ஈச்வரன், அவனது படைப்பு, அக்கூண்டினுள் அடைபட்ட ஜீவன் அனைத்தையும் தம் ஆத்ம த்ருஷ்டியால் ஒன்றாகவே உணர்ந்த ‘வாமதேவர்’ கண்டறிந்த மந்த்ரங்கள் ரிக் வேதம் நான்காம் மண்டலத்தில் காணப்படுகின்றன. இவ்வாறே பத்தாம் மண்டலத்தில் வாகம்ப்ருணியின் ஒரு ஸூக்தமும் உள்ளது.
வேத மந்த்ரங்கள் ஆத்ம த்ருஷ்டியோடு உலகனைத்தையும் பார்ப்பதையே வலியுறுத்துகின்றன. அதனால் ஒருவன் விருப்பு வெறுப்புகளின் சுவடேயற்ற ஸுதா த்ருஷ்டியைப் பெறுகிறான்.
அதன் பயனாகத் தனக்குக் கிடைப்பதை எல்லாம்- நல்லதோ, தீயதோ - இன்முகத்துடன் ப்ரஸாத புத்தியுடன் ஏற்றுக்கொள்கிறான்.
ஸத்குரு ஸ்ரீ த்யாகய்யாவின் பாடல்களில் இந்தப் பண்பட்ட மனப்பான்மையைப் பார்க்கலாம்.
ஒரு ஸூக்தம் -
‘ந ம்ருத்யுரம்ருதம் தர்ஹி ந ந
ராத்ர்யா அஹ்ந ஆஸீத் ப்ரகேத: !
ஆநீதவாதம் ஸ்வதயா ததேகம்
யஸ்மாத்தாந்யந்ந பர:கிம் சாநஸ !!
“அப்போது மரணமும் இல்லை; மரணமின்மையும் இல்லை. இரவு, பகல் என்னும் பிரிவுகளும் இல்லை. ப்ராணனின் துணையின்றி ‘ஸ்வதா’வினால் மட்டுமே உயிர் வாழ்ந்தது. அதனினும் பிரிதொன்று அங்கு காணப்படவில்லை.”
ஸ்வ + தா – தன்னைத்தான் தரித்து வாழ்தல்.
இதையே ‘ஸஹஜ அவஸ்த்தை’ என்பர்.
மறை கண்ட முனிவர்கள் இதிலேயே லயித்து வாழ்ந்தனர். தம் பார்வையில் பட்ட நீர், நெருப்பு, ஓஷதிகள், ஸூர்யன் போன்றவற்றை ஆத்ம த்ருஷ்டியுடனேயே துதித்தனர்; அவ்வாறு துதிக்கையில் அதை அதை உயர்ந்ததாகப் போற்றினர். இதில் குழப்பம் ஏதுமில்லை. ஆத்மாவைக் காட்டிலும் உயர்ந்தது ஒன்று இல்லையே!
‘யஸ்மிந்ஸர்வாணி பூதாநி ஆத்மைவாபூத்விஜாநத:!
தத்ர கோ மோஹ: க: சோக: ஏகத்வமநுபச்யத:!!’
(சுக்ல யஜுர்வேதம்)
‘ஒன்றாகக் காண்பதுவே காட்சி’ - ‘ஏகத்வம் அநுபச்யத:’
ஒரு கால் அவர்கள் காம- க்ரோதங்களுக்கு இடம் தந்ததாகக் காணப்பட்டாலும் அதனால் உலகிற்கு நன்மையே விளைந்தது.
(குறிப்பு) புனலையும், அனலையும் கண்டு வேத காலத்து நாகரிகமற்ற மக்கள் அஞ்சினர்; அவர்தம் பொருளற்ற புலம்பலே வேத ஸம்ஹிதைகள் என்று பல வலைப்பதிவு வாசஸ்பதிகள் எழுதியதைக் கண்டு, ஆன்றோர் கூறியபடி உட்கருத்தை வெளியிட்டேன்.
அனலும், புனலும் அச்சம் தரலாம்; புலர் காலைப்பொழுதும், பயிர்-பச்சைகளும் அச்சம் தருமா? உஷ:காலத்தை வர்ணிக்கும் ஸூக்தங்களும், ஓஷதிகளை வழிபடும் ரிக்குகளும் உணர்த்தும் பொருள் யாது?
உண்மையில் அச்சம் நீங்கிய அபய நிலையில் தோன்றிய, ஆன்மிகம் தோய்ந்த மொழிகளின் தொகுதியே வேத ஸம்ஹிதைகள்.
1 comment:
மிகவும் அருமையான விசயங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
Post a Comment