களிலிருந்தும் கவர்ந்து வந்து தன் அந்தப்புரத்தில் சேர்க்கத் துணை புரிகிறது இந்த விமானம்.

இராவணன் பிறந்த ஊர் ‘பிஸ்ரக்’ [நொய்டா அருகில்] என்றே வடபுலத்தவர் இன்றும் நம்புகின்றனர்; விச்ரவ என்பதன் திரிபு ‘பிஸ்ரக்’. அங்கு அவனுக்கு ஓர் ஆலயம் அமைந்துள்ளது -
https://en.wikipedia.org/wiki/Bisrakh

இராவணன் தென்னிந்தியன் - திராவிடன் என்பதை வடபுலத்தவர் ஏற்பதில்லை; குபேரனின் இலங்கை தனக்கு வசப்பட்டபின் அரக்கச் சுற்றத்துடன் ராவணன் நிலையாக அங்கு வாழத்தலைப்பட்டதால், அவன் தென்னகம் சேர்ந்தவனோ எனும் ஐயம் ஏற்படுவது இயல்பே. புலமையும், நூலறிவும் வாய்க்கப்பெற்ற இராவணன் செய்த ’ராவண ஸம்ஹிதை’ வடபுலத்தில் புகழ் பெற்ற நூல்.

’திராவிடர் எனத் தென்னகம் சார்ந்த ஓர் இனம், அவர்களையே அரக்கராகச் சித்திரிக்கின்றனர்’ எனும் கருத்தியல் உண்மையா ?

தாடகை - ஸுபாஹு - மாரீசர்கள் வாழ்ந்ததும் வடபுலத்தில்; இலவணன் என்ற அரக்கன் வடபுலத்தின் மதுவனத்தில் வாழ்ந்ததாக இராமாயணம் கூறுகிறது. சத்ருக்னர் இவனை அழிக்கிறார். அரக்கர் பலர் வாழ்ந்தது தண்டக வனத்தில்.

ராவணன் பெற்ற வெற்றிகள் பல; தோல்வியடைந்த ஸந்தர்பங்களும் உண்டு; சமாதான உடன்படிக்கைகளும் இதில் அடக்கம். அவன் தண்டகவனத்தின் ஒரு பகுதியான ஜனஸ்தானத்தில் outpost ஒன்றை அமைக்கிறான், கர - தூடணர் தலைமையில். அது தவிரத் தென்னகத்தில் அரக்கர் எவரும் வாழ்ந்ததாக வால்மீகி சொல்லவில்லை. காவிரி - பொருநை நதி தீரங்கள் எழிலார்ந்த அமைதி தவழ்ந்த பகுதிகள். பாண்டியரின் செம்பொற் கபாடம் இராமாயண விவரிப்புக்குள்ளாகிறது. இராமபிரான் ஜனஸ்தான அரக்கரை மாய்த்தபின் [கோதாவரி தீரம்] , தேவியைத் தேடிக்கொண்டு தென்திக்கில் செல்லும்போது இடர்செய்த கபந்தனை மாய்த்தபின் தென்னகத்தில் அரக்கர் எவரையும் வதை செய்யவில்லை. அரக்கர் வதைப் படலம் பின்னால் இலங்கையில்தான் மீண்டும் தொடர்கிறது. ஆக, அரக்கர் தென்னகம் சார்ந்த திராவிடர் எனும் பரப்புரை பொருளற்ற புலம்பலாகி விடுகிறது.

தொடக்கத்திலிருந்தே இராமபிரான் ஒருவகையான power balancing நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதே இராமாயணத்தின் உட்பொதிந்த பொருள். ரஜோ குணமும் , ஆயுத வலிமையும் ஒரே இடத்தில் குவிந்தால் அரக்கத் தன்மை மிகுதியாகும். இதைச் சமன் செய்யுமுகமாகப் பெருமான் வஸிஷ்ட - விசுவாமித்ரர் தொடக்கமாக முனிவர்களிடமிருந்து அஸ்த்ர - சஸ்த்ர ப்ரயோகங்களை அறிந்து கொண்டார்; மிகுந்த வேகத்தோடு செருக்குற்றுத் திரிந்த பரசுராமரை, விவேகத்தோடு அமைதியான முறையில் அடக்கி, மீண்டும் அவரைத் தவம் புரியுமாறு செய்ததும் ஒரு சமன்பாட்டு நடவடிக்கையே.

உலக இன்பங்களைத் துய்க்க வேண்டிய இளம் பருவத்தில் எதிர்பாராதவிதமாக மிகக்கொடிய பதினான்காண்டு வனவாச தண்டனை தம்மீது திணிக்கப் பட்டபோதும், சற்றும் நிலை குலையாமல் , அதையே தமக்கு வழங்கப்பட்ட வாய்ப்பாக ஏற்றுக்கொள்கிறார் ஐயன்.

அண்ணல் வனமேகும் போதும் ஆயுதங்களோடுதான் சென்றார். சித்ரகூடத்திலிருந்து கிளம்பிய தசரத குமாரர்கள் நேராக மிகக் கொடிய, அடர்ந்த வனமான தண்டக வனத்தில் புகுந்ததும் இதே நோக்கத்தோடுதான்-
ப்ரவிஶ்ய து மஹாரண்யம்
தண்டகாரண்யம் ’ஆத்மவாந்’ |
ராமோ ததர்ஶ ’துர்தர்ஷ:’
தாபஸ ஆஶ்ரம மண்டலம் ||

தண்டகாரண்யம் செல்லும் அண்ணலுக்கு வால்மீகி 'ஆத்மவாந்’, ‘துர்தர்ஷ:’ எனும் இரண்டு அழகான, மிகப்பொருத்தமான அடைமொழிகள் தந்துள்ளார். உயிர்மேல் ஆசை கொண்டவன் தண்டகவனம் புகத்துணியமாட்டானாம்.
அங்கு தங்கிய அண்ணல், உலகியல் தொடர்பின்றி அருந்தவமியற்றும் அறவோர்க்குத் துணையாக அரக்கரை மாய்த்து, ஸத்வ குணம் பெருக வழி கோலினார். அகத்தியரிடமிருந்தும் ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டார். [அஸ்த்ர - சஸ்த்ரங்கள் அரசர்க்குரியவை; அஸ்த்ரம் - எதிரிமேல் எறிந்து தாக்கும் ஆயுதங்கள்; சஸ்த்ரம் - கையில் வைத்துக்கொண்டே போர் செய்வதற்கானவை, வாள், கதாயுதம் போன்றவை] ராவண வதமானபின் ஆற்றல் சமன்பாடு முழுமையான பின்னரே அண்ணல் அரியணை ஏறுகிறார். அரியணை பெற்றுப் பெருவலிமை தம்மிடம் சேர்ந்த பின்னரும் எதையும் துஷ்ப்ரயோகம் செய்யவில்லை இறுதிவரை.

எதிரிகளே இல்லை எனும் சூழல்; ஆற்றல் வாய்ந்த உடன்பிறந்தோர்.எல்லையில்லாத தோள்வலிமை. உறுதுணையாக சக்தி வாய்ந்த படைக்கலன்கள். உலகமே ‘ராஜாராமன்’ எனப் பலவாறாகப் போற்றி நிற்கும்போதும்,இராமபிரான் தம்மை ஒரு தேசத் தொண்டனாகவே கருதிக்கொண்டு பக்தன் செய்யும் தெய்வ உபாசனைபோல் தம் நாட்டையே தெய்வமாக உபாசித்ததாக வால்மீகி பகவான் கூறுகிறார் -
ராமோ ராஜ்யமுபாஸித்வா
ப்ரஹ்மலோகம் ப்ரயாஸ்யதி ||

சமய குரவர் இராவணன் தேவியை வவ்விய அடாத செயலைக் கண்டிக்கின்றனர்; ஆழ்வார்கள் அந்த அளவு பழித்துள்ளனரா, சந்தேகம்தான்.

********************************************************************
சமய நூல்களின் மையக் கருத்து -
சிச்ந - உதர ப்ரதானமான [இடுப்புக்குக் கீழே தொங்கும் உறுப்பையும், இடுப்புக்கு மேலுள்ள வயிற்றையும் பேணும்] போக்கை ஒருவன் கைவிட வேண்டும்.

இழிசெயலில் ஈடுபடுபவன் தேவனே ஆனாலும் அவன் பழிப்புக்குரியவன். ஆற்றல் மிக்க இந்திரனைப் புகழும் மறை ‘அஹல்யா ஜார ! கௌதம ப்ருவாண!!’ என
அவனைக் கேலி பேசுகிறது.

பெண் பித்தனாயினும் ராவணனது சிவ பக்தி போற்றுதற்குரியதாகிறது; சிவ பூஜையின் முடிவில் நந்தி - சண்டேசர்களுக்கு நிகராக ராவணனும் சிவ நிர்மால்யம் பெறும் தகுதி படைத்தவனாகிறான் -
பாண ராவண சண்டேச நந்தி ப்ருங்கிரிடாதய: |
மஹாதேவ ப்ரஸாதோSயம் ஸர்வே க்ருஹ்ணந்து சாம்பவா: ||

ஆஞ்ஜநேயரும், பீஷ்மரும் நமக்கு முன் மாதிரிகள்.
ஊர்த்வ ரேதஸ்களான மஹான்கள் பலர் செய்த போதனைகள் நம் உள்ளத்தில் தங்கியுள்ளதால்தான் உள்ளீடற்ற மேற்கத்திய மேனி மினுக்கி சமயக் கருத்துகள் நம்மைக் கவர்வதில்லை.

|| ஜய் ஸ்ரீராம் ||

Monday, March 5, 2018

"சம்பூ காவ்யம்"

"சம்பூ காவ்யம்"
இவ்வகைக் காப்பியத்தில் கவிதையும் , உரைநடையும் இணைந்து காணப்படும்; ஸாஹித்ய தர்ப்பணம் ‘கத்ய-பத்யமயம் காவ்யம் சம்பூரித்யபிதீயதே’ என இதை வரையறை செய்கிறது. இதற்கு முன்பே மஹாகவி தண்டி சம்பூவுக்கான இலக்கணம் செய்துவிட்டார்.

க்ருஷ்ண யஜுஸ் ஸம்ஹிதைகளை, அதர்வ ஸம்ஹிதையைச் சம்பூ சைலியின் ஆதி வடிவாகச் சொல்வர். த்ரிவிக்ரம பட்டரின் ‘நளசம்பூ’ , போஜ மன்னரின் ’ராமாயண சம்பூ’ காவ்யங்கள் புகழ் வாய்ந்தவை. போஜ மன்னர் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் சம்பூ இயற்றியதாகச் செவிவழிச் செய்தி. ராமாயண சம்பூவைப்போல் ‘பாரத சம்பூ’ அநந்த கவியால் செய்யப்பட்டது. அபிநவ காளிதாஸர் என்பவர் ‘பாகவத சம்பூ’ இயற்றினார். பெரும்பான்மை நூல்கள் 10ம் நூற்0 அப்புறம் தோன்றியவை.

பவுத்த - சமணரும் இவ்வகைக் காவியங்கள் செய்துள்ளனர். ‘ஜாதக மாலை’ இவ்வகை நூல். கவி ஹரிசந்த்ரர் இயற்றிய ‘ஜீவந்தர சம்பூ’ சமணம் சார்ந்தது. சீவக சிந்தாமணியும் இந்த சம்பூ காப்பியமும் ஒரே காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.ஸோமப்ரப ஸூரியின் ’யசஸ்திலக’ சம்பூவும் ஒரு சமண நூலே.

சைவ - வைணவ வைதிக சமயங்கள் சமணத்தை அழித்தொழித்தன என்பதெல்லாம் ஏற்க முடியாத மிகைக் கற்பனைகள். ஆழ்வார் - சமய குரவர் காலத்துக்குபின் சமணம் செழித்து வளர்ந்திருந்ததற்கு ஆதாரங்கள் நிறையவே உள்ளன.தமிழில் உரை நூல்கள் எழும் காலகட்டத்தில் சங்கதத்தில் சம்பூ தோன்றின எனலாம்.

கௌடிய வைணவத் துறையும் சம்பூ காவியங்கள் தந்துள்ளது. கவி கர்ணபூரரின் ‘ஆநந்த ப்ருந்தாவனம்’, ஜீவ கோஸ்வாமியின் ‘கோபால சம்பூ’ இவை பக்தி இலக்கியத்தை வளப்படுத்துகின்றன. சங்கர தீக்ஷிதர் அவர்களின் ’கங்காவதரண சம்பூ’வையும் பிற்கால நூல்களில் சேர்க்கலாம்.பல சம்பூ நூல்கள், ஆசிரியர் பெயர் தெரியவில்லை. பட்டியல் பெரிதாக உள்ளது. நாச்சியார் அரங்கனை மணந்த வரலாறு கூறும் ‘கோதா பரிணய சம்பூ’ உள்ளது.

பகவத்பாதர் அவர்களுக்கே ஐந்து சம்பூ காவ்யங்கள் என்பது சற்றே வியப்பைத் தருகிறது.

அரசாணி பாலை வேங்கடாத்வரி ஸ்வாமி செய்த ‘விச்வகுணாதர்ச சம்பூ’, அங்கதம், நையாண்டி செறிந்த நூல் என்பர். இதுவும், நீலகண்ட தீக்ஷிதர் அவர்கள் செய்த ‘நீலகண்ட விஜய சம்பூ’ காவியமும் தென்னகத்தின் புகழ் வாய்ந்த சம்பூ காவியங்கள். இரண்டின் காலமும் 17ம் நூற்0. நாயக்க மன்னர்கள் ஆண்ட காலம்.விச்வகுணாதர்ச சம்பூவுக்கும், யசஸ்திலக சம்பூவுக்கும் ஒற்றுமை காண இடமுள்ளது, இரண்டுக்குமிடையே மிகுந்த கால இடைவெளியும், பிராந்திய இடைவெளியும் இருந்த போதிலும்.

அரனாரின் லீலைகளைச் சொல்லும் வீரரஸம் பொருந்திய நீலகண்ட விஜய சம்பூ காவியத்தைக் காஞ்சி மடம் வெளியிடுங்கால், காஞ்சிப் பெரியவர்கள் ஒரு வைணவப் பேரறிஞரைச் சைவ நூலாகிய இதற்கு முன்னுரை வரையச் செய்தார்கள்; அவரும் ஒரு சிறந்த முன்னுரை வழங்கினார். அவர்தம் நாமம் ஸ்ரீவத்ஸாங்காசார்யர்; சங்கதக் கல்லூரி முதல்வராக இருந்தவர். அடியேன் இப்பெரியவருடன் உரையாடியுள்ளேன்; பழகுவதற்கு மிக இனியவர், அரிய செய்திகளைச் சொல்வார்.

18ம் நூற்0 வங்கத்தின் பாணேச்வர வித்யாலங்கார கவி ‘சித்ர சம்பூ’ எனும் காவியம் எழுதினார்; இவரே வாரன் ஹேஸ்டிங்ஸ் துரை கேட்டுக்கொண்டதால் பல தர்மசாஸ்த்ரங்களின் கருத்துகளைத் தொகுத்து ‘விவாதார்ணவ ஸேது’ எனும் ஸ்ம்ருதி நிபந்த க்ரந்தமும் செய்து கொடுத்தார். ஹிந்துச் சட்டம் அமைய இந்நூல் துணை செய்தது.

நன்னையா செய்த தெலுகு பாரதம் சம்பூ வகை சார்ந்தது. சளுக்கர் காலத்தில் கன்னட சம்பூ காவியங்கள் தோன்றின.

மைதிலீ சரண் குப்தா ஸித்தார்த்தரின் மனையாள் யசோதரையின் துறவு வாழ்க்கையைச் சொல்லும் சம்பூ நூல் செய்தவர், ஹிந்தியில்.

மாருதி விஜய சம்பூ, போசலவம்சாவளி சம்பூ, கௌரீமாயூர மாஹாத்ம்ய சம்பூ - இவற்றைத் தஞ்சை ஸரஸ்வதி மஹால் நூலகம் வெளியிட்டுள்ளது.

கொச்சி மன்னர் ராம வர்மா ’ப்ரஹ்லாத சரித சம்பூ’ செய்தார்; டாக்0 வீழிநாதன் அவர்கள் விழியமொன்றில் இம்மன்னரின் சங்கதப் புலமையை வெகுவாகப் பாராட்டியுள்ளார்; ஸ்ரீ க்ருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள் செய்த ‘ஸ்ரீ ராதிகா விலாஸ சம்பூ’ பக்திரஸமும், வர்ணனைகளும் பொருந்தியது. இவை இரண்டையும் அண்மைக் காலத்திய சம்பூ இலக்கியங்களாகச் சொல்லலாம்.

Tuesday, February 20, 2018

வான்புகழ் வள்ளுவம் வேள்விக்கு எதிரானதா?

வான்புகழ் வள்ளுவம் வேள்விக்கு எதிரானதா?

திருக்குறளின் உட்கருத்து வேள்வி மறுப்பு எனும் வாதம் இடையறாமல் சொல்லப்பட்டு வந்துள்ளது.
”அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்,
உயிர்செகுத் துண்ணாமை நன்று" எனும் குறட்பா அதற்குச் சான்றாக முன்வைக்கப்படுகிறது.
வள்ளுவர் பிரான் பெரும்பாலும் ஒரே வழிமுறையைத்தான் நூல் நெடுகிலும் கையாள்கிறார்; உயர் செயலை உயர்ந்தவற்றோடும், இழி செயல்களை மிக இழிந்தவற்றோடும் ஒப்பீடு செய்வது அவர் கையாளும் முறை. திருகலாகிய சிந்தை படைத்தோர் பொருளைச் சிதைத்துத் திரித்துத் திசை மாற்றுகின்றனர். அது திருவள்ளுவ நாயனாரின் திருவுள்ளக் கருத்துக்கு முரணானது.

பொதுவான கவிமரபும் அதுவே. ஒரு பொருளின் உயர்வைச் சொல்லும்போது மற்றோர் உயர்ந்த பொருளுடன் மட்டுமே ஒப்பீடு செய்யப்படும். ஆழ்வார் காவிரியைச் சொல்லும்போது ‘கங்கையிற் புனிதமாய காவிரி’ எனச் சொல்வதைக் காண்கிறோம்; படியில் குணத்து பரத நம்பி ஒருவனுக்கு ஆயிரம் இராமபிரானும் நிகராக முடியாது என்றார் கம்ப நாட்டாழ்வார். [’ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ’ என்றார் குகப்பெருமாள்] இதைக்கொண்டு கம்பர் இராமபிரானை நிந்திகிறார் என்று சொல்ல முடியுமா? இதே ரீதியில்தான் ஆயிரம் வேள்வி எனும் ஒப்பீடும்.
மஹாபாரதம்
‘அச்வமேதஸஹஸ்ராத் ஹி ஸத்யம் ஏகம் விசிஷ்யதே’ என்றது; ஆயிரம் அச்வமேத வேள்விகளைக் காட்டிலும் வாய்மையே மிக உயர்ந்தது எனும் கருத்தில். மிக உயர்ந்ததாக இருப்பதாலேயே வாய்மைக்கு அயமேத வேள்வி ஒப்பீடாக இங்கு அமைகிறது. மார்க்கண்டேய புராணத்திலும் இதே கருத்து வலியுறுத்தப் படுகிறது.

குறள் வேள்வியெனும் மறை வழக்கைக் கண்டிக்குமாயின் மற்றோரிடத்தில் ‘அவியுணவின் ஆன்றோர்’ என்று வேள்வியில் தரப்படும் அவியுணவை ஆதரித்து எடுத்துப்பேசத் தேவையில்லை.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன், 
உயிர்செகுத் துண்ணாமை நன்று"
இந்தக் குறள் புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தில் உள்ளது. இந்தத் திருக்குறளை வைத்துக் கொண்டு திருவள்ளுவர் அவிசொரியும் வேள்வியைக் கண்டித்தார் என்றும் அதனால் வேள்வியை மறுக்கும் அவைதிக சமணம் அல்லது பவுத்தத்தைச் சார்ந்தவர் திருவள்ளுவர் எனப் பெரிய மேதாவிகளான சீனி. வேங்கடசாமி போன்றவர்கள் சாதிப்பர்.

தெய்வப் புலவர் ஓர் அறத்தை வலியுறுத்த மற்றொரு அறத்தினொடு உறழ்ந்து கூறுவார். இங்கு அதிகாரப்பட்டது, புலால் மறுத்தல் என்னும் அறம். அது வேள்வி செயல் என்னும் அறத்தினொடு உறழ்ந்து காட்டி,இந்த அறத்தைக் காட்டிலும் இந்த அறம் உயர்ந்தது எனக் கூறியதே அன்றி வேள்வியைக் கண்டித்தது ஆகாது. வேள்வியும் ஒரு அறம், புலால் உண்ணாமையும் ஒரு அறம். இவ்விரண்டில் வேள்விகளான் வரும் பயனைக் காட்டிலும் புலால் உண்ணாமை என்னும் இவ்விரதமாகிய அறத்தினால் வரும் பயனே பெரிது என்பது இக்குறளின் கருத்தாம். வேள்வியை மறுத்தல் இக்குறளின் கருத்தன்று. பரிமேலழகரும் இவ்வாறே கூறினார்.

மேற்சுட்டிக் காட்டிய குறளைப் போன்றே அறங்களை ஒப்பிட்டுக் காட்டி அதிகாரப்பட்ட அறத்தை வலியுறுத்தும் ஏனைய குறட்பாக்களையும் ஒப்பு நோக்க வேண்டும்.-
"ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க ,
சான்றோர் பழிக்கும் வினை"
இந்தக் குறட்பா ’வினைத் தூய்மை’ எனும் அதிகாரத்தில் உள்ளது. இக்குறட்பாவில் இரண்டு பாவங்களை ஒப்பு நோக்கி இந்தப் பாவத்தைக் காட்டிலும் இந்தப் பாவம் கொடிது என வள்ளுவர் சுட்டிக் கூறுகின்றார். பெற்ற தாயின் பசியைப் போக்காதிருத்தல் பாவம்; சான்றோர் பழிக்கும் வினையைச் செய்தலும் பாவம். இவ்விரண்டினையும் ஒப்பு நோக்கும்போது தாய் பசியோடிருப்பதைக் காண்பதைக் காட்டிலும் சான்றோர் பழிக்கும் வினை செய்வது கொடிய பாவம் என்பதே கருத்து.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலினும்' என்னும் குறளில் உடன்பாட்டில் சொன்ன வலியுறுத்தலை இந்தக் குறளில் எதிர்மறையில் வலியுறுத்துகின்றார். அங்கு வேள்வியை மறுத்தார் எனப் பொருள் கொண்டால் இங்கு தாயின் பசியோடு வைத்திருத்தல் அறம் எனக் கொண்டார் எனப் பொருள்படும்.
"ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்,
நீரினும் நன்றதன் காப்பு"
இக்குறளில் உழுதொழிலின் நான்கு முக்கியச் செயல்களைத் திருவள்ளுவர் ஒப்பிட்டுப் பேசுகின்றார். ஏர் உழுதல் ஒன்று. எருவிடுதல் மற்றொன்று. இந்த இரண்டில் ஏர் உழுதலைக் காட்டிலும் எருவிடுதல் நன்று எனக் கூறினார், ஏர் உழவேண்டா, எருவிடுதல் ஒன்றே போதும் என்பது அவர்கருத்தன்று. அதே போல் களை கட்டல் ஒன்று, நீர் பாய்ச்சல் மற்றொன்று. இங்கு நீர்பாய்ச்சலே போதும் களைகளைக் களைய வேண்டுவதில்லை என்பது அவர்தம் கருத்தன்று. அதே போல் களை கட்டல் ஒன்று காப்பிடுதல் மற்றொன்று. காப்பிடுதல் இன்றியமையாதது என வலியுறுத்தினாரேயன்றிக் களை கட்டல் தேவையில்லை எனக் கூறினாரல்லர்.

அவ்வாறே, ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை பேரறம் என வலியுறுத்தினாரேயன்றி, அவிசொரிந்து வேட்டலைத் தெய்வப்புலவர் மறுத்தார் எனக் கொள்ளக் கூடாது.

Wednesday, May 18, 2016

வேளாங்கண்ணி

                                                 வேளாங்கண்ணி
இதை ஒரு கிரித்தவத் தலம் என்றே நம்மில் பெரும்பாலானோர் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். நாம் நினைப்பதுபோல் இது கிரித்தவத் தலமன்று, சைவத் திருத்தலம்.
‘கண்ணி’ அழகிய விழிகள் பொருந்திய மகளிரைக் குறிக்கும் சொல். ‘காமக்கண்ணியார்’ குறிஞ்சித் திணை சார்ந்த அகப்பாடல்கள் பாடிய சங்ககாலப் பெண்பாற் புலவரது பெயர்.
தேவாரப் பாக்களை ஊன்றிப்படிக்கும்போது அம்பிகையின் பெயர்கள் பல தெரியவருகின்றன.
வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் “வேலன கண்ணி” ; அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம்.
”மாலை மதியொடுநீ ரர வம்புனை வார்சடையான்
'வேலனகண்ணி'யொடும் விரும் பும்மிடம்.........”
- திருஞானசம்பந்தர்
சேல் [மீன்] போன்ற கண் அமைவதால் “சேலன கண்ணி”, வேல் போன்ற விழி இருப்பதால் “வேலன கண்ணி”. பிற்காலத்தில் வேளாங்கண்ணி எனத் திரிந்தது. வேலன கண்ணி, சேலன கண்ணி - உவமையால் அமையும் பெண்பாற் பெயர்கள்
”கருந்தடங் கண்ணி” என்னும் பெயரும் அம்மைக்கு உண்டு. ”வேலினேர்தரு கண்ணி” எனவும் தேவாரம் அம்மையைப் போற்றுகிறது. ”இருமலர்க் கண்ணி” இமவான் திருமகளாரின் மற்றோர் அழகிய பெயர். மதுரையம்பதியின் மங்காப்புகழுக்குக் காரணம் மலயத்துவசன் மகளார் அன்னை அங்கயற்கண்ணியின் ஆளுமை.
திருக்கற்குடி எனும் தலத்தில் அம்மையின் பெயர் “மையார் கண்ணி” , ”மைமேவு கண்ணி” [அஞ்ஜநாக்ஷி]; கோடியக்கரை - குழகர் ஆலயத்தில் அம்மையின் நாமம் ’மையார் தடங்கண்ணி’ ; சுந்தரர் தேவாரம். சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ஒருசேர வருகை புரிந்து வழிபட்ட மிக முக்கியமான திருத்தலம். அருணகிரிநாதரும் பாடியுள்ளார். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனில் இந்த இடம் சுட்டப்படுகிறது. இதுவும் ஒரு கடற்கரைச் சிவத்தலம்.
“வாள்நுதற்கண்ணி” அன்னையின் கடைக்கண்பார்வை வீச்சு ஸ்தாணுவாக -பட்டகட்டையாகத் தவத்தில் ஆழ்ந்திருந்த ஐயனைச் சலனமடையச் செய்தது. விளைவு ? “ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய”
[”ந சேத் ஏவம் தேவோ ந கலு குஶல: ஸ்பந்திதும் அபி”- ஸௌந்தர்ய லஹரி கூறுவதை நினைவு கூர்க]
அம்பிகைக்கு “மானெடுங்கண்ணி” என்றும் ஒரு திருநாமம். ’மான்போன்ற மருண்ட பார்வையை உடையவள்’ என்பது பொருள் -
’மானெடுங்கண்ணி’ மணிக்கதவு அடைப்ப
இறையவன் இதற்குக் காரணம் ஏது என
மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான்.....
அம்பிகையின் கயல் போன்ற விழிகளைக் காழிப்பிள்ளையார் பாடுகிறார் -
’நீலநன் மாமிடற்ற னிறைவன் சினத்தன் நெடுமா வுரித்த நிகரில்
”சேலன கண்ணி”வண்ண மொருகூ றுருக்கொள் திகழ்தேவன் மேவு பதிதான்.....’
அழகியலில் தோய்ந்த தமிழடியவர்கள் அம்மைக்கு எண்ணற்ற இனிய நாமங்களைச் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.
இன்னும் சில பெயர்கள் - காவியங்கண்ணி, நீள் நெடுங்கண்ணி, வேல்நெடுங்கண்ணி,வரி நெடுங்கண்ணி, வாளார் கண்ணி.

Inline images 1

வேளாங்கண்ணிக்கருகில் சுமார் 10கிமி தொலைவில் ‘கருங்கண்ணி’ எனும் ஊரும் அமைந்துள்ளது.
இதெல்லாம் தேவாரப் பாதிப்பன்றி வேறில்லை என உறுதிபடச் சொல்ல முடியும்.

தேவாரம் மட்டும்தான் அம்மையின் கண்ணழகைப் பலவாறாகப் போற்றுகிறது என முடிவு செய்ய வேண்டா. திருவாசகமும் போற்றியுள்ளது -
மாவடு வகிரன்ன கண்ணி பங்கா, நின் மலரடிக்கே கூவிடுவாய் ! 
                                                                                             -திருவாசகம்

சிவாலயங்கள்தோறும் ஓரிரு பதிகங்களையாவது பளிங்குப் பலகைகளில் பொறித்து வைப்பது அரசின் கடமை.
தமிழ்ச்சைவ வரலாற்றில் நாம் கருத்திற்கொள்ள வேண்டிய செய்தி ஒன்று : சமய குரவர் காலத்திற்குப்பின் எழுந்த சிவாலயங்களிலும் தேவார மூவர் அமைத்த முறையில் இறைவர் - இறைவியர்க்கு அருந்தமிழ்ப் பெயர்களே வழங்கின என்பதே அது.

கடல் சார்ந்த பகுதி என்றாலேயே கிரித்தவம் சார்ந்தது எனும் மனப்பதிவு பெரும்பாலானோர்க்கு. ஆனால் அது தவறு.

கீழ்க்கடற்கரைப் பகுதியில் சைவம் செழிப்புற்றிருந்தது. கீழைக் கடல் சார்ந்த பல ஆலயங்கள் - திருவொற்றியூர், மயிலைக் கபாலீசுவரர் ஆலயம், திருவான்மியூர் மருந்தீசுவரர் ஆலயம், புதுவை வேதபுரீசுவரர் ஆலயம், நாகபட்டினம் காயாரோஹணேசுவரர் ஆலயம், கோடியக்கரைக் குழகர் ஆலயம், வேதாரண்யம் -காரைக்கால் - புகார் ஆலயங்கள் போன்றவை முக்கியமானவை. வேளாங்கண்ணி ஆலயமும் இவற்றுள் ஒன்று. 

மீனவரான அதிபத்த நாயனார் அரனாருக்கு மீனை அர்ப்பணித்து முத்தி பெற்றார்.
திருத்தொண்டத்தொகையில்  சுந்தரமூர்த்தி நாயனார், "கடல் நாகை அதிபத்தன் அடியார்க்கும் அடியேன் " என்று பாடுகிறார். அதிபத்தர் அவதரித்த கடற்பகுதி ‘நுழைப்பாடி’ என அழைக்கப்பட்டது. இன்றைய பெயர் நம்பியார் நகர்.
http://jannalmedia.com/article.php?url=Anmikam/Temple-Festivals/Lord-sivaperumal-festival.html

மயிலையில் மட்டும் வாலீசுவரர், மல்லீசுவரர், வெள்ளீசுவரர், காரணீசுவரர், தீர்த்த பாலீசுவரர், விரூபாக்ஷீசுவரர் எனும் தலங்கள், கபாலீசுவரர் ஆலயம் தவிர. இன்னும் பேட்டைகள் தோறும் பல சிவாலயங்கள்.  இங்கு அவற்றைப் பட்டியலிடவில்லை.

திருவதிகை வீரட்டானம் - அப்பரடிகள் வரலாற்றோடு தொடர்புடையது; சமய குரவர் பாடல் பெற்ற தலம்.
சுவாமி - வீரட்டானேசுவரர்
அம்மை - பெரியநாயகி
திருச்சோபுரம் - சம்பந்தர் பாடிய கடல் தலம். கடலூர் அருகில்.
சுவாமி - சோபுரநாதர்
அம்மை - வேல்நெடுங்கண்ணி
திருச்சாய்க்காடு - காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தே அமைந்துள்ள ஒரு கடல் தலம்.
கோச்செங்கட் சோழர் செய்த மாடக்கோயில். இயற்பகை நாயனார் வழிபட்டு, முத்தி பெற்ற திருத்தலம். நாவுக்கரசரும், காழிப்பிள்ளையாரும், ஐயடிகள் காடவர்கோனும் பாடியுள்ளனர். போருக்குத் தயாராக வில்லேந்திய வேலவரை இவ்வாலயத்தில் காணலாம். எதிரிகள் தொல்லையால் பாதிப்புக்கு உள்ளானோர் முருகனை வழிபட்டுத் துயர் நீங்கப்பெறலாம்.
சுவாமி : சாயாவனேச்வரர்
நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகர மேவுசாய்க் காடே !
- திருஞானசம்பந்தர்

நாகூர் - நாகவல்லி அம்மை உடனுறை நாகநாத ஈசுவரர் கோயில் கொண்ட கடல் தலம்.நாகநாத சுவாமியால் நாகூர் எனும் பெயர். காமிகாகமத்தை ஒட்டியதாக அமைந்த மிகப் பழமையான ஆலயம் இது. நாகூர் தர்கா பின்னர் மராட்டிய மன்னர் ஆட்சிக்காலத்தில் தோன்றியது. நாகவல்லி அம்மை உடனுறை நாகநாதரே உண்மையான ‘நாகூர் ஆண்டவர்’.

திருவலம்புரம் :
சுவாமி : வலம்புரநாதர்.
அம்மை : வடுவகிர் கண்ணி.

அங்கொருதன் திருவிரலால் இறையே யூன்றி
யடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள்
வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே !

இது ஒரு கடல்தலம் என்பது அப்பரடிகளின் பாடல் வாயிலாகவே தெரிகிறது.
தற்காலத்தில் இத்தலம் ‘மேலப்பெரும்பள்ளம்’ எனும் பெயரால் அழைக்கப்படுகிறது.
புகாருக்கருகில் அமைந்த தலம். தேவார முதலிகள் மூவரும் பாடியுள்ளனர்.

கடற்கோளுக்கு முறபட்ட பழைய புகார்ப்பதியில்
”பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்,
அறு முகச் செவ்வேள் அணி திகழ் கோயிலும்..”
இருந்ததாகச் சிலம்பு கூறும்.

இன்றைய புகார்ப்பதியில் –
சுவாமி : பல்லவனேசுவரர்.

அம்மை : சவுந்தரிய நாயகி.


முருகப்பெருமான் போருக்குப் புறப்படுமுன்பாக முக்கட்பிரானை வழிபட்ட கடல் தலம் திருச்செந்தூர்; புராண ஆதாரம் உள்ளது. செந்திலம்பதியின் சிவ லிங்கங்கள் -
இராமேசுவரம் இராமபிரான் வழிபட்ட உலகப்புகழ் பெற்ற கடல் தலம்.
”மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்......”
- சம்பந்தர் பூம்பாவைப் பதிகம்
கடற்கரைத் தலங்களில் மாசி மகம் தீர்த்தவாரிக்கு இறைத் திருமேனிகளைக் கடற்கரைக்குக் கொண்டு சென்று தீர்த்தவாரி செய்விப்பது இன்றுவரை நடைபெற்று வரும் திருவிழா.

சிவனடியார்கள் பலரின் தொடர்பால் சிறப்புற்றிருந்தது கீழைக் கடற்கரை.
வாயிலார் நாயனார், எறிபத்த நாயனார், இயற்பகை நாயனார், பரவை நாச்சியார்,
காரைக்கால் அம்மையார் போன்றோர் வாழ்ந்து புனிதப்படுத்தியுள்ளனர்.

வேளாங்கண்ணிக்கு  வடக்கில் சுமார் 2கிமீ தொலைவில் இருப்பது ‘பரவை’ எனும் சிற்றூர். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் மனையாளான பரவை நாச்சியார் அவதரித்த தலம். உபமந்யு பக்த விலாஸம் அந்த அம்மையை ‘ஸாகரிகா’ எனும் பெயரில் சொல்கிறது. கடல் உள்வாங்கியதால் இத்தலம் சற்று உள்ளடங்கியதாகி விட்டது.கடற்கரையில் அமைந்திருக்கவில்லை.

இன்றைய வேளாங்கண்ணியில் ரஜதகிரீசுவரர் சிவாலயம் ஒன்று அமைந்திருப்பதும் நம்மில் பலருக்கும் தெரியாத தகவல். இது பழமையான ஆலயமா அல்லது இன்றைய கபாலீசுவரர் ஆலயம் போன்ற புத்துருவாக்கமா ? ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

                              *******************************************************************

சில நூற்றாண்டுகளுக்குமுன் கடற்கரைப் பகுதிகளில் குடியேறி அவற்றைக் கைப்பற்றிய கிரித்தவர் ஆலயங்களை அழித்தனர். சென்னை கபாலீசுவரர் ஆலயம், புதுவை வேதபுரீசுவரர் ஆலயம் - கிரித்தவச் சகிப்புத்தன்மைக்கு மிகச் சிறந்த சான்றுகள்.
புதுவையில் வாழ்ந்த துவிபாஷி ஆனந்தரங்கம் பிள்ளை அவர்கள் தம் நாட்குறிப்பில் ஆலயச் சிதைப்புக் குறித்த விவரங்கள் பதிவு செய்துள்ளார் -http://www.columbia.edu/…/meal…/pritchett/00litlinks/pillai/
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களும் இது பற்றி எழுதியுள்ளார். ஆலயச் சிலைகள் அகற்றப்பட்டன. பெருமாள் கோவிலின் படிமங்கள் புதுவைக்கருகில் வைத்திக்குப்பம் கடற்கரையில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டன. 1748ல் புதுவையின் பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன. எஞ்சியவை ஒருசில ஆலயங்களே.

வேளாங்கண்ணிப் பகுதி சைவம் செழிப்புற்றிருந்த இடம். புதையுண்ட ஐம்பொன் படிமங்கள் பல கிடைத்துள்ளன.
Inline images 2

Inline images 3

கொங்கணப் பிராந்தியத்திலும் பல ஆலயங்களை மேற்கத்தியர் அழித்தனர். 1567ல் போர்த்துகீசிய மிஷநரிகள் கோவாவில் தரைமட்டமாக்கிய ஆலயங்களின் எண்ணிக்கை 350. இந்துக்கள் துளசிச்செடி வளர்ப்பதற்குக்கூடத் தடை இருந்தது.   

திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் திருவடி பதித்த பழைய கபாலீச்சரம் அழிவுற்றதற்கான சான்றுகள் அறிய - 

Inline images 4

INCULTURATION - ஹிந்துக்கள் கலாசாரத்தைக் காப்பி அடித்து மதம் பரப்பும் முயற்சி.

காவி உடை அணிதல், ஆலய விமானங்களின் பாணியில் சர்ச் எழுப்புதல், சர்ச்சுக்கு முன்பாகக் கொடிமரம் நிறுவுதல், ’வேதாகமம்’,‘ஸுவிசேஷம்’ 'அக்னி அபிஷேகம்' , ‘ஸர்வாங்க தகன பலி’ போன்ற சங்கதச் சொற்களை வலிந்து புகுத்துதல், கொடியேற்றுதல், தேரிழுத்தல் போன்ற சடங்குகளைத் தம் சமயத்துக்குள் புகுத்தி இந்துக்களைக் கவர்ந்து மதம் பரப்பும் முயற்சியின் அங்கமாக மேரிக்குத் தமிழர் முறையில் சேலை அணிவித்து , ‘வேலன கண்ணி’ எனும் பெயர் வேளாங்கண்ணியாக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.
உமையன்னைக்கே உரிய ‘பெரிய நாயகி’ எனும் நாமத்தையும், பெரியநாயகி மாதா எனக் கிரித்தவர் மேரியினுடையதாக மாற்றிக்கொண்டு விட்டனர்.

உண்மை சுடும் . கிரித்தவர் கொதிப்படைவதில் நியாயம் இல்லை. இந்து தெய்வங்களைச் சாத்தான், பிசாசுகள் என ஒருபுறம் இகழ்ந்துகொண்டு, மறுபுறம் இந்து தெய்வப் பெயர்களைக் கவர்ந்து மேரிக்குச் சூட்டுவது எந்த விதத்தில் நியாயம் ?

ஆலயங்கள் சீரழிந்ததை ஆதாரம் காட்டி எழுதியுள்ளேன். ஆலயங்களைக் காக்கும் வலிமை இல்லாவிட்டாலும் ஐம்பொன் சிலைகளையாவது பாதுகாப்போம் என நம்மவர்கள் அவற்றை பூமிக்குள் புதைத்து வைத்த சோக நிகழ்வு பல இடங்களிலும் நடந்துள்ளது. இன்று ஆங்காங்கு அவை வெளிப்படுவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். 

வேளாங்கண்ணி தொடர்புடைய வினாக்கள் சில -
’வேளாங்கண்ணி’ கிரித்தவப் பெயரா ?
விவிலிய ஆதாரம் உள்ளதா ?
திரித்துவத்துக்குப் [Trinity] புறம்பாக மேரி எனும் பெண்ணை வழிபட விவிலிய அனுமதி உள்ளதா ?

கடலில் தத்தளித்த மாலுமிகளைக் காத்த மேரி சிலுவையில் உயிருக்குப் போராடிய தன்மகன் ஏசுவை ஏன் காக்கவில்லை ?
மேரியை வழிபடலாம் எனில் கிரித்தவரில் எல்லாப் பிரிவினரும் ஏன் வேளாங்கண்ணிக்கு வந்து வழிபடுவதில்லை ?
ஆரோக்கியத்துக்கும் வேளாங்கண்ணி எனும் பெயருக்கும் என்ன தொடர்பு ?

வேளாங்கண்ணி என்றால் ”Lourdes of the East" என்று பொருள்படுமா ?
Lourdesல் கொடியேற்றமும், தேர் பவனியும் உண்டா ? ஐரோப்பியர் மொட்டையடித்துக் கொள்வார்களா ?
லூர்து மேரியை ஆரோக்கிய மாதாவாக ஏன் வழிபடுவதில்லை ?

வேளாங்கண்ணி - யார் சூட்டிய பெயர் ?
போர்த்துகீசிய மாலுமிகள் வைத்த பெயரா?
இத்தாலியில் இருந்த போப் இட்ட பெயரா ?
பின்னால் வந்த மிஷநரிகள் சூட்டிய பெயரா ?
ஐரோப்பிய மிஷநரிகள் இதுபோல் வேறு தமிழ்ப் பெயர் சூட்டியுள்ளனரா ?

அற்புதங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இவ்வழிபாட்டுத்தலத்துக்கு 1962வரை பஸிலிகா அந்தஸ்து வழங்கப்படாததன் காரணம் என்ன ?
ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஏன் பஸிலிகா அந்தஸ்துக் கிடக்கவில்லை ?

வாரன் ஹேஸ்டிங்க்ஸ் தொடக்கமாக லார்ட் மவுண்ட்பேட்டன் வரையிலான இந்தியாவை ஏகபோகமாக ஆண்ட 40க்கும் மேற்பட்ட ஆங்கிலேய கவர்னர்களில் எத்தனை பேர் ஆரோக்கிய மாதாவை வழிபட வந்துள்ளனர் ?
இரட்சணிய யாத்திரிகம் எழுதிய கிருஷ்ண பிள்ளை அவர்கள், மாயூரம் முனிசிஃப் வேதநாயகம் பிள்ளை அவர்கள் போன்ற கிரித்தவத் தமிழ் அறிஞர்கள் வேளாங்கண்ணி apparitions குறித்து எழுதியுள்ளனரா ?
அவர்கள் வேளாங்கண்ணியில் மொட்டைபோட்டு மேரியை வழிபட்டுள்ளனரா ?
1981ல் மறைந்த மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் யாத்த ‘கிரித்தவக் கீர்த்தனைகள்’ நூலில் ஆரோக்கிய மாதாவைப் பாடியுள்ளாரா ?
போப் ஆரோக்கிய மாதாவை மண்டியிட்டு வணங்கியுள்ளாரா ?
//// Devotion to Our Lady of Good Health of Velankanni can be traced to the mid-16th century and is attributed to three miracles at sites around where the Basilica stands: the apparition of Mary and the Christ Child to a slumbering shepherd boy, the curing of a lame buttermilk vendor, and the rescue of Portuguese sailors from a violent sea storm.
These accounts are based on oral tradition and there are no written or attested records in support of them.
The Holy See has not approved these apparitions./////

///There are no historical documents or records about the apparitions of Mary at Vailankanni.///

The Holy See ஒப்புதல் அளிக்காமல் பஸிலிகா அந்தஸ்து எவ்வாறு கிடைத்தது ?
மேரியின் தோற்றங்களுக்கு ஆதாரம் இல்லாத நிலையில் இந்த சர்ச் ‘கிழக்கின் லூர்து’ ஆனது எப்படி ?
ஆடம்பரமான உருவ வழிபாட்டையும், விழாக் கொண்டாட்டங்களையும் விவிலியம் அனுமதிக்கிறதா ?
[Do not make idols or set up an image or a sacred stone for yourselves, and do not place a carved stone in your land to bow down before it. I am the LORD your God. Leviticus 26:1]
Inline images 5

Friday, September 13, 2013

பகவந்நாமம்



ஸ்ரீ பகவந் நாமாம்ருத ரஸோதயம் என்பது ஸ்ரீபகவந் நாம போதேந்திர ஸரஸ்வதி செய்த அற்புதமான நூல். முழுக்க முழுக்க பகவந் நாமத்தின் மகிமையை ஆசாரியர்கள் ரிஷிகள் முனிவர்கள் ஆகியோரின் வாக்குகளைக் கொண்டு நிர்ணயிக்கிறார் ஸ்ரீ போதேந்திரர். (இந்த நூலைச் சிறப்பாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள்).

கடவுளின் நாம இயக்கத்தின் மகிமை என்னவென்றால் எவ்வளவோ,
ஆனால் கண்ணுக்குத் தெரிந்து சொல்ல வேண்டும் என்றால், ஜாதியினால்
ஏற்படும் பிரிவினைப் பார்வையை அடித்துக் கீழே வீழ்த்துகிறது.
பக்தி என்னும் உள்ளத்தின் எழுச்சியில் மனிதர்களின் அஹங்காரம்
தீனியாகக் கேட்கும் பல திமிர்த்தனங்களை எரித்த கயிறாக ஆக்குகிறது.
கடவுளின் நாமத்தில் ஈடுபட்ட உள்ளத்தரான பக்தர்களிடத்தில் உயர்வு தாழ்வு
பார்ப்பவன் அருநரகு அடைவான் என்ற நிர்தாட்சண்யமான செய்தியை
அஞ்சாமல் அமுல்படுத்திப் பார்த்த இயக்கம் எது என்று பார்த்தால் இந்த
இறைவனின் திருநாமத்தில் உள்ளம் உருகும் ஈடுபாடு என்ற நாம ஜபம்,
கீர்த்தனம் என்ற இயக்கம்தான். ஓரிடத்தில் என்று இல்லாமல் பாரதம்
நெடுக இந்த நாம சங்கீர்த்தனம் பரவத் தொடங்கிய பிறகுதான் நம் சமுதாயத்தைப் பிடித்த கலிக்குக் கொஞ்சமாவது கிலி பிடிக்க ஆரம்பித்தது.

"நாவலிட் டுழிதருகின்றோம் நமன்தமர் தலைகள் மீதே நின் நாமம கற்ற
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்கமா நகருளானே!" என்று பாடுகிறார் ஆழ்வார்.

ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர்கள் தமது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யத்தில்
அசைக்க முடியாமல் நாம சித்தாந்தமே செய்கிறார். அவர் செய்த நாம சித்தாந்தப் பகுதியை அழகாகச் சுருக்கித் தருகிறார் தமது ஸ்ரீபகவந் நாம ரஸோதய நூலில் ஸ்ரீ போதேந்திரர்.

"வசமிழந்து நாமகீர்த்தனம் செய்தாலும் சிம்மத்தைக் கண்ட மிருகங்கள் போல்
பாபங்கள் ஓடிவிடும். நாமகீர்த்தனமே குப்பைகளை அக்னிபோல் எல்லா பாபங்களையும் பொசுக்கிவிடும். நரகத்தைத் தரும் மிக உக்கிரமான கலிகல்மஷம் ஒருதரம் செய்த நாமஸ்மரணத்தாலேயே (கடவுள் நாமத்தின் நினைவு) நாசமாகும்.”

" தெரிந்தோ தெரியாமலோ வாஸுதேவ கீர்த்தனம் செய்தால் தண்ணீரில் பட்ட உப்புப்போல் பாபம் கரைந்துவிடும். ஒருதரம் கோவிந்தநாமத்தைச் சொன்னாலும் பலபிறவிகளில் செய்த பாபங்கள் அனலில்பட்ட பஞ்சு போல் பொசுங்கிப் போகும். ”

" ஹரி” என்ற இரண்டு எழுத்தை ஒருதரம் உச்சரித்தவன் கூட மோக்ஷத்திற்காக மூட்டை கட்டிவிட்டான்.

"'நாராயண' என்ற நாமம் இருக்கிறது. வாக்கும் வசமாக இருக்கிறது. அப்படியிருந்தும் மக்கள் நரகில் விழுகின்றனரே! என்பதுதான் அதிசயம். நரகவேதனைப் படும் ஜீவனைப் பார்த்து யமன் கேட்கிறானாம், 'ஏனடா! நீ கேசவனை பூஜிக்கவில்லையா? இங்கு வந்து அவதிப்படுகிறாயே!'

"'கமல நயன! வாஸுதேவ! விஷ்ணோ! தரணீதர! அச்சுத! சங்கசக்ரபாணே!
நீரே சரணம் என்று சொல்பவர்களை விட்டுவிடு, கிட்டே அணுகாதே” என்று
யமன் தன் தூதனுக்குச் சொன்னான்.

"இதுமுதலான வசனங்களால் ச்ரத்தையும், பக்தியும் இல்லாதபோனாலும்
நாமசங்கீர்த்தனம் ஸகலபாபங்களையும் நாசம் செய்துவிடும்” என்று சொல்லப்பட்டது.

"மனத்தால் நினைத்தே வாயால் பேசுகிறான், எதை  மனத்தால் நினைப்பானோ
அதையே வாயால் பேசுகிறான்” என்ற இரண்டு வாக்கியங்களாலும் ஸ்மரணமும், தியானமும் நாமகீர்த்தனத்துள் அடங்கியது.


ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்


http://sribhagavannama.blogspot.in/2013/09/blog-post_7.html

Sunday, August 25, 2013

Vivekananda - His Call To The Nation


பாரதம் உலகுக்களித்த செய்தியை வளரும் சமுதாயம் உணர்வதற்கும், மனித வாழ்க்கையின் மகத்துவம் ஆத்ம ஞானம் அடைவதில் இருக்கிறது என்பதை உணர்வதற்கும், மேற்கு உலகம் தரும் நன்மைகளையும், கிழக்கு உலகம் தரும் நன்மைகளையும் மனிதர் தன்னம்பிக்கையுடனும், கம்பீரத்துடனும் தம் வாழ்வில் ஒருங்கிணைத்து மலரச் செய்வது எப்படி என்பதை இளைய சமுதாயம் கற்று ஊக்கம் கொள்வதற்கும் சுவாமி விவேகாநந்தரின் கருத்துகள் மகத்தான உதவியாகும். அவருடைய கருத்துகள் அடங்கிய சிறுநூல் ஒன்று நெடுநாளாக அச்சில் இருந்துகொண்டிருப்பது, இப்பொழுது மிக மிகக் குறைந்த விலையில் அத்வைத ஆசிரமம் வெளியிட்டுள்ளது.

நூல் : Vivekananda - His Call To The Nation 

விலை ரூ 4 மட்டுமே. 

இந்த நூல் அவரது கருத்துகளை பல்வேறு தலைப்புகளில் தொகுத்தது.
பாக்கட் சைஸில் 112 பக்கங்கள். ஆனால் அருமையான தொகுப்பு.

இதை அதிகமான அன்பர்கள் நூற்றுக் கணக்கில் வாங்கி இளைஞர்களுக்கு
அன்பளிப்பாகத் தருவது சிறந்த பணியாக அமையும்.

இன்னும் குறைந்த விலையில் தர வேண்டியோ அல்லது இன்னும் அதிகப் பிரதிகள் இந்த விலையிலேயே தொடர்ந்து அச்சடிக்க வேண்டியோ அல்லது இந்த மாதிரி விலையில் இன்னும் அவருடைய வேறு ஏதாவது நூல்களைக் குறைந்த விலையில் தர இயலுமாறோ யாரேனும் நன்கொடை தந்தும் வருங்காலத்திற்கு நன்மை பயக்கலாம்.

முக்கியமாக அவருடைய Lectures from Colombo to Almora, ஆங்கில நூல்,
கொலம்புவிலிருந்து அல்மோராவரை, தமிழ் நூல் இரண்டையும் ரூ 5 வீதம் விற்பனைக்குக் கொண்டுவர பணநலம் மிக்க அன்பர்கள் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைத் தொடர்பு கொண்டு ஏற்பாடு பண்ணினால் இளைய பாரதம் என்றும் வாழ்த்தும்.

இந்த நூல் 100 ரூபாய்க்கு 25 பிரதிகள் என்று குறைந்த பட்சம் எல்லோரும் வாங்கிக் குழந்தைகளுக்கு அளித்தால் எத்தனையோ நன்மை உண்டு.

நிச்சயம் நற்பணிக்கு நீங்கள் முந்துவீர்கள்.

வாழ்க பாரதம்!

http://ramakrishnamission.org/publication.htm

[கருத்து : ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்கள்]

Monday, June 3, 2013

”மன்னார்” திருக்கோவில்கள்


கண்ணபிரான் இடது திருக்கரத்தால் பசுவை அணைத்துக்கொண்டு, வலது திருக்கரத்தால் சாட்டையைச் சுழற்றும் பாவனையில் ‘வேத்ர பாணி’யாக, நின்ற திருமேனியோடு ஸேவை ஸாதிக்கும் திருக்கோலம் “மன்னார்”
என்றழைக்கப் படுகிறது.

தமிழகத்தில் இத்தகைய கோலத்தில் கோபாலன் எழுந்தருளியிருக்கும் தலங்கள் மிகவும் அபூர்வமானவை.

“ஸ்ரீ வில்லிபுத்தூர்” –

பெரியாழ்வாரும், நாச்சியாரும் அவதரித்த திருத்தலம்.
ஆண்டாள் ஆலயத்தில் மூலவர் ‘ரங்க மன்னார்’. ரங்க மன்னாரின் இரு மருங்கிலும் நாச்சியாரும், கருட பகவானும் காட்சி தருகின்றனர்.


http://www.srirajagopalaswamy.blogspot.in/