Sunday, July 6, 2008

திவ்ய கவியின் திவ்யமான கவிதை .......

”முருகனுறை குறிஞ்சித்தேன் முல்லை பாய
முல்லைநிலத் தயிர்பால்நெய் மருதத் தோட
மருதநிலக் கொழும்பாகு நெய்தற் றேங்க
வருபுனற்கா விரிசூழ்ந்த வளத்தைப் பாடக்
‘கருமணியே! மரகதமே! முத்தே! பொன்னே!
கண்மணியே! ஆருயிரே! கனியே! தேனே!’
அருள்புரிவாய்!’ என்றவர்தம் அகத்துள் வைகும்
அணியரங்க மாளிகையார் ஆடிர் ஊசல்.”

அரங்கன் ஊஞ்சல் ஆடுகிறான். காவிரி அவன் காதருகே சென்று நாட்டின் வளம் கூறுகிறாள். எப்படி?
முருகனைத் தலைவனாகக் கொண்ட குறிஞ்சி (மலை சார்ந்த) நிலத்திலிருந்து பெருகும் தேன் முல்லை நிலத்தில் பாய்கிறதாம். முல்லை (காடுசார்ந்த) நிலத்திலிருந்து ஆநிரைகளின் மிகுதியால் பாலும், நெய்யும் பெருகி மருத நிலத்தில் பாய்கிறதாம். மருத (வயல் சார்ந்த) நிலத்தில், தேன், பால், தயிர், நெய் இவற்றால் ஊட்டம் பெற்ற கரும்பிலிருந்து சாறு பிழிகிறார்கள். அதன் மிகுதி (கடல் சார்ந்த) நெய்தல் நிலத்தில் பாய்ந்து பெருகுகிறது.
அடியவர்தம் மனத்துறையும் அரங்கன் செய்தி அனைத்தையும் செவி மடுத்தவாறே ஆடுகிறான்.

இக்கவிதையைச் சற்று ஆழ்ந்து நோக்கினால் அருமையான நயம் ஒன்று புலப்படும். அந்த நயம் என்னவென்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

1 comment:

வழிப்போக்கன் said...

உள்ளுவார் உள்ளத்தை உயர்த்தும் பதிவு. படிப்பதற்கு ஆனந்தம். தொடரவேண்டும்.
அன்புடன்
எஸ். கிருஷ்ணமூர்த்தி