Thursday, July 3, 2008

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

இவர் வாழ்ந்தது 17 ம் நூற்றாண்டில். மன்னர் திருமலை நாயக்கரின் அரசவையில் பணி புரிந்து வந்தார். வைணவர். அரங்கனுக்கே பித்தேறி இருப்பவர். இவருக்கு ‘ அழகிய மணவாள தாசர்‘ என்றும் பெயர். தமது ஈடற்ற புலமையால் ‘திவ்ய கவி’ என்ற பட்டமும் பெற்றார்.
ஒரு நாள் அலுவலில் ஈடுபட்டிருக்குங்கால் திடீரெனத் தமது மேல்துண்டை இரு கரங்களாலும் ‘க்ருஷ்ண’ ‘க்ருஷ்ண’ என்று கூறிய படிக் கசக்கினார். அருகிலிருந்தோர் ‘புத்தி மாறாட்டம் ஏற்பட்டதோ!’ என நகையாடினர்.
'நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகையில் திரைச் சீலையில் தீப்பற்றியது. அதை அணைக்கவே இவ்வாறு செய்தோம்’ என்றார் அந்த மெய்யடியார்.
செய்தி மன்னரின் காதுகளுக்கு எட்டியது. கூர்மதி படைத்த அம்மன்னர் உடனே திருவரங்கத்திற்கு ஆளனுப்பிச் செய்தி அறிந்து வரச் செய்தார்.
சம்பவம் ஊர்ஜிதமானது.
மன்னர் ஐயங்காரைப் பணியிலிருந்து விடுத்து, அரங்க நகருக்கே அனுப்பி வைத்தார். தாஸர் அரங்கனின் ஆலயத்திலேயே தங்கிப் பரமனுக்குத் தொண்டு செய்து வாழ்வாராயினர். இவர் அருளிய நூல்கள் ‘அஷ்ட ப்ரபந்தம்’ எனும் பெயரோடு புகழ் பெற்று விளங்கி வருகிறது. புலவர் புராணத்திலும் இவர்தம் வரலாறு இடம் பெற்றுள்ளது.

2 comments:

கபீரன்பன் said...

இதே போல் தாயுமானவரின் வரலாற்றிலும் அவர் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் கோவில் திரைச்சீலை தீப்பற்றி அவரால் அணைக்கப்பட்டதாக படித்திருக்கிறேன்.
'Omni presence ' பக்தி முற்றிய நிலையில் அடியவர்களுக்கும் சித்தித்து விடுகின்றது போலும் !

Dr.N.Kannan said...

சமீபத்திய உதாரணமாக மறைந்த தவமுனி காஞ்சிப் பெரியவர் சிவன் கோயிலில் முறையிட்டு மாண்ட ஒரு வைதீக பிராமணர் பற்றிய முறையீட்டை அப்படியே அதற்குக் காரணமான நபரிடம் சொல்லி வருந்தும்படி செய்திருக்கிறார், காஞ்சியில் இருந்து கொண்டு!