Wednesday, July 23, 2008

அச்சுதனும், அம்பிகையும்

நம் இதிஹாஸ - புராணங்கள், ஆலயங்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போது விஷ்ணுவிற்கும், அம்பாளுக்கும் இடையேயான பல அரிய ஒற்றுமைகள் தெரிய வருகின்றன.

ஒன்று மிக நெருங்கிய உறவு -
அவன் அண்ணன்; இவள் தங்கை.
இருவர்தம் நிறமும் ஒன்றே; இருவரும் சியாம வண்ணம் படைத்தவர்களே.
சங்கும், சக்கரமும் விஷ்ணுவிற்கும், விஷ்ணு துர்கைக்கும் பொதுவான ஆயுதங்கள். ’திகிரியக்கொற்றவை’ என்பது துர்கையைக் குறிக்கும் தமிழ்ப்பெயர். ( திகிரி - சக்கரம்;அடியார்க்கு நல்லாரின் தொல்காப்பிய உரை)
அவன் விஷ்ணு; இவள் விஷ்ணு மாயை.

அணி மணிகள் அணிவதிலும் இருவருக்கும் போட்டி.

அச்சுதனுடைய நீண்ட நெடிய நயனங்களை உபநிஷத்தும், இதிஹாஸங்களும் வாய் கொள்ளாமல் வர்ணிக்கின்றன.
ஸ்ரீ ராமாயணத்தில் ஸ்ரீ ராமன் விசாலாக்ஷன் எனும் அடைமொழியோடு சுட்டப்படுவதைப் பல இடங்களிலும் காண்கிறோம்.
தேவிக்கும் மீனாக்ஷி, காமாக்ஷி, விசாலாக்ஷி , நீலாயதாக்ஷி போன்ற பல நாமங்கள்.

சுருண்ட கூந்தல் இருவருக்குமே உண்டு.
கண்ணபிரானது திருக்குழற் கற்றையை வர்ணிக்கும் ’குடில குந்தளம்.....’என்னும் சுலோகம் ஒரு பழைய திரைப்படத்தில்
இடம் பெற்றது; ’ஸுகந்த குந்தளாம்பிகை’ என்பது அம்பிகையின் திரு நாமம்.

இருவரும் மன்னர் குலங்களில் அவதரித்தவர்களே.
ஸ்ரீ ராமன் தசரதரின் புத்ர காமேஷ்டியின் பயன் என்றால், தேவி மலயத்வஜ மன்னனின் வேள்வியில் தோன்றியவள்.
அடர்ந்த வனங்களில் மறை முனிவர்கள்தம் குடில்களில் அவதரிக்கவும் இவர்கள் தயங்கியதில்லை.
மாலவன் தத்த ஆத்ரேயனாகவும், கபில வாஸுதேவனாகவும், வாமன மூர்த்தியாகவும், பரசுராமனாகவும் தோன்றினான்.
அம்பிகை மாதங்கியாகவும், காத்யாயனியாகவும் தோன்றினாள்.

அண்ணனுக்கு ஆவணியில் ‘ஜன்மாஷ்டமி’ ;
தங்கைக்குப் புரட்டாசியில் ‘துர்காஷ்டமி’.
கண்ணனை பாலக்ருஷ்ணனாக வழிபடுவதில் சுவை அதிகம்; அம்பிகையையும் பாலையாக வழிபடும் நெறி சாக்தத்தில் நிலவி வருகிறது.
(வாலை வழிபாட்டைத் திருமந்திரத்திலும் காணலாம்)

அஸுர ஸம்ஹாரத்திலும் இவர்கள் ஈடு இணையற்றவர்கள்.

இவள் கதம்ப வன வாஸினி ; அவன் மது வனத்தில் கதம்பமர நிழலில் லீலைகள் புரிந்தவன்.

அச்சுதன் கோலோச்சுமிடம் ‘சுவேத த்வீபம்’;
அம்பிகை கொலுவிருக்குமிடம் ‘மணி த்வீபம்’.

அவன் உத்தரையின் கர்பத்திலிருந்த சிசுவை காத்தான்;
இவளோ கர்ப ரக்ஷாம்பிகையாக அனு தினமும் பல்லாயிரம் சிசுக்களைக் காத்து வருகிறாள்.

அறத்தை நிலைநாட்ட யுகம்தோறும் அவதரிப்பவன் அண்ணன்; அறம் வளர்த்த நாயகியாக ஐயாற்றில் விளங்குபவள் தங்கை.
ஒன்று ‘தர்ம ஸம்ஸ்தாபநம்’; மற்றது ‘தர்ம ஸம்வர்தநம்’.

அவன் கோபாலன் என்றால், இவள் கோமதி.
அவன் கோவிந்தன் என்றால், இவள் கோவிந்த ரூபிணி.

இவளுடைய காதணி தாடங்கம் என்றால், அவனுக்கு மகர குண்டலம். இரண்டுமே புகழ் பெற்றவை.

அவன் வடவேங்கடத்தில் தொடை மீது கரம் வைத்து, உரூ ஹஸ்தனாக நிற்கிறான்;
இவளும் தென் குமரியில் அதே கோலத்தில் காட்சி தருகிறாள்.

கடவுளர் பலருக்கும் ஸஹஸ்ர நாமங்கள் இருப்பினும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமமும், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமமும் தொன்றுதொட்டு இன்றுவரை ஆன்மிக உலகில் தனியிடம் பெற்றுத் திகழ்கின்றன.

‘மங்களாநாம் ச மங்களம்’ என மங்கலம் தருவனவற்றுள் எல்லாம் தலை சிறந்தவனாக மாலவன் போற்றப்படுகிறான்;
அம்பிகையோ ‘ஸர்வ மங்களா’.
இவர்கள் இருவரும் தீயன களைந்து உலகின் துயர் தீர்ப்பார்களாக !!

1 comment:

வேளராசி said...

அற்புதமான ஒப்பீடு.மனமார்ந்த நன்றி.