Thursday, July 3, 2008

சிலேடைச் சுரங்கம்

சிலேடை என்பது ‘ச்லேஷை’ எனும் வடமொழிக் கவி மரபை ஒட்டியது. 15 ம் நூற்றாண்டுக்குப்பின் தமிழ்ப் புலவர்களும் இவ்வகையைப் பின்பற்றத் தொடங்கினர்.காளமேகப் புலவரும் பல சிலேடைப் பாக்கள் புனைந்துள்ளார்.

ஏராளமான சிலேடைகளைத் தன்னகத்தே கொண்ட நூல்களின் வரிசையில் மிக முக்கியமான இடத்தைப் பிடிப்பது ‘பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்’ எழுதிய ‘திருவேங்கடத்து அந்தாதி’. இது படிப்பவர்களை பிரமிக்கச் செய்யும் அபாரமான சாதனை.

வகையாலும் ,இலக்கணத்தாலும் இரண்டு கட்டுப்பாடுகளைக் கொண்டது இந்நூல். அந்தாதி என்பதால் ஒரு செய்யுளின் கடைசிச் சீர் அடுத்த செய்யுளின் முதல் சீராக வரவேண்டும்; இது ஒரு கட்டுப்பாடு.

இலக்கண வகைப்படி கட்டளைக் கலித்துறை சார்ந்த புனைவு என்பதால், ஓர் அடி நேரசையில் தொடங்கினால் பதினாறு, நிரையசையில் தொடங்கினால் பதினேழு என ஒற்றெழுத்து நீங்கலான எழுத்துகளின் எண்ணிக்கை மாறுபடாமல் அமைய வேண்டும். இந்த இரு கட்டுப்பாடுகளைத் தவிர மூன்றாவது கட்டுப்பாட்டைத் தாமே விதித்துக் கொள்கிறார், அந்த மாபெரும் புலவர்.

ஒவ்வொரு செய்யுளிலும் ஒவ்வோர் அடியிலும் இரண்டாம் சீர் மீண்டும் மீண்டும் ஒரே வார்த்தையாக வருமாறு அமைக்கிறார். ஆனால் அந்த வார்த்தை, சிலேடை நயத்தால் இரண்டு பொருள்களை அல்ல, நான்கு பொருள்களைத் தரவல்ல நுட்பத்தோடு அமைந்துள்ளது. இதுவே ஐயங்காரின் அபார ஆற்றல்.

இப்படி நூற்றுக்கணக்கான சொற்களை நான்கு பொருள் தரும் வகையில் அவர் கையாள்கிறார். படிக்கப் படிக்க மலைக்க வைக்கும் அவரது மொழித் திறனுக்குச் சான்றாக ஒரே ஒரு பாடல் -

துன்பங் களையும் சனனங் களையும் தொலைவறுபேர்
இன்பங் களையும் கதிகளை யுந்தரு மெங்களப்பன்
தன்பங் களையும் படிமூ வரைவைத்துத் தாரணியும்
பின்பங் களையும் இழுதுமுண் டானடிப் பேர்பலவே !

பதம் பிரித்துப் பார்த்தால் –

துன்பம் களையும் சனனம் களையும் தொலைவறுபேர்
இன்பங்களையும் கதிகளையும் தரும் எங்கள் அப்பன்
தன் பங்கு அளையும்படி மூவரை வைத்துத் தாரணியும்
பின்பு அங்கு அளையும் இழுதும் உண்டான் அடிப்பேர் பலவே!

மூவரை - பிரமன்,ஈசன்,திருமகள் ஆகியோர் மூவரையும்
தன் பங்கு அளையும்படி - தன் திருமேனியில் இருக்கும்படி
வைத்து - செய்து கொண்டு
அங்கு - திரு ஆய்ப்பாடியில்
தாரணியும் - மண்ணையும்
அளையும், இழுதும் - தயிரையும் , வெண்ணெயையும்
உண்டான் - உண்ட
எங்களப்பன் - திருவேங்கடமுடையானுடைய
பேர் பலவும் - ஆயிரம் நாமங்களும்
துன்பம் களையும் ; ஜனனம் களையும் ; தொலைவறு
பேரின்பங்களையும், கதிகளையும் தரும்.

3 comments:

கபீரன்பன் said...

இலக்கியத் தேன் அபரிதமாக இனிக்கிறது.

பல சமயங்களில் தற்போதைய விஞ்ஞான வளர்ச்சி இலக்கிய ரசனையை, வளர்ச்சியை நசித்து விடுமோ என்று தோன்றுகிறது. இப்போதைய தலைமுறையில் மொழியார்வம் வெகுவாகவே குறைந்து வருவது கண்கூடு. இது உலகத்தின் எல்லா மொழி வல்லுனர்களுக்கும் உள்ள பொதுவான கவலை.

நல்ல ஒரு பதிவினை தந்ததற்கு நன்றி.

Dr.N.Kannan said...

அட்சரமாக இறைவனே இருக்கும் நுட்பத்தை அறிந்து மொழியில் திளைத்து இறை அனுபவம் பெறும் இக்கவிஞர்களை எங்ஙனம் பாராட்டுவது?

Radha said...

தேவ் ஐயா,
உங்களுக்கு இந்த பாடல் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிச் செஞ்
சடையாளை வஞ்சகர்நெஞ் சடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே.
(அபிராமி அந்தாதி)
~
ராதா